நரேந்திர மோதி: "கொரோனா தடுப்பூசி கொள்முதல் செலவை மத்திய அரசே இனி ஏற்கும்"

பிரதமர் மோதி

பட மூலாதாரம், PM MODI YOUTUBE

இந்தியாவில் ஜூன் 21 முதல் 18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் தமது சமூக ஊடக பக்கங்கள் வாயிலாக உரையாற்றினார்.

இதற்கு முன்பு கடைசியாக கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி கொரோனா நிலவரம் தொடர்பாக நரேந்திர மோதி பேசினார். அப்போது கொரோனா வைரஸின் பாதிப்பு அளவின் உச்சத்தை நாடு எட்டியிருந்தது. சூறாவளி போல தேசத்தை தாக்கிய கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அளவில் கடுமையான பொது முடக்க கட்டுப்பாடுகளே அவசியம் என்று அப்போது பிரதமர் மோதி வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், திங்கட்கிழமை அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

  • இப்போதும் இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையோடு போராடிக் கொண்டிருக்கிறது. பலரும் தங்களது அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள்.
  • கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய பெருந்தொற்று இந்த கொரோனா வைரஸ். நவீன உலகம் இத்தனை பெரிய தொற்றை இதுவரைப் பார்த்ததில்லை. இந்தியா இந்த கொடிய நோயை பல கட்டங்களில் எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது.
  • கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை அபரிமிதமாக அதிகரித்தது. கடந்த காலங்களில், இந்த அளவுக்கு அதிகமாக மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை ஏற்படவில்லை. ஆக்சிஜன் தேவை பிரச்னையை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • உலகின் மிகச் சில நிறுவனங்கள் மட்டுமே கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கின்றன. கொரோனா தடுப்பூசிக்கான உலக தேவையுடன் ஒப்பிடும் போது, உலகம் முழுக்க செய்யப்படும் கொரோனா தடுப்பூசி உற்பத்தி மிகவும் குறைவு.
  • இந்தியாவில் 23 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இந்திய விஞ்ஞானிகள் விரைவில் ஒரு புதிய கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிப்பார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
  • வரும் நாட்களில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் விநியோகம் அதிகரிக்கும். ஏழு நிறுவனங்கள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. இன்னும் மூன்று கொரோனா தடுப்பூசிகள் பல கட்ட சோதனைகளில் இருக்கின்றன.
  • பல்வேறு மாநிலங்களில் கொரோனா தீவிர சிகிச்சை படுக்கைகள், வென்டிலேட்டர் வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தும் அதிக அளவில் தேவைப்பட்டபோது, அதை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. நம்ப முடியாத அளவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டபோது அவற்றின் தயாரிப்பு அதிகமாக்கப்பட்டது. அதன் விநியோகத்துக்கு கடற்படை, விமானப்படை போன்றவை பயன்படுத்தப்பட்டன. இப்போது பத்து மடங்கு அளவுக்கு அவற்றின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
  • சிறார்களுக்கான தடுப்பூசி பரிசோதனை திட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.
  • தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்யும் மாநிலங்களின் சுமையை மத்திய அரசே ஏற்கும். 18 முதல் 44 வயதுடையவர்களுக்காக மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் தடுப்பூசி மருந்துகளுக்கான செலவை இனி மத்திய அரசே ஏற்கும். ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும்.
  • பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா, (பிரதமரின் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள்) வரும் தீபாவளி வரை நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் 80 கோடி நலிவற்ற மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும்.

தொடர்புடைய காணொளி

காணொளிக் குறிப்பு, 18 வயது கடந்த எல்லோருக்கும் தடுப்பூசி வாங்கும் செலவை மத்திய அரசே ஏற்கும் - நரேந்திர மோதி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :