ராகுல் காந்தி: விவசாயிகள் போராட்டம், சீன எல்லை பிரச்னை - மத்திய அரசுக்கு விடுக்கும் அடுக்கடுக்கான கேள்விகள்

காங்கிரஸ்

பட மூலாதாரம், AICC

டெல்லியில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் தங்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் விவசாயிகளை தீவிரவாதிகள் போல நடத்துவதா என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய ராகுல் காந்தி, விவசாயிகள் பிரச்னை, இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்னை போன்றவற்றில் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார்.

"இந்தியாவில் தற்போது விவசாயிகளை மத்திய அரசு நடத்தும் முறையைப் பார்த்து நாடே அதிர்ச்சி அடைந்திருக்கிறது. சொந்த குடிமக்களையே தீவிரவாதிகள் போல மோதி அரசு நடத்துகிறது," என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

"விவசாயிகள் தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டவே வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்துகிறார்கள். சமீபத்தில் செங்கோட்டைக்குள் சிலர் நுழைந்த பிறகு நடந்த அசம்பாவிதம் தொடர்பாக ஏற்கெனவே நான் கேள்வி எழுப்பியிருக்கிறேன். முதலில் செங்கோட்டைக்குள் நுழைந்து பிரச்னை பெரிதாக எப்படி அனுமதிக்கப்பட்டது என்பதை இந்திய உள்துறை அமைச்சர்தான் தெளிவுபடுத்த வேண்டும்," என்றார் ராகுல் காந்தி.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி எதற்காக தேர்வு செய்யப்பட்டாரோ அந்தப்பணியை அவர் சரிவர செய்ய வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தினார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் போல இந்திய அரசு நடத்துவது வேதனை அளிக்கிறது. மத்தியில் ஆளும் மோதி அரசுக்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பவர்கள் தவிர அனைவரும் தீவிரவாதிகள் போலவே தெரிகிறார்கள் என்று ராகுல் கூறினார்.

இந்தியா, சீனா இடையிலான எல்லை பதற்றம் தொடருவது குறித்துப் பேசிய அவர், "உண்மையில் எல்லை விவகாரத்தில் சீனாவின் அத்துமீறல்களை தடுக்க இந்திய அரசால் முடியவில்லை. அங்குள்ள நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மோதி அரசு தவறி விட்டது," என்று ராகுல் குற்றம்சாட்டினார்.

எல்லை தாண்டி சீனா அத்துமீறி ஊடுருவி இந்திய மண்ணை ஆக்கிரமிக்கும் செயல் தேசத்துக்கு மிகவும் ஆபத்தானது என்று ராகுல் குறிப்பிட்டார்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனா, ஆயிரம் கிலோ மீட்டர்கள் அளவுக்கு கபளீகரம் செய்து விட்டது. இத்தனை நடந்தபோதும் பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதியை மோதி அரசு அதிகரிக்கவில்லை. அப்படியென்றால் எல்லை தாண்டி வரும் சீன படையினரை கட்டுப்படுத்தவோ எதிர்கொள்ளவோ எங்களுடைய ராணுவத்தை தயாராக வைத்திருக்க மாட்டோம். அதற்கு நிதி ஆதரவைத்தர மாட்டோம் என்ற வலுவான செய்தியை சீனாவுக்கு விடுக்கிறாரா நரேந்திர மோதி என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

லடாக்கில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்கள் கடும் சிக்கலான சூழலில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது நாட்டை பாதுகாக்கும் அவர்கள், 100 சதவீதம் பங்களிப்பை வழங்க அவர்களின் நலன்களுக்கு 110 சதவீத பங்களிப்பை இந்திய அரசு வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார் ராகுல் காந்தி.

எல்லையில் ஊடுருவலை தடுக்க அரண்களை அமைப்பதற்கு பதிலாக, தேசத்துக்குள்ளேயே விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் போர்வையில் அரண்களை அமைத்து வழிகளை துண்டித்திருக்கிறது இந்திய அரசு என்று ராகுல் குற்றம்சாட்டினார். டெல்லியை இணைக்கும் எல்லை பகுதிகளில் தேச எல்லையில் இருப்பது போன்ற கம்பிகளால் சூழப்பட்ட தடுப்பு அரண்களை காவல்துறையினர் போட்டிருப்பது மிகவும் துயரத்தை தருகிறது என்று ராகுல் குறிப்பிட்டார்.

என்னைப் பொறுத்தவரை, தங்களுடைய போராட்டத்தில் இருந்து விவசாயிகள் பின்வாங்கப்போவதில்லை. அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள். கடைசியில் பின்வாங்கப்போவது அரசாங்கம்தான் என்றார் ராகுல் காந்தி.

முன்னதாக கடந்த திங்கட்கிழமை வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடும் விவசாயிகள் அமைப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனஸி்ட் தலைவர் மொஹம்மத் சலிம், பத்திரிகையாளர்கள், ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் சிலர் உள்பட சுமார் 250 ட்விட்டர் கணக்குகளை முடக்க மத்திய உள்துறை உத்தரவிட்டிருந்தது. கிசான் ஏக்தா மோர்ச்சா, கேரவன் இதழ் உள்ளிட்டவை அதில் அடங்கும்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

அந்த நடவடிக்கையை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட ராகுல் காந்தி, மோதியின் சுய ஆளுகை பாணியே, தனக்கு எதிரானவர்களை அமைதியாக்குவது, முடக்குவது, பிறகு நசுக்குவது என்று குறிப்பிட்டிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: