பாலியல் விவகாரமா? பட்டு சொசைட்டி ஊழலா? - அமைச்சரோடு மோதிய ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்

பட மூலாதாரம், OS Maniyan/FB

    • எழுதியவர், ஆ.விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

"ரூ. 5 கோடி முறைகேடு: கூண்டோடு கலைக்கப்பட்ட காஞ்சி கைத்தறி சங்க நிர்வாகிகள்" என்ற தலைப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி பிபிசி தமிழ் இணைய தளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம்.

அதில், "காஞ்சிபுரம் முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் சங்கத்தில் 2017-18 ஆம் ஆண்டில் நிர்வாகச் சீர்கேடு காரணமாக 5 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதால், அங்குள்ள நிர்வாகக் குழு கூண்டோடு கலைக்கப்படுகிறது" என கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் துணை இயக்குநர் கணேசன் அறிவித்திருந்த செய்தி இடம் பெற்றது.

இந்த உத்தரவு ஆளும் கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. `அ.தி.மு.க தரப்பில் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவை கலைத்த முடிவை வாபஸ் பெற வேண்டும்' என கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் கருணாகரன் ஐ.ஏ.எஸ்ஸுக்கு அமைச்சர் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், `இந்த விவகாரத்தில் எந்த முடிவையும் மாற்ற முடியாது' எனக் கருணாகரன் உறுதியாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, நேற்று மாலை திடீரென திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் சிறப்புச் செயலராக கருணாகரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவு கைத்தறித் துறை ஊழியர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

``காஞ்சிபுரத்தில் உள்ள முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1957 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்தச் சங்கத்தில் 3,599 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 2013 ஆம் ஆண்டு சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், இயக்குநர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் மீண்டும் 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், கூட்டுறவுத் தணிக்கைத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாயின," என்கின்றனர் கைத்தறித் துறை ஊழியர்கள் சிலர்.

தொடர்ந்து பிபிசி தமிழுக்காக பேசிய அவர்கள், ``சொசைட்டியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் கைத்தறித் துறையின் உயர் அதிகாரிகள் சிலர் சேர்ந்து கொண்டு முறைகேடுகளை அரங்கேற்றியுள்ளனர். அதில், எதற்குச் செலவு என்ற கணக்கே இல்லாமல் ஏராளமான தொகைகள் வாரியிறைக்கப்பட்டிருந்தன. முறையான பில்கள் மற்றும் வவுச்சர்கள் இல்லாமல் செலவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்தவகையில் சுமார் 5 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் அரங்கேறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இதற்குக் காரணமான கைத்தறித் துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்குள்ள நிர்வாகக் குழுவும் கலைக்கப்பட்டது.

அமைச்சரின் அழுத்தம்?

இதன் பின்னர், சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அ.தி.மு.கவின் முக்கிய பிரமுகர் ஒருவரும் அமைச்சர் ஓ.எஸ்.மணியனை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, துறையின் இயக்குநர் மீது புகார்களை வாசித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, துறையின் இயக்குநர் கருணாகரனிடம் பேசிய அமைச்சர், `ஆளும்கட்சியால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவையே கலைத்தது சரியல்ல. அந்த முடிவை வாபஸ் பெறுங்கள்,' என கூறியுள்ளார்.

பட மூலாதாரம், OS Maniyan/FB

படக்குறிப்பு, ஓ.எஸ்.மணியன்

இதற்குப் பதில் அளித்த இயக்குநர், `இந்த உத்தரவை துணை இயக்குநர் பிறப்பித்துள்ளார். இதன் பேரில் நிர்வாக குழுவில் உள்ளவர்களை மேல் முறையீடு செய்யச் சொல்லுங்கள். நான் எதுவும் செய்ய முடியாது,' என கூறி விட்டார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கருணாகரனை மாற்றி விட்டனர்" என்கின்றனர்.

அதேநேரம், இந்த விவகாரத்தின் பின்னணியில் வேறு சில காரணங்களையும் கைத்தறித் துறை ஊழியர்கள் பட்டியலிடுகின்றனர். "கைத்தறித் துறையின் சீருடைப் பிரிவில் இணை இயக்குநராக யூஜின் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2 பெண் அதிகாரிகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகார் மீது கைத்தறித் துறையில் அப்போது இயக்குநராக இருந்த அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர், கருணாகரன் இயக்குநர் பதவிக்கு வந்தார். இந்த நேரத்தில், ஆய்வாளர்களாக இருந்த 11 பேருக்கு பதவி உயர்வு வழங்கும் உத்தரவை பிறப்பித்தார். `இதனை மாற்றி 35 பேருக்கு கொடுக்க வேண்டும்' என சிலர் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

அதிகாரி மீது பாலியல் புகார்!

அதற்கு இயக்குநர் மறுப்பு தெரிவித்ததால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட பாலியல் புகாரை சிலர் தூசி தட்டி எடுத்துள்ளனர். இதில், யூஜினும் கருணாகரனும் பள்ளிக்கால நண்பர்கள் என்பதால், இயக்குநர் அவருக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக அமைச்சருக்கு ஒரு புகார் அனுப்பப்பட்டது.

இந்தப் பதவி உயர்வு வரம்புக்குள் பாலியல் புகார் தெரிவித்த பெண் ஊழியரும் வரவில்லை.

இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி இரவு 8 மணிக்கு அந்தப் பெண் ஊழியர் இயக்குநரின் வீட்டுக்கே வந்துள்ளார். இதையறிந்த கருணாகரன், "வீட்டில் சந்திக்க முடியாது. நாளை காலை அலுவலகத்துக்கு வரச் சொல்லுங்கள்" என காவலாளியிடம் கூறி அனுப்பிவிட்டார். அன்று இரவு 10.55 மணிக்கு யூஜின் மீதான புகாரை வாட்ஸ்அப்பில் அந்தப் பெண் ஊழியர் கருணாகரனுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த மெசேஜை மறுநாள் உதவி இயக்குநருக்கு (நிர்வாகம்) அனுப்பி, விசாகா கமிட்டி அமைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டார் கருணாகரன். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண் எழுத்துப்பூர்வமாக எந்தப் புகாரையும் அளிக்கவில்லை.

எனினும் யூஜின் இடைநீக்கம் செய்யப்பட்டார். உயர் அதிகாரி வீட்டுக்கு முன் அனுமதியில்லாமல் வந்த காரணத்துக்காக பெண் ஊழியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையே காரணமாக வைத்து, யூஜினுக்கு ஆதரவாக கருணாகரன் செயல்படுவதாக அமைச்சர் தரப்பில் அவதூறு பரப்புகிறார்கள். இந்த விவகாரத்தில் யூஜின் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததே கருணாகரன்தான்.

கடந்த 2 ஆண்டுகாலமாக கைத்தறித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கருணாகரன் மேற்கொண்டார். காபந்து அரசாக இருந்தாலும் செயலருக்கு அழுத்தம் கொடுத்து இயக்குநரை மாற்றிவிட்டனர். இப்படியொரு பதவி மாறுதலை யாரும் எதிர்பார்க்கவில்லை" என்கின்றனர் பெயர் வெளியிட விரும்பாத அந்த ஊழியர்கள்.

ஓ.எஸ்.மணியன் சொல்வது என்ன?

`நீங்கள் தெரிவித்த புகார் காரணமாகத்தான் கருணாகரன் இடமாற்றம் செய்யப்பட்டாரா?' என முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்த வள்ளிநாயகத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

"அமைச்சரை 20 நாள்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினோம். அப்போது புகாராக எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், கைத்தறித் துறையில் நடந்த விவகாரம் குறித்து தலைமைச் செயலாளர், கைத்தறித்துறை செயலர், தேர்தல் ஆணையம் என அனைத்து தரப்பினருக்கும் புகார் மனுவை அனுப்பியுள்ளோம்.

அதில், எங்கள் தரப்பில் உள்ள நியாயங்களைக் குறிப்பிட்டுள்ளோம். இந்தச் சங்கத்தில் உள்ள 3,000 பேரில் நானும் ஒருவன். பெண் ஊழியர்கள் தெரிவித்த பாலியல் புகார் காரணமாக யூஜின் இடமாற்றம் செய்யப்பட்ட தகவலையும் கேள்விப்பட்டோம். ஆனால், எங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நியாயங்களையெல்லாம் இயக்குநர் கேட்கவில்லை" என்கிறார்.

பட மூலாதாரம், Karunakaran/FB

படக்குறிப்பு, கருணாகரன்

கருணாகரன் ஐ.ஏ.எஸ் இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக, தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``காஞ்சிபுரம் முருகன் பட்டு சொசைட்டியில் நடந்த முறைகேடு விவகாரத்துக்காக அவர் மாற்றப்பட்டதாகச் சொல்வது தவறானது. இரண்டு பெண் அதிகாரிகளுக்கு உயர் அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் தவறு செய்ததாகச் சொல்லப்பட்ட அதிகாரியை பணிமாறுதல்கூட செய்யவில்லை. அந்தப் பிரச்னையில்தான் மாற்றப்பட்டார்" என்று ஓ.பி.எஸ். மணியன் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், "யூஜினும் கருணாகரனும் நண்பர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தப் பெண் அதிகாரியை, `அரசு அலுவல் நேரத்தில் அனுமதியில்லாமல் ஏன் வெளியில் சென்றீர்கள்?' என்று கேட்டு இடைநீக்கம் செய்துள்ளார். அந்தப் பெண் அதிகாரியிடம் விசாகா கமிட்டியினர் பெற்ற கடிதத்தில், "இப்போதும் புகார் கொடுக்க விரும்பவில்லை. எதிர்காலத்திலும் புகார் கொடுக்க விரும்பவில்லை" என எழுதி வாங்கியுள்ளனர்.

இந்தப் புகாரில் ஏதோ அழுத்தம் இருப்பதாக உணர்கிறேன். இந்த விவகாரத்தில் யூஜினை சஸ்பெண்ட் செய்துள்ளோம். இப்போது காபந்து அரசாக இருப்பதால் நாங்கள் அலுவல் பணிகளைப் பார்ப்பதில்லை. இது செயலர் எடுத்த நடவடிக்கைதான்" என்றார்.

பணிமாறுதல் புதிதல்ல!

இறுதியாக, கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் இயக்குநராக இருந்த கருணாகரனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "கூட்டுறவு சட்டப்படி மேலாண்மை இயக்குநர் மற்றும் சங்க தலைவர் இருவரும் காசோலையில் கையொப்பமிட்ட பிறகுதான் பணம் எடுக்க இயலும். மேலும் அனைத்து செலவுகளுக்கும் தலைவர் உள்ளிட்ட நிர்வாக குழு தீர்மானத்தின் அடிப்படையிலேயே நிதியை செலவு செய்ய இயலும். எனவே காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றுள்ள நிதி முறைகேடுகளுக்கு தலைவரே முழு பொறுப்பாவார்.

பட மூலாதாரம், Govt of Tamil Nadu

இந்த விவகாரத்தில், சாரதி சுப்புராஜ், மோகன்குமார் மற்றும் சில நிர்வாக இயக்குநர்கள் மீது மட்டும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சட்டம் பிரிவு 81ன்கீழ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு தலைவர் மற்றும் நிர்வாக குழு தவறு செய்துள்ளது என நிரூபணம் ஆகியுள்ளது.

எனவே காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் வள்ளிநாயகம் உள்ளிட்ட ஐந்து நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற நியாயமான நடவடிக்கைகளை எடுத்ததற்காக பலமுறை மாறுதல் செய்யப்பட்டுள்ளேன். இது ஒன்றும் புதிதல்ல. அரசு உத்தரவின்படி புதிய பணியிடத்தில் சிறப்பாகச் செயல்படுவேன்" என்கிறார்.

பிறழ்சாட்சியாக மாறிய பெண் அதிகாரி!

அதிகாரி மீதான பாலியல் புகார் குறித்து கேட்டபோது, "யூஜின் மீதுள்ள பாலியல் புகார் தொடர்பாக எனக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த செய்தியை உதவி இயக்குநருக்கு அனுப்பி விசாகா கமிட்டி அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டேன். அந்தப் பெண்ணிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது அவர் பிறழ்சாட்சியாக மாறி வாட்ஸ் ஆப் புகாரை ஊர்ஜிதம் செய்யவில்லை. மேலும், `இயக்குநர் அலுவலகத்தில் பாரபட்சமாக விசாரணை நடத்தப்பட்டது' என எழுத்து மூலமாகவும் எந்தப் புகாரையும் அவர் கொடுக்கவில்லை. சில விஷமிகள் கொடுத்த மொட்டை பெட்டிஷனை வைத்து தற்போது விவகாரத்தை திசை திருப்புகிறார்கள்" என்கிறார்.

`பட்டு நூல் சொசைட்டி முறைகேடு விவகாரத்தை மூடி மறைக்கும் வகையில் இந்த விவகாரத்தை சிலர் பேசி வருகின்றனர்' என்கின்றனர் கைத்தறித் துறை வட்டாரத்தில்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: