புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு: அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரவையில் பாஜக

பட மூலாதாரம், Puducherry Rajnivas
புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு புதிய அமைச்சரவை இன்று (27.06.2021) பதவியேற்றுக் கொண்டது.
புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரவையில் பாரதிய ஜனதா கட்சி இடம்பெற்றுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த மே 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார்.
முதல்வர் பதவியேற்று நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த 23ஆம் தேதி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சௌந்தரராஜனிடம் அமைச்சரவை பட்டியலை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
ஐந்து பேர் கொண்ட புதிய அமைச்சரவையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகளும், பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட புதிய அமைச்சரவை பட்டியலுக்கு கடந்த 25ஆம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்.
அதனைதொடர்ந்து இன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 5 அமைச்சர்களுக்கும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பட மூலாதாரம், Puducherry Rajnivas
இந்த அமைச்சர்கள் பட்டியலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன், ஜெயக்குமார் மற்றும் சந்திர பிரியங்கா ஆகியயோர் இடம் பெற்றுள்ளனர். பாஜக சார்பில் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
புதிய அமைச்சர்கள் யார் யார்?
1. அ.நமச்சிவாயம்

பட மூலாதாரம், Puducherry Rajnivas
பாஜகவை சேர்ந்த மண்ணாடிப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் நமச்சிவாயம் நான்காவது முறையாக அமைச்சராக பதவியேற்றுள்ளார். முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் உள்ளாட்சி துறை, கலால் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளில் மூன்று முறை அமைச்சராக இருந்துள்ளார்.
2. லட்சுமி நாராயணன்

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் மூன்றாவது முறையாக அமைச்சர் பொறுப்பேற்றார். இவர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இரண்டு முறை அமைச்சராக இருந்துள்ளார்.
3. ஜெயக்குமார்

பட மூலாதாரம், Puducherry Rajnivas
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சேர்ந்த மங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மூன்றாவது முறையாக அமைச்சராகிறார். முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு முறை உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்துள்ளார்.
4. சந்திர பிரியங்கா

பட மூலாதாரம், Puducherry Rajnivas
புதுச்சேரி காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள நெடுங்காடு தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளான இவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
5. சாய் சரவணன் குமார்

பட மூலாதாரம், Puducherry Rajnivas
பாஜக சார்பில் போட்டியிட்ட சாய் சரவணன் குமார் ஊசுடு தனித்தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகினார். தற்போது இவரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
முதல் முறையாக பதவியேற்கும் அமைச்சர்கள்
5 பேர் கொண்ட இந்த அமைச்சரவை பட்டியலில், காரைக்கால் நெடுங்காடு தொகுதியை சந்திர பிரியங்கா மற்றும் ஊசுடு தொகுதியை சேர்ந்த சாய் சரவணன் குமார் ஆகிய இருவரும் முதல் முறையாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளனர்.
இவர்கள் இருவருமே தனித்தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
40 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் பெண் உறுப்பினர்

பட மூலாதாரம், Puducherry Rajnivas
சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா புதுச்சேரி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 1980ஆம் ஆண்டு காங்கிரஸ் திமுக கூட்டணியில் ஆட்சி நடைபெற்ற போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேணுகா அப்பாத்துரை என்பவர் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்தார்.
அவருக்குப் பிறகு 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு பெண் உறுப்பினருக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடமளித்துள்ளது. இது சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் மகளிர் அமைப்பினர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
புதுச்சேரி அமைச்சரவையில் முதல் முறையாக பாஜக

பட மூலாதாரம், TWITTER
புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரவையில் பாஜக இடம் பெற்றுள்ளது.
முன்னதாக 2001ஆம் ஆண்டு புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாஜக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். அப்போதுதான் புதுச்சேரி சட்டமன்றத்தில் பாஜக முதல் முறையாக நுழைந்தது.
அதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போது 2014ஆம் ஆண்டு விஷ்வேஸ்வரன் என்பவர் நியமன சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து காங்கிரஸ் ஆட்சியின்போது 2017ஆம் ஆண்டு பாஜகவைச் சேர்ந்த மூவரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது.
இந்த நிலையில் நடைபெற்று முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்தித்து 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தற்போது நியமிக்கப்பட்ட மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூன்று சுயேச்சைகள் ஆதரவுடன் சட்டமன்றத்தில், பாஜக பலம் மிகுந்து காணப்படுகிறது. பாஜக சார்பில் தேர்வான ஒருவரே சட்டப்பேரவை தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












