தியேட்டர்கள் VS ஓடிடி படங்கள்: தயாரிப்பாளர்களுடன் திரையரங்க உரிமையாளர்கள் மீண்டும் மோதலா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் ஓடிடி தளங்களில் நேரடியாக படங்கள் வெளியாவது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் முக்கிய முடிவுகள் எடுத்ததாக செய்திகள் வெளியானது. இது மீண்டும் திரையரங்க உரிமையாளர்கள் VS தயாரிப்பாளர்கள் என உரசலை ஏற்படுத்தி இருக்கிறதா?
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரத்துக்கு பிறகு கடந்த வாரம் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. புதுப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், ஹாலிவுட் படங்களும், ஏற்கனவே தியேட்டரில் வெளியாகி வெற்றியடைந்த சில தமிழ் திரைப்படங்களும்தான் திரையிடப்பட்டன.
கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்ட போது, சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை பல படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பும் பெற்றது. இப்படி நேரடி ஓடிடி படங்கள் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்படுவதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாயின. ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் 'லாபம்', 'தலைவி' உள்ளிட்ட பல படங்கள் திரையரங்குகளில் இந்த மாதம் திரையிடப்பட இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், 'டிக்கிலோனா', 'அனபெல் சேதுபதி' உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடியிலும், 'துக்ளக் தர்பார்' படம் நேரடியாக தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக இருக்கின்றன.
திரையரங்க உரிமையாளர்கள் முடிவு என்ன?
இந்த நிலையில், தற்போது திரையரங்க உரிமையாளர்கள் ஓடிடியில் வெளியான படங்களை மீண்டும் திரையரங்குகளில் திரையிடுவதில்லை என முடிவெடுத்துள்ளதாக செய்தி வெளியானது.
அதாவது, முன்பு ஓடிடியில் வெளியான பிறகு படங்கள் நான்கு மாதங்களுக்கு பின்பு திரையரங்குகளில் வெளியிடலாம் என ஒப்பந்தம் இருந்த நிலையில் அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்திருந்தனர்.
தற்போது அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டு, ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்குகளில் மீண்டும் திரையிடுவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் முதலில் வெளியாகி நான்கு வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியீடு எனவும், ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கான முன்னோட்டத்திற்கு (Preview Show) திரையரங்குகளில் அனுமதி இல்லை எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.

பட மூலாதாரம், Getty Images
வெளியான இந்த செய்திகள் குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியனை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு பேசினோம்.
பழைய தகவலை ஏன் புதிய செய்தி போல் போடுகிறார்கள்?
"இது குறித்து நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவே இல்லை. அதற்குள் நாங்கள் முடிவு எடுத்து விட்டோம், அறிவித்து விட்டோம் என தொலைக்காட்சிகளில் செய்தி வந்து கொண்டிருக்கிறது. ஓடிடியில் போடப்பட்ட படங்கள் திரையரங்குகளில் திரையிடப்படாது என்ற முடிவு முன்பே எடுத்ததுதான்.
அதை எதற்கு தற்போது மீண்டும் புதிய செய்தி போல போட்டு கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை. ஓடிடியில் நேரடியாக வெளியாகி வெற்றியடைந்த படங்கள் மீண்டும் தியேட்டர்களில் வெளியாகுமா என்று கேட்கிறார்கள். அதுதான் ஏற்கனவே ஓடிடியில் பார்த்து விட்டார்களே? அதை நாங்கள் மறுபடியும் தியேட்டரில் வெளியிட்டு என்ன ஆக போகிறது? அப்படியே போட்டாலும், மக்கள் யாரும் பெரிய அளவில் வர மாட்டார்கள். எங்களுக்கு அது நஷ்டம்தான்.
பணம் போட்டு படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர்கள். திரைப்படம் வெளியிடுபவர்களுக்கு ஓடிடிதான் விருப்பமானது என்றால் அதிலே அவர்கள் நேரடியாக வெளியிடட்டும். இதற்கு இடையில் எங்களை ஏன் தியேட்டரில் வெளியிட வேண்டும் என அவர்கள் வற்புறுத்த வேண்டும் என புரியவில்லை," என்றார்.
"ஓடிடி படங்களுக்கு முன்னோட்டம் இல்லை"
"ஓடிடியில் நேரடியாக வெளியாகும் படங்களுக்கு தியேட்டரில் முன்னோட்டம் கூட இல்லை என்று செய்தி வந்ததே?"
"ஒரு படத்தை எடுத்து வேறு இடத்திற்கு கொடுக்க போகிறீர்கள். அதை உங்கள் வீட்டில் திரையிட வேண்டும் என்றால் நீங்கள் ஒத்து கொள்வீர்களா? மாட்டீர்கள் தானே? ஓடிடிக்கு நேரடியாக செல்லும் படங்களுக்கான முன்னோட்டம் தியேட்டரில் திரையிடலாமா வேண்டாமா என்பது தியேட்டர் உரிமையாளர்களின் முடிவுதான். இது குறித்து எல்லாம் இன்னும் பேச்சுவார்த்தைதான் நடந்து கொண்டிருக்கிறது" என்கிறார்.
திரையரங்குகள் மறுபடி திறக்கப்பட்டு அடுத்தடுத்து பெரிய படங்கள் நேரடியாக தியேட்டரில் வெளியாக இருக்கின்றன. ஏற்கெனவே வெளியிட்ட சில படங்களுக்கும் மக்கள் மத்தியில் எப்படி வரவேற்பு இருக்கிறது என்பது குறித்தும் கேட்டோம்.
'லாபம்', 'தலைவி' என அடுத்தடுத்து படங்கள் வெளியாகும் போது மக்கள் பழையபடி நிச்சயம் வருவார்கள் எனவும் இன்று வெளியாகி இருக்கும் 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' திரைப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவும் வரவேற்பும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
என்ன சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள்?

பட மூலாதாரம், @sureshkamatchi
திரையரங்க உரிமையாளர்கள் முடிவு குறித்து வெளியான செய்தி தொடர்பாக பேச தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம், "இது ஏற்கனவே தியேட்டர் உரிமையாளர்கள் எடுத்த முடிவுதான். இது குறித்து மீண்டும் மீண்டும் புதிதாக பேச எதுவும் இல்லை. இதெல்லாம் தயாரிப்பாளர்கள் நாங்கள் ஏற்கனவே ஒத்துக் கொண்டதுதான். புதிய பேச்சுவார்த்தைக்கு இப்போதைக்கு எந்த எண்ணமும் இல்லை" என்பதோடு முடித்து கொண்டார்.
பிற செய்திகள்:
- உயரும் இந்திய ஜிடிபி: 'ஆபத்து நீங்கவில்லை' என எச்சரிக்கும் நிபுணர்கள்
- அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை
- மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?
- இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழக வழக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












