ரயிலில் உள்ளாடையுடன் திரிந்த பிகார் எம்.எல்.ஏ: பயணிகள் புகார்

இந்திய ரயில்வே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய ரயில்வே

(இன்று 04.09.2021 சனிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்து அளிக்கிறோம்.)

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சட்டான்ற உறுப்பினர் ரயில் பயணத்தின்போது உள்ளாடையுடன் திரிந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

பாட்னாவிலிருந்து டெல்லிக்கு சென்ற தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் சட்டப்பேரவை உறுப்பினர் கோபால் மண்டல் உள்ளாடையுடன் திரிந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை நடைபெற்றதாக குற்றம்சாட்டப்படுகிறது.

கோபால் மண்டல் செயலுக்கு மற்ற பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்க, வாக்குவாதம் சண்டையாக மாறியுள்ளது. பின்னர், ரயில்வே பாதுகாப்பு படையினர், பயணச்சீட்டு பரிசோதகர் ஆகியோர் தலையிட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இது குறித்து கிழக்கு மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்புத்துறைத்துறை அலுவலர் ராஜேஷ்குமார் கூறுகையில், "சட்டப்பேரவை உறுப்பினரின் செயல்பாடுகள் குறித்து சக பயணிகள் புகார் அளித்தனர். ரயில்வே பாதுகாப்பு படையினர், பயணச்சீட்டு பரிசோதகர் ஆகியோர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்" என்றார்.

தனக்கு வயிற்றுப்போக்கு இருந்ததால் உள்ளாடையுடன் இருந்ததாக மண்டல் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "நான் உள்ளாடை மட்டுமே அணிந்திருந்தேன். ரயிலில் ஏறியவுடன் எனக்கு வயிற்றுப்போக்கு ஆயிற்று. நான் பொய் சொல்லவில்லை" என்றார். ரயிலில் உள்ளாடையுடன் திரிந்த சட்டப்பேரவை உறுப்பினரின் புகைப்படம் சமூக வலைத் தளங்களில் வைரலாகிவருகிறது என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

75 மைக்ரானுக்கு குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை

பிளாஸ்டிக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிளாஸ்டிக் கழிவுகள்.

தமிழகத்தில் 75 மைக்ரானுக்கு குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த செப்டம்பர் 30 முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் "தமிழகத்தில் 75 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் கைப்பை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் 31.12.2022 முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த மேலாண்மை விதிகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. அதன்படி, 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தடை விதிக்கப்பட இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் இறந்தோருக்கு ஒரே மாதிரி இறப்பு சான்றிதழ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்திய உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய உச்ச நீதிமன்றம்

கொரோனா தொற்றால் உயிரிழந்தோருக்கு இறப்புச் சான்றிதழை ஒரே மாதிரியாக வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குங்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 03, வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்கள் கெளரவ்குமார் பன்சால், ரீபக் கன்சால் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு கடந்த ஜூன் 30-ம் தேதி தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், "கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அடுத்த 6 வாரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்குக் குறைந்தபட்ச இழப்பீடுகூட வழங்காவிட்டால், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தனது கடமையிலிருந்து தவறியதாகக் கொள்ளப்படும்" எனத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை அளித்த நீதிபதி அசோக் பூஷன் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். இந்த உத்தரவு மீது உரிய முடிவு எடுக்கவும், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்று, இழப்பீடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கவும் கூடுதலாக 4 வார கால அவகாசம் கேட்டு கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது.

இந்நிலையில் இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர் ஷா, அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஒரே மாதிரியான இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்குத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்க கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் வழங்குகிறோம்.

இது தொடர்பாக ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்ட நடவடிக்கையை எடுங்கள், இப்படியே தாமதித்தால் 3-வது அலையும் முடிந்துவிடும்.

வரும் 11-ம் தேதிக்குள் மத்திய அரசு இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். வரும் 13-ம் தேதி இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும்" என உத்தரவிட்டனர் என்று கூறுகிறது அச் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :