கொரோனா தடுப்பூசி: இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை கட்டாயமாக்க முடியுமா? சட்டம் சொல்வதென்ன?

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், EPA

    • எழுதியவர், சல்மான் ரவி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

வடகிழக்கு மாநிலமான மேகாலயா அரசு, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் தங்கள் வேலையை மீண்டும் தொடங்க முடியாது என பல மாவட்டங்களில் உள்ள கடைக்காரர்கள், டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், தெருவோர விற்பனையாளர்களுக்கு ஒரு நிபந்தனை விதித்துள்ளது. பல மாவட்டங்களில் இந்த உத்தரவை அங்குள்ள துணை ஆணையர்கள் வெளியிட்டனர்.

ஆனால் மேகாலயா உயர்நீதிமன்றம் அதை ரத்து செய்து, தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்க முடியாது என கூறியது. நீதிமன்றம் அரசின் இந்த உத்தரவை, அடிப்படை உரிமை மற்றும் தனியுரிமை மீறல் என்று கூறி ரத்து செய்தது.

இதேபோன்ற உத்தரவுகளை வேறு சில மாநிலங்களின் அரசாங்கங்களும் வெளியிட்டுள்ளன. அவற்றில் குஜராத்தும் ஒன்று. குஜராத்தின் 18 நகரங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஜூன் 30க்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளன.

மீதமுள்ள நகரங்கள் மற்றும் மாவட்டங்களில், ஜூலை 10 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றாத நிறுவனங்கள் மூடப்படும் என அரசாங்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்படுகிறதா என்கிற கேள்வி எழுகிறது. குறிப்பாக மத்திய குடும்ப நல மற்றும் சுகாதார அமைச்சகம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை மக்களின் விருப்பத்திற்கு விட்ட நிலையில், இது சாத்தியமா?

இருப்பினும், மேகாலயா உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் மற்றவர்களின் தகவல்களுக்கு, வணிக நிறுவனங்கள், அங்குள்ள தொழிலாளர்கள், பேருந்துகள், டாக்சிகள் மற்றும் ஆட்டோ ஆபரேட்டர்கள் ஆகியோர் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனரா இல்லையா என்ற விவரங்களைத் தெளிவாக எழுதி வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேகாலயா உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நீதித்துறை வட்டாரங்களில் ஒரு விவாதத்தை கிளப்பியுள்ளது.

தடுப்பூசி எப்போதாவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா?

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

ரோஹின் துபே ஒரு வழக்கறிஞர். குருகிராமில் ஒரு சட்ட நிறுவனத்தில் பணிபுரிகிறார். கட்டாயத் தடுப்பூசி குறித்து ஆய்வு செய்துள்ளார்.

1880ஆம் ஆண்டில் முதல் முதலாக அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது என்று அவர் பிபிசியிடம் கூறினார். அந்த நேரத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் 'தடுப்பூசி சட்டத்தை' நடைமுறைப்படுத்தியது. பின்னர் பெரியம்மை நோயைக் கையாள 1892இல் கட்டாய தடுப்பூசி சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டங்களை மீறியதற்காக தண்டனை வழங்கவும் ஏற்பாடுகள் இருந்துள்ளன.

"2001 ஆம் ஆண்டுக்குள் பழைய சட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஆனால் 1897ஆம் ஆண்டின் தொற்றுநோய்கள் சட்டம் பிரிவு 2-ன் படி, எந்தவொரு விதியையும் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு மகத்தான அதிகாரங்களை வழங்கியுள்ளது. இதன் கீழ், எந்த மாநில அரசும் எந்தவொரு தொற்றுநோயும் பரவாமல் தடுக்க எந்தவொரு கடுமையான சட்டத்தையும் உத்தரவையும் அல்லது விதியையும் பிறப்பிக்க அதிகாரம் உள்ளது.

அதேபோல, 2005 முதல் நடைமுறைக்கு வந்த தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம், ஒரு பேரழிவு அல்லது தொற்றுநோய் காலத்தின் போது அதைத் தடுக்க மத்திய அரசுக்கு அதிக அதிகாரத்தையும் அளிக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

சட்ட வல்லுநர்கள் கருத்து என்ன?

சட்டம்

பட மூலாதாரம், Getty Images

இது குறித்து சட்டப்பூர்வமாகத் தெளிவு இல்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். கட்டாயத் தடுப்பூசி வழக்கில், பல்வேறு நீதிமன்றங்களின் உத்தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கமளிக்கப்படுகின்றன.

முதலாவதாக, அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது.

அதன்பிறகு காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் போன்ற அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. இதற்குப் பிறகும், கொரோனா தடுப்பூசி பிரசாரத்தை மத்திய அரசு தன்னார்வச் செயல்பாடு என்று கூறி வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பி பத்ரிநாத், "அடிப்படை மற்றும் தனியுரிமைக்கான உரிமைக்கும் ஆரோக்கியத்திற்கான உரிமைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது" என்று கூறுகிறார்.

ஒருவரைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கட்டாயப்படுத்த முடியாது என்பது உண்மைதான், ஆனால் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் மற்றொரு நபருக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறதா என்பது பற்றிய விவாதம் தொடர்கிறது. ஏனென்றால் மற்றொரு நபருக்கும் ஆரோக்கியமாக இருக்க உரிமை உண்டு என்கிறார் பத்ரிநாத்.

மேலும் அவர், "யாரையும் வீட்டுக்குள்ளேயே இருக்கவோ அல்லது சமூகத்திலிருந்து விலகி இருக்கவோ சட்டப்படி கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் அரசாங்கம் 'தனிமைப்படுத்தும் நடைமுறையை' விதித்துள்ளது. இந்த விதிமுறையின் கீழ், பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வது, மற்றவர்களைச் சந்திப்பது ஒரு குற்றமாக கருதப்படுகிறது. அதை மீறினால் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன" என்று விளக்குகிறார்.

தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவது குறித்த கேள்வி

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

அரசாங்கத்தின் இந்தச் சட்டத்தின் கீழ் தான் தனி நபர் இடைவெளி என்பதும் பின்பற்றப்படுகிறது. ஆனால் இவை அனைத்தையும் மீறி, யாரும் தடுப்பூசி போட கட்டாயப்படுத்த முடியாது என்று பத்ரிநாத் கூறுகிறார். நீதிமன்றங்கள் அவ்வப்போது தங்கள் உத்தரவுகளை குறித்தும் கருத்து தெரிவிக்கின்றன.

சமீபத்தில், மேகாலயா உயர்நீதிமன்றம், ஒரு வழக்கின் விசாரணையின் போது, ​​"நலத்திட்டங்கள் அல்லது தடுப்பூசி வழங்கும் திட்டம் போன்றவைகளை வழங்குவது, வாழ்வாதாரத்திற்கான உரிமையையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் மீற முடியாது. ஆகையால், தடுப்பூசி செலுத்திக்கொள்வதும், செலுத்திக் கொள்ளாததும் வாழ்வாதாரத்தை எந்த வகையிலும் பாதிக்கமுடியாது" என்று தெரிவித்தது.

"தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் விதிகளை உருவாக்க மாநில அரசுகளுக்கு நிச்சயமாக அதிகாரம் உண்டு, ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டால், நிச்சயம் கொரொனா வராது என்று உறுதிப்படுத்தப்படும் வரை அதைக் கட்டாயமாக்கப்படுவது தவறாகவே கருதப்படும்" என அரசியலமைப்பு அறிஞரும் மூத்த வழக்கறிஞருமான சங்ராம் சிங் கூறுகிறார்.

தற்போது வழங்கப்படும் தடுப்பூசிகள் எவ்வளவு காலம் பயனுள்ளதாக இருக்கும் என்பது இன்னும் தெரியவில்லை என்று சங்ராம் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.

"ஒரு வருடத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்த பிறகு, இந்த தடுப்பூசி ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்பட வேண்டுமா என்பது இன்னும் தெரியவில்லை. இது தெரியாதபோது, ​​தடுப்பூசியை எவ்வாறு கட்டாயமாக்க முடியும்" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

மக்களின் உரிமை என்ன?

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

ஆனால் இப்போது கூட பல நாடுகளில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என ரோஹின் துபே கூறுகிறார். உதாரணமாக, பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ், மஞ்சள் காமாலை மற்றும் பிற நோய்களுக்குத் தடுப்பூசி போடாவிட்டால் பல நாடுகளுக்குச் செல்ல முடியாது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். பல ஆப்பிரிக்க நாடுகளிலும் கூட தடுப்பூசி இல்லாமல் வருவது தடை செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார்.

மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அனைவரும் பெரியம்மை தடுப்பூசி பெறுவது கட்டாயம் என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சங்கிராம் சிங் போன்ற பல சட்ட வல்லுநர்கள் இந்த வாதத்தை ஏற்கவில்லை. அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ், கொரோனா வைரஸ் தடுப்பூசியுடன் தொடர்புடைய நன்மைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து முழு தகவல்களையும் பெற மக்களுக்கு உரிமை உண்டு என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது தொடர்பான தரவு எதுவும் இதுவரை இல்லை, எனவே மக்கள் முடிவெடுப்பதில் சிரமப்படுகிறார்கள் என்பது அவரது வாதம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :