Money Heist சீசன் 5 (முதல் பாகம்) விமர்சனம்

பட மூலாதாரம், Netflix, Youtube
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானால், ரசிகர்கள் எவ்வளவு பரபரப்புடன் எதிர்பார்ப்பார்களோ அதே அளவு எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது Money Heist (La Casa De Papel) தொடரின் ஐந்தாவது சீசன். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஐந்தாவது சீசனின் முதல் பாகம்.
ஒரு சிறிய முன் கதைச் சுருக்கம்: (Spoiler alert) ஸ்பெயின் நாட்டின் கரன்சி நோட்டுகளை அச்சிடும் ராயல் மின்ட் ஆஃப் ஸ்பெயினைக் கொள்ளையடிக்க, புரொஃபசர் என்பவர் வழிகாட்டுதலில் ஒரு குழு உள்ளே நுழைகிறது. அந்தக் குழுவில் இருப்பவர்களுக்கெல்லாம் டோக்கியோ, மாஸ்கோ, பெர்லின், நைரோபி, ரியோ, டென்வர், ஹெல்சிங்கி, ஆஸ்லோ என உலகின் பெரிய நகரங்களின் பெயர்களே சூட்டப்பட்டிருக்கும்.
இந்தக் குழு பணம் அச்சிடும் இடத்தில் இருப்பவர்களை பணயக் கைதிகளாக்கி, பல்வேறு சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக கொள்ளை அடித்து முடியும் போது சீசன் 2 நிறைவடைகிறது.
சீசன் 3-ல் புதிய தொடக்கமாக பேங்க் ஆஃப் ஸ்பெயினில் களமிறங்குகிறது அதே வெற்றிகரமான கொள்ளையர்கள் கூட்டணி. பேங்க் ஆஃப் ஸ்பெயினின் ஆளுநரும் அதில் ஒருவர். கொள்ளைக் கும்பலிலிருந்து வங்கியை மீட்க ஒரு மீட்புக் குழுவை அமைக்கிறது அரசு. உள்ளே நுழைய அதிரடிப்படையும் தயார் நிலையில் இருக்கிறது. ஒரு கட்டத்தில் நிலைமை புரொஃபசரின் கையை மீறிப் போக ஆரம்பிக்கிறது.
கொள்ளைக் கும்பலின் துணிச்சல் மிக்க பெண்ணான நைரோபிக்கு துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டு, இறந்துவிடுகிறாள். பண அச்சகத்தை மீட்பதற்கான நடவடிக்கைக் குழுவில் உள்ள அலீசியா சியெர்ரா தன்னிச்சையாக சில நடவடிக்கைகளில் இறங்க, அது அரசுக்கே பெரிய நெருக்கடியாக மாறுகிறது. இதனால், அரசுத் தரப்பைச் சேர்ந்த சிலர் அவள் மீது சில குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள்.

பட மூலாதாரம், Netflix, Youtube
இந்த ஐந்தாவது பாகத்தில், (Spoiler Alert) அலீசியா சியெர்ரா புரொஃபசரை தன்னிச்சையாகவே சென்று பிடித்துவிடுகிறாள். இதனால், கிட்டத்தட்ட புரொஃபசரின் கொள்ளைத் திட்டமே தோல்வியடையும் நிலைக்கு வந்துவிடுகிறது. புரொஃபசர் எப்படி, எதற்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறார் என்பதை தெரிந்துகொள்ள அலீசியா முயல்கிறாள்.
இதற்கிடையில், பண அச்சகத்தில் நிலைமை மோசமடைகிறது. புரொஃபசரை தொடர்புகொள்ள முடியாததால், மீட்புக் குழுவைச் சேர்ந்த காண்டியாவை ஒப்படைத்துவிட்டு, தப்ப ஏதாவது செய்யலாம் என புரொஃபசரின் குழு நினைக்கிறது. ஆனால், புரொஃபசர் காவல்துறையிடம் சிக்கவில்லையென்பது விரைவிலேயே அவரது குழுவிற்கு தெரியவருகிறது.
இதற்கிடையில், அலீசியா சியெர்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட, புரொஃபசர் விடுவிக்கப்படுகிறார். இதனால், கொள்ளை திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடிவெடுக்கிறார்கள்.
இதற்கிடையில், ராணுவத்தின் அதிரடிப் படை பேங்க் ஆஃப் ஸ்பெயினில் நுழைகிறது. புரொஃபசர் குழுவுக்கும் அதிரடிப் படைக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டுகிறது. புரெஃபசர் குழுவுக்கு ஒரு பெரும் இழப்போடு, இந்த ஐந்தாவது சீசனின் முதல் பகுதி நிறைவடைகிறது.
ஏற்கனவே சொன்னதைப் போல இந்தத் தொடரின் இயக்குனர்களைப் பொறுத்தவரை, நம்பகத் தன்மையெல்லாம் ஒரு விஷயமே அல்ல. தொடரைப் பார்ப்பவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோய், தொடர்ந்து பார்க்க வேண்டும் என்பது மட்டுமே லட்சியம்.

பட மூலாதாரம், Netflix, Youtube
கடந்த நான்காவது சீசனின் முதல் சில எபிசோடுகள் மிகச் சாதாரணமாக இருந்த நிலையில், இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்தே அதகளம்தான். ஐந்து எபிசோடுகளும் ஜெட் வேகத்தில் பறக்கின்றன. முந்தைய சீசன்களில் இல்லாத அளவுக்கு ஆக்ஷன் காட்சிகள் இந்த சீசனில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், ஃப்ளாஷ் பேக் காட்சிகள் வழக்கத்தைப் போலவே ஆங்காங்கே ஸ்பீட் பிரேக்கராக செயல்படுகின்றன.
குண்டடிபட்டவர்கள், ஒன்றுமே ஆகாததைப் போல சண்டை போடும் காட்சிகள் இதிலும் தொடர்கின்றன.
முந்தைய சீசன்களைப் பார்க்காவிட்டாலும், முன்கதையைப் படித்துவிட்டு, இந்த சீசனைப் பார்க்கலாம். முன்கதை தெரியாவிட்டாலும்கூட, ஆக்ஷன் காட்சிகள் இந்த சீசனைப் பார்க்கவைக்கும்.
பிற செய்திகள்:
- விர்ஜின் கேலக்டிக் விண்வெளிப் பயணங்களுக்கு தடை: பயணத் தடத்திலிருந்து விலகியதாக புகார்
- ஆப்கானிஸ்தானில் தாலிபன் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்றிவிட்டதா? கள நிலவரம் என்ன?
- ரயிலில் உள்ளாடையுடன் திரிந்த பிகார் எம்.எல்.ஏ: பயணிகள் புகார்
- உணவு இல்லை, ஆபத்தில் 50 லட்சம் மக்கள், உடனடி உதவி தேவை - ஐநா
- சங்க இலக்கியங்களை திராவிட களஞ்சியம் என்ற பெயரில் வெளியிடத் திட்டமா? அமைச்சர் விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












