குர்ஷத்பென் நவ்ரோஜி: பிரிட்டிஷ் காவலர்களே அஞ்சிய பயங்கர கொள்ளையர்களுக்கு அகிம்சையை போதித்த பெண் பாடகர்

குர்ஷத்பென் நவ்ரோஜி (மத்தியில் இருப்பவர்)

பட மூலாதாரம், KONSTANTINOS PSACHOS HOUSE ARCHIVE, HELLENIC FOLKL

பொதுவாக ஒரு நாட்டில் வாழ்ந்த பணக்கார பெண், அதுவும் சொப்ரானோ (Soprano) பாடகர் ஒருவர், கொள்ளையர்கள் மற்றும் கடத்தல்காரர்களுக்கு அகிம்சையை போதித்திருக்கிறார் என்றால், அவரைக் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் நடந்திருக்கும், அதிகம் கவனம் பெற்றிருப்பார். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை.

குர்ஷத்பென் நவ்ரோஜி குறித்து பெரிதாக யாருக்கும் தெரியவில்லை என தின்யார் படேல் அவரது கதையை நினைவுகூர்கிறார்.

இந்தியாவின் சுயசரிதை என்கிற அடுக்கு காலியாக இருப்பதாக, இந்தியாவின் முக்கிய வரலாற்றாசிரியர்களில் ஒருவரான ராமச்சந்திர குஹா ஒரு முறை கூறினார். இந்தியாவில் படித்தவர்கள் பெரும்பாலும் சுய சரிதை எழுதுவதை வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள்.

ராமச்சந்திர குஹா குறிப்பிட்ட காலி அடுக்கை சில முக்கியமான நபர்களோடு நிரப்பும் விதத்தில், அவரது மாணவர்கள் மற்றும் அவருடன் பணியாற்றுபவர்களின் பங்களிப்போடு ஒரு புத்தகம் வெளியாகி இருக்கிறது.

அப்புத்தகத்தில் 'பாடும் சத்தியாகிரகி குர்ஷத்பென் நவ்ரோஜி' என்கிற தலைப்பில் தின்யார் படேல் ஓர் அத்தியாயத்தை எழுதி இருக்கிறார்.

1894ஆம் ஆண்டு குர்ஷத்பென் மேல்தட்டு பார்சி குடும்பத்தில் பிறந்தார். அவரது தாத்தா இந்தியாவின் புகழ் பெற்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தாதாபாய் நவ்ரோஜி. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் (ஆம் அப்போது அது பாராளுமன்றமாகத் தான் இருந்தது) வேலை செய்த முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

குர்ஷத்பென் தன் இளமை காலத்தில் அந்த காலத்து பம்பாயின் மேற்தட்டு மக்கள் வாழ்ந்த இடத்தில் வாழ்ந்து வந்தார். பிறகு தேர்ந்த சொப்ரானோ பாடகரானார். அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் அவரை 'நைட்டிங்கேல்' அல்லது 'புல்' என்றழைத்தனர்.

பம்பாயில் குர்ஷத்பென்னின் ஒரு கச்சேரியில் ஜவஹர்லால் நேரு கலந்து கொண்டார்

1920களின் தொடக்கத்தில் குர்ஷத்பென் பாரிஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். ஈவா பால்மர் சிகெலியானோஸை சந்திக்கும் வரை ஐரோப்பாவில் கலாசார ரீதியாக ஒட்டமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

நியூயார்க்கைச் சேர்ந்த சிகெலியானோஸ் ஏதென்ஸில் குடிபெயர்ந்தார். அங்கு பண்டைய கிரேக்க கலாசாரத்தை மீட்டெடுப்பதில் முதன்மையானவரானார்.

கிரேக்கம் மற்றும் இந்திய இசை பண்பாடு குறித்த விவாதத்தால், ஏதென்ஸ் நகரில் ஒரு இசைப் பள்ளியை இவர்கள் நிறுவினர். அப்பள்ளியில் மேற்கத்திய இசை தவிர மற்ற இசைகள் குறித்து பேசப்பட்டன.

குர்ஷத்பென் பாரிஸ் நகரத்தில் இந்திய பாரம்பரிய இசையைவிட்டுவிட்டு, கிரேக்க இசையில் தன் திறனை மேம்படுத்திக் கொண்டார். அதே நேரத்தில் சேலை அணிந்து கொண்டு எந்த வித முன்னறிவிப்புமின்றி இந்திய இசை கச்சேரிகளையும் நடத்தினார்.

'கிரேக்கத் தாய்' என அவர் கிரீஸை குறிப்பிட்டுக் கூறியது, இந்தியத் தாயை நோக்கி அவரை திரும்பிப் பார்க்க வைத்தது. குர்ஷத்பென் இந்தியாவைக் குறித்தும், காந்தியின் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் இணைவது குறித்தும் பெரிய ஆவலோடு பேசியதாக சிகெலியானோஸின் சுயசரிதையை எழுதிய ஆர்டெமிஸ் லியோணடிஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

முதல் டெல்ஃபிக் திருவிழாவில் தனக்கு உதவுமாறு சிகெலியானோஸ் கூறிய போது அவ்வாய்ப்பை மறுத்துவிட்டு, பம்பாய் புறப்பட்டார் குர்ஷத்பென் நவ்ரோஜி.

விரைவில் காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்துக்குச் சென்றார். அங்கு இந்தியப் பெண்களை தேசிய இயக்கத்தில் அதிகம் ஈடுபடுத்த வேண்டும் என காந்தியை ஊக்குவித்தார். காந்தியத் தத்துவம் என்பது பெண்களை விழித்தெழச் செய்யும் ஒன்று. அது சிறப்பாக தொடங்கப்பட்டிருக்கிறது. அப்பணியை நிறுத்தப் போவதில்லை என ஒரு பத்திரிகையிடம் கூறி இருந்தார்.

ஜெர்மனியில் 1924ஆம் ஆண்டு குர்ஷத்பென் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் எடுத்த படம்

பட மூலாதாரம், KONSTANTINOS PSACHOS HOUSE ARCHIVE, HELLENIC FOLKL

குர்ஷத்பென்னின் பணி வழக்கத்துக்கு மாறான மிகவும் பழமைவாதம் நிரம்பிய பகுதியை நோக்கி திரும்பியது. அன்று வடமேற்கு எல்லை மாகாணமாக இருந்த, இன்று பாகிஸ்தானில் கைபர் பக்துங்க்வா என்றழைக்கப்படும் பகுதியில் தன் பணியைத் தொடங்கினார். இப்பகுதியில் நிறைய பழமைவாதத்தோடு, மலைவாழ் மக்களுக்கு மத்தியில் ஏற்படும் சண்டை, கொள்ளையடித்தல் போன்றவைகளும் நடந்து வந்தன.

குர்ஷத்பென் எப்படி அல்லது எப்போது அங்கு சென்றார் என்பது குறித்த போதுமான ஆதாரங்கள் இல்லை. ஆனால் 1930-களின் தொடக்கத்திலேயே குர்ஷத்பென் தென்மேற்கு எல்லை மாகாண அரசியலில் பிரபலமானவராக இருந்தார். அவர் கான் அப்துல் கஃபார் கான் உடன் நண்பரானார். கஃபார் கான் பஸ்துன்களுக்கிடையில் அகிம்சையை போதிக்கக் கூடிய ஒரு தேசிய இயக்கத்தை நடத்தி வந்தார்.

அவர் எப்போதெல்லாம் அதிகாரிகளுக்கு தொல்லை கொடுத்தாரோ அப்போதெல்லாம் பிரிட்டிஷாரால் குர்ஷத்பென் சிறையில் அடைக்கப்பட்டார்.

தென் மேற்கு முன்னணி மாகாணத்தில் அதிக காலத்தை செலவழித்ததால், அங்கு நிலவிய சிக்கலான அரசியல் சவால்களைப் புரிந்து கொண்டார்.

இந்து - இஸ்லாமியர்களுக்கு இடையில் ஒற்றுமையை மேம்படுத்துமாறும், இந்திய தேசிய காங்கிரஸுக்கு ஆதரவைத் திரட்டுமாறும் கூறினார் காந்தி.

அது கிட்டத்தட்ட அப்பிராந்தியத்தில் சாத்தியமற்றதாக இருந்தது. காரணம் இந்துக்கள் வசீரிஸ்தானில் இருந்த கொள்ளையர்களால் பயந்து போயிருந்தனர். பிரிட்டிஷ் மற்றும் இந்திய காவலர்கள் என அனைவரும் அக்கொள்ளையர்களால் பயந்து போயிருந்தனர். அது மதக் கலவரத்தை மேலும் வலுப்படுத்தியது.

அவர்களைத் தொடர்பு கொண்டு கொள்ளையடிப்பதையும், ஆட்களைக் கடத்துவதையும் கைவிட்டுவிட்டு, காந்திய அகிம்சைவாதக் கொள்கைகளை பின்பற்றுமாறு பிரசாரம் செய்வது தான் குர்ஷத்பென்னின் நோக்கமாக இருந்தது.

தென்மேற்கு முன்னணி மாகாணத்தில் இருந்த காங்கிரஸ் ஆட்கள் மறுத்த போதும் 1940களின் பிற்பகுதியில் கால்நடையாக தன் பயணத்தைத் தொடங்கினார். செல்லும் வழி முழுக்க உள்ளூர்வாசிகளோடு பேசிக் கொண்டே சென்றார்.

கொள்ளைர்களின் மனைவி மகள் போன்றவர்களிடம், கொள்ளையடிப்பதால் ஏற்படும் தீமைகளைக் குறித்து அறிவுரைகளை வழங்கினார். அவர்களையே கொள்ளையடிக்கும் செயலுக்கு எதிரானவர்களாக திருப்பிவிட்டார்.

தங்கள் கூடாரத்துக்கே வந்திருக்கும் இந்த தைரியமான பெண்மணியை என்ன செய்வதென அறியாமல் திகைத்துப் போயினர். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக வருந்தினர். ஒரு முறை தான் சுடப்பட்டது குறித்து காந்திக்கு கடிதம் எழுதினார். "என்னை நோக்கி சுடப்பட்ட குண்டு, அருகிலிருந்த மணலில் தைத்தது" என நினைவுகூர்கிறார்.

குர்ஷத்பென் நவ்ரோஜி கைது விவரம்

ஆச்சர்ய்ப்படும் விதமாக அவரது முயற்சி பலனளித்தது. 1940 டிசம்பர் காலகட்டத்தில் ஆள்கடத்தல் எண்ணிக்கை குறைந்தது. மத நல்லிணக்கம் மேம்பட்டது. இதற்கு முன் அவரை சிறையில் அடைத்த பிரிட்டிஷ் அதிகாரிகள் கூட, அவரது முயற்சியைப் பாராட்டினர். ஆனால் ஒரு சவால் இன்னமும் அப்படியே இருந்தது.

ஒரு இந்துக்கள் குழு வசீரிஸ்தானில் கடத்தப்பட்டிருந்தார்கள். வசீரிஸ்தானுக்குள் நுழையவே பிரிட்டிஷ் காவலர்கள் பயந்தனர். அப்பகுதிக்குள் என்ன ஆபத்து இருக்கிறது என தெரிந்தும் நுழைய முற்பட்டார் குஷத்பென்.

ஆனால் அவர் வசீரிஸ்தான் எல்லையைக் கடப்பதற்கு முன்பே, அவரை பிரிட்டிஷ் அதிகாரிகள் தடுத்து சிறை வைத்தனர். 1944ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்தார். குர்ஷத்பென் பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆபத்தானவராகவே இருந்தார்.

குர்ஷத்பென் நவ்ரோஜி நடத்தப்படுவது குறித்து காந்தியின் விமர்சனம்

அவர் அதற்குப் பிறகு தென் மேற்கு எல்லை மாகாணத்துக்குச் செல்லவில்லை. 1947 ஆகஸ்டில் இந்தியா சுதந்திரமடைந்த போது, கைபர் பக்துங்க்வா பகுதியை ஒருங்கிணைந்த இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டதை வேதனையுடன் பார்த்தார், அடுத்த சில மாதங்களில் மகாத்மா காந்தி கொல்லப்பட்டார்.

அதன் பிறகு குர்ஷத்பென் நவ்ரோஜியின் வாழ்கை குறித்த விஷயங்கள் கிட்டத்தட்ட காணவில்லை என்று தான் கூற வேண்டும்.சுதந்திரத்துப் பிறகு பல்வேறு அரசு ஆணையங்களில் பணியாற்றினார். அவர் மரணமடைவதற்குள் மீண்டும் பாடத் தொடங்கினார். 1966ஆம் ஆண்டு அவர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

ஒருவகையில் குர்ஷத்பென் நவ்ரோஜியின் கதை மிகவும் தனித்துவம் வாய்ந்தது. இவரைப் போன்ற ஆயிரக் கணக்கானவர்களின் கதைகள் இன்னும் சொல்லப்படாமல், சிதறிக் கிடக்கின்றன. கதை சொல்ல ஆள் இல்லாமல் பதிவுகள், அறைகளில் காத்துக் கிடக்கின்றன.

தின்யார் படேல் சமீபத்தில் 'நவ்ரோஜி: இந்திய தேசியவாதத்தின் முன்னோடி' என்கிற தலைப்பில் புத்தகத்தி எழுதினார். இப்புத்தகம் ஹார்வர்ட் பல்கலைக்கழக பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :