இந்திய சொத்துகளின் குத்தகை மூலம் ரூ. 6 லட்சம் கோடி - நிர்மலா சீதாராமனின் திட்டம் சரி வருமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய அரசுக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் சொந்தமான சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் பணமாக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் என்ன நடக்கப் போகிறது?
National Monetisation Pipeline என்ற திட்டத்தை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 23ஆம் தேதி டெல்லியில் வெளியிட்டார். அதன்படி அடுத்த 4 ஆண்டுகளில் மத்திய அரசுக்குச் சொந்தமாகவும் பொதுத் துறை நிறுவனங்கள் வசமும் உள்ள 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளன.
இதில் சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளடங்கிய போக்குவரத்துக் கட்டமைப்புகள், மின் உற்பத்தி நிலையங்கள், மின் பாதைகள், குழாய் பாதைகள், நிலங்கள், கட்டடங்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
தனியாரிடம் அளிக்கப்படவுள்ள சொத்துகளில் 66 சதவீதம் சாலைகள், ரயில்வே, மின்சாரத் துறையைச் சேர்ந்ததாக இருக்கும். மீதமுள்ள 34 சதவீதம், விமான நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள், துறைமுகங்கள் போன்றவையாக இருக்கும்.
சாலைகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் 2025ஆம் நிதியாண்டிற்குள் 1.6 லட்சம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 26,700 கி.மீ தூரமுள்ள சாலைகள் இதற்குப் பயன்படுத்தப்படும். இது, இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 22 சதவீதமாகும்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
முதல் கட்டமாக ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம், பிகார் மாநிலங்களில் உள்ள 586 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
ரயில்வே துறையில் திரட்டப்படும் நிதி எவ்வளவு?

பட மூலாதாரம், ICF
ரயில்வேயைப் பொருத்தவரை சில ரயில் நிலையங்கள், சில பாதைகள், பயணிகள் ரயில்கள், கொங்கண் ரயில்வே பிரிவு ஆகியவற்றை குத்தகைக்கு விடுவதன் மூலம் நான்கு ஆண்டுகளில் 1,52,496 கோடி ரூபாயைத் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்த நிதியாண்டில் 17,810 கோடி ரூபாய் திரட்டப்படும். அடுத்த நிதியாண்டில் 57,222 கோடி ரூபாய் திரட்டப்படும்.
மொத்தமாக 400 ரயில் நிலையங்கள், 90 பயணிகள் ரயில்கள், கொங்கண் ரயில்வேயின் 741 கி.மீ. நீளமுள்ள வழித்தடம், 15 ரயில்வே ஸ்டேடியங்கள், சில ரயில்வே குடியிருப்புகள், ரயில்வேவுக்குச் சொந்தமான 265 சேமிப்புக் கிடங்குகள், 4 மலை ரயில்கள் ஆகியவை குத்தகைக்கு விடப்படவுள்ளன. இப்படி குத்தகைக்கு விடப்படும் மலை ரயிலில் நீலகிரி மலை ரயிலும் அடங்கும்.
விமான போக்குவரத்துத் துறையைப் பொருத்தவரை, இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் உள்ள 25 விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும். இதன் மூலம் 20,782 கோடி திரட்டப்படும்.
விமான நிலைய தனியார்மயம்
இதுதவிர, மும்பை,டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு போன்ற ஏற்கெனவே தனியார்மயமாக்கப்பட்ட விமான நிலையங்களில் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு உள்ள பங்குகள் விற்பனை செய்யப்படும். மும்பை, டெல்லி விமான நிலையங்களில் 26 சதவீத பங்குகளும் ஹைதராபாத், பெங்களூரு விமான நிலையங்களில் 13 சதவீத பங்குகளும் தற்போது இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு உள்ளன.
மொத்தமாகப் பார்த்தால், இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் உள்ள சொத்துகளில் 18 சதவீதம் தற்போது விற்கப்படுகிறது. முதல் கட்டமாக, திருச்சி விமான நிலையம் 2022லும் கோயம்புத்தூர், மதுரை விமான நிலையங்கள் 2023லும் சென்னை விமான நிலையம் 2024லும் தனியாருக்கு விடப்படும்.
அதேபோல மின்துறையைப் பொருத்தவரை, 2025க்குள் 45,200 கோடி ரூபாயைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது. இந்திய பவர் கிரிட் நிறுவனத்துக்கு சொந்தமான மின்தொடரமைப்புச் சொத்துகளில் 400 கிலோ வாட்டுக்கு மேம்பட்ட திறன் கொண்ட மின்னுற்பத்தி சொத்துகள் தனியார்மயமாக்கப்படும். ஒட்டுமொத்தமாக 28,608 சர்க்யூட் கிலோ மீட்டர் நீளமுள்ள மின் தொடரமைப்பு தனியார்மயமாக்கப்படும்.
சுரங்கங்களைப் பொருத்தவரை, 28,747 கோடி ரூபாய் மதிப்புள்ள 160 நிலக்கரி சுரங்கங்கள் 2025ஆம் ஆண்டுக்குள் தனியாருக்கு விடப்படும். தொலைதொடர்புத் துறையைப் பொருத்தவரை 2024ஆம் ஆண்டிற்குள் 35,100 கோடி ரூபாயைத் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாரத் நெட் திட்டத்தின் கீழ் போடப்பட்ட 2.86 லட்சம் கி.மீ நீளமுள்ள ஆப்டிக் ஃபைபர் கேபிள்களும் இதில் அடங்கும்.
இதேபோல பிஎஸ்என்எல்லுக்குச் சொந்தமான 13,567 செல்பேசி கோபுரங்களும், எம்டிஎன்எல்லுக்குச் சொந்தமாந 1,350 செல்பேசி கோபுரங்களும் தனியார்மயமாக்கப்படவுள்ளன. இதன் மூலம் 8,800 கோடி ரூபாய் திரட்டப்படும். ஒட்டுமொத்தமாக இந்திய அரசு திரட்ட நினைத்திருக்கும் 6 லட்சம் கோடி ரூபாயில் 6 சதவீதம் தொலைதொடர்புத் துறையில் இருந்து திரட்டப்படும்.
கப்பல் போக்குவரத்துத்துறை தனியார்மயம்

பட மூலாதாரம், Reuters
கப்பல் போக்குவரத்துத் துறையைப் பொருத்தவரை அடுத்த நான்கு ஆண்டுகளில் 12,828 கோடி ரூபாய் திரட்டப்படும். இதற்காக இந்தியாவில் உள்ள 12 மிகப் பெரிய துறைமுகங்களில் 9 துறைமுகங்கள் தனியார்மயமாக்கப்படும்.
இந்திய உணவுக் கழகம், இந்திய சேமிப்புக்கிடங்குக் கழகங்களுக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகளைத் தனியார்மயமாக்குவதன் மூலம் 28,900 கோடி ரூபாய் திரட்டப்படும்.
இவை தவிர,டெல்லியில் உள்ள பல குடியிருப்புகள், எட்டு ஐடிடிசி ஹோட்டல்கள் ஆகியவற்றையும் குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 15,000 கோடி ரூபாய் திரட்டப்படும். புதுச்சேரியில் உள்ள ஹோட்டல் பாண்டிச்சேரி, புவனேஸ்வரில் உள்ள ஹோட்டல் கலிங்கா, ராஞ்சியில் உள்ள ஹோட்டல் ராஞ்சி, பூரியில் உள்ள ஹோட்டல் நிலாச்சல், ரூப்நகரில் உள்ள ஹோட்டல் அனந்த்பூர் சாஹிப், புது டெல்லியில் உள்ள ஹோட்டல் சாம்ராட், ஹோட்டல் அசோக், ஜம்முவில் உள்ள ஹோட்டல் ஜம்மு அசோக் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் தனியார்மயமாக்கப்படும்.
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவாஹர் லால் நேரு விளையாட்டு அரங்கம் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் ஒரு தேசிய விளையாட்டு அரங்கமும் பிராந்திய விளையாட்டு அரங்கங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு தனியார்மயமாக்கப்படும். இதன் மூலம் 11,450 கோடி ரூபாய் திரட்டப்படும்.
குத்தகைக்குவிட என்ன காரணம்?
முக்கியமான காரணம், அரசின் வருவாய் மிகவும் குறைந்து போயிருப்பது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம், கொரானாவின் தாக்கத்தால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து போயிருப்பது போன்றவற்றால் நாட்டின் வருவாய் வெகுவாகக் குறைந்திருக்கிறது.
இதனால் வரி வருவாயை அதிகரிக்க பெட்ரோலியப் பொருட்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டு அதனால், நுகர்வு குறைய ஆரம்பித்தது. இதனால், வரி வருவாய் மேலும் குறைய ஆரம்பித்தது. அரசு தனது தினசரி செலவுகளுக்கே கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 2020ல் அரசின் நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
கேள்வி எழுப்பும் பொருளாதார நிபுணர்
இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதன் சாத்தியக்கூறுகள் மற்றும் நோக்கம் குறித்து கேள்வி எழுப்புகிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் பொருளாதார நிபுணருமான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

பட மூலாதாரம், ANAND SRINIVASAN
"முதலில், இவர்கள் குத்தகைக்கு விடுவதாகச் சொல்லும் சொத்துகள் எதுவும் அரசின் சொத்துகள் கிடையாது. பொதுத்துறை நிறுவனங்களினுடையது. உதாரணமாக கெய்லை எடுத்துக்கொள்வோம். இதில் தனியாரும் பங்குகளை வாங்கியிருக்கிறார்கள். அப்படியானால், இதன் சொத்துகள் குறித்து முடிவெடுக்க இயக்குநர் குழுவை கூட்டி இந்த முடிவை எடுக்க வேண்டும். அப்படியே சொத்துகள் விற்கப்பட்டாலும், அவை அந்தப் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் அவற்றின் பங்குதாரர்களுக்கும்தான் சேரும். அரசுக்கு அதன் பங்கு எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் பணம் கிடைக்கும்" எனச் சுட்டிக்காட்டுகிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.
பிஎஸ்என்எல் நிறுவனம். அதன் ஊழியர்களுக்கே நிறைய பாக்கி வைத்திருக்கிறது. ஓய்வு பெற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை இன்னும் கொடுக்கவில்லை.
சப்ளையர்களுக்கு பணம் பாக்கி இருக்கிறது. பிஎஸ்என்எல் டவரை வாடகைக்கு விட்டு பணம் கிடைத்தால் அது எப்படி அரசுக்குச் செல்லும்? ஏற்கெனவே பாக்கி இருப்பவர்களுக்குத்தானே போகும் என கேள்வி எழுப்புகிறார் ஆனந்த்.
"ரயில்வேயைப் பொருத்தவரை, புதிய ரயில்களை விடுவதற்கு தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்று நடத்த யாரும் முன்வரவில்லை. மத்திய அரசின் ஐஆர்டிசியே ரயிலை விடச் செய்தார்கள். அதில் யாரும் பயணம் செய்யவில்லை. முடிவாக சரக்கு வேகன்கள் மட்டும்தான் குத்தகைக்குச் செல்லும். அதை குத்தகைக்கு விடுவதற்கு பதிலாக அரசே, வாடகைக்கு விட்டு பணம் திரட்டலாமே," என்கிறார் ஆனந்த்
"பணம் திரட்டுவதைத் தவிர, இதில் மத்திய அரசுக்கு வேறு நோக்கங்கள் இருக்கின்றன என்கிறார் அவர். அதாவது அரசுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு அரசின் சொத்துகளைத் தாரைவார்க்கவே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது," என்கிறார் அவர்.
"மோதி பிரதமராவதற்கு முன்பாக அதானி நிறுவனத்திடம் எந்த விமான நிலையமும் கிடையாது. இப்போது 51 விமான நிலையங்கள் அவர் பொறுப்பில் இருக்கின்றன. மீதமுள்ள விமான நிலையங்களையும் அதானியிடம் கொடுக்கத்தான் இதைச் செய்கிறார்கள்" என்கிறார் ஆனந்த்.
முதலீடுகள் கேள்விக்குறியா?
இந்த திட்டத்தின் மூலம் பெரிய அளவில் நிதியைத் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தாலும், சொத்துகள் குத்தகைக்கு விடப்பட்ட பிறகு எந்த அளவுக்கு தனியார் இந்த சொத்துகளை மேம்படுத்துவார்கள் என்ற சந்தேகமும் நிபுணர்களிடம் இருக்கிறது. காரணம், இந்தத் தனியார்மயமாக்கத் திட்டத்தின் கீழ், சொத்துகளின் உரிமை தனியாருக்குத் தரப்படமாட்டாது. பயன்படுத்தும் உரிமை மட்டுமே தரப்படும். ஆகவே, அந்த சொத்துகளில் தனியார் எந்த அளவுக்கு முதலீடு செய்து அவற்றை மேம்படுத்துவார்கள் என்பது கேள்விக்குறிதான்.
இந்த அளவுக்கு இந்தச் சொத்துகளில் முதலீடு செய்ய தனியார் முன்வந்தாலும், அவர்கள் அந்தத் தொகையை வங்கிகளில் கடனாகப் பெற்றே முதலீடுசெய்யக்கூடும். இந்த இடங்களைக் குத்தகைக்குப் பெறுவதன் மூலம் கிடைக்கும் லாபம், இந்தக் கடனுக்கான வட்டியைவிட அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் முதலீடு செய்ய தனியார் ஆர்வம் காட்டுவார்கள். அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது இனிதான் தெரியவரும்.
இதெல்லாம் தவிர, இந்தப் பணத்தைவைத்து மத்திய அரசு என்ன திட்டங்களைச் செயல்படுத்தப்போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தனது கடன்களைத் திரும்பச் செலுத்தப்போகிறதா, புதிய கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடுசெய்யப் போகிறதா என்பதெல்லாம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
பிற செய்திகள்:
- பாஜக கே.டி.ராகவன் விவகாரம்: `சட்டப்படி என்ன நடவடிக்கை சாத்தியம்?'
- கே.டி. ராகவன் குறித்து வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் கட்சியிலிருந்து நீக்கம்
- பென்னிகுயிக் யார்? தமிழக சட்டப்பேரவையில் அவரது வீடு பற்றி ஏன் பேசப்படுகிறது?
- தாலிபன்கள் போதைப்பொருள் உற்பத்தியை தடை செய்வார்களா? உண்மை நிலை என்ன?
- தாலிபன்கள் விதித்த கெடுவுக்குள் மக்களை மீட்க முடியுமா? அமெரிக்காவுக்கு சிக்கல்
- கே.டி. ராகவன் விவகாரம்: அண்ணாமலை தரும் விளக்கம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












