இந்திய பட்ஜெட் 2021: ரூ. 15.06 லட்சம் கோடி கடன் வாங்கும் மத்திய அரசு திட்டம் நல்லதா கெட்டதா?

பானுமூர்த்தி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கெளதமன் முராரி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி, 2021-22ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் 15.06 லட்சம் கோடி ரூபாயை கடன் வாங்கி செலவீனங்களை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

இப்படி கூடுதலாக கடன் வாங்கி செலவழிப்பது, மத்திய அரசின் திட்டங்களை நடத்துவது எல்லாம் நல்லதா கெட்டதா? இதனால் பொருளாதார ரீதியாக என்ன நன்மைகள் என பெங்களூரில் இருக்கும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் துணை வேந்தர் பானு மூர்த்தியிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"15 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிச் செலவழிக்க இருப்பது, இந்திய பொருளாதார நடவடிக்கைகளை மீட்பதற்குத் தான்" எனத் தொடங்கினார்.

"பொதுவாக உலகில் எல்லா பொருளாதாரங்களும், கொரோனா நெருக்கடியில் இருந்து மீள கூடுதலாக பணத்தைச் செலவழிக்க வேண்டும் என்கிறார்கள். அந்த வகையில்தான் இந்திய அரசும் செயல்பட்டிருக்கிறது.

பொருளாதாரத்தில் வளர்ச்சி மற்றும் மேம்பாடு என இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. இவ்விரண்டுக்கும் இடையில் எப்போதுமே ஓர் இழுபறி இருக்கும். இந்தியா வளர்ச்சி, மேம்பாடு என இரண்டையும் சமன் செய்ய முயற்சித்திருக்கிறது. எனவே இந்தியா பொருளாதார ரீதியாக மீளவும் செய்யும், அதே நேரத்தில் ஏழை எளிய மக்களுக்கு பண உதவியும் கிடைக்கும்.

உதாரணமாக பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருட காலமாக ஏழை மக்களுக்காக தொடர்ந்து செலவழிக்கப்பட்டு வருகிறது. மேலும் செலவழிக்க இருப்பதாகக் கூறுகிறார்கள். இவை எல்லாமே பொருளாதாரத்தை மீட்பதோடு மட்டுமின்றி, மக்கள் கொரோனா நெருக்கடியில் இருந்து மீளவும் கொஞ்சம் உதவியாக இருக்கும்" என்றார்.

மக்களுக்கு உதவும் கொரோனா நிவாரணங்கள் மற்றும் இந்திய பொருளாதார வளர்ச்சி எல்லாம் ஒரு பக்கம் இருக்க, சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் மத்தியில் தர மதிப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்கும் ரேட்டிங்கள் அதிர்வலைகளை உண்டாக்காதா, இந்தியாவுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடுகள் பாதிக்கப்படாதா, என கேட்டோம்.

பானுமூர்த்தி

பட மூலாதாரம், BHANUMURTHY

படக்குறிப்பு, என்.ஆர். பானுமூர்த்தி

"ரேட்டிங் முகமைகளிடம் இருந்து இந்தியாவுக்கு அழுத்தம் இருக்கத்தான் செய்யும். ரேட்டிங் முகமைகளின் நெகட்டிவ் மதிப்பீடுகள், பொருளாதாரத்தின் மீது உணரப்படக் கூடாது என சமீபத்தில் விவாதிக்கப்பட்டது.

அரசின் பொருளாதார சர்வேயிலேயே ரேட்டிங் முகமைகள் இந்தியாவோடு பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியா தான் உலகிலேயே அதிவேகமாக வளரக் கூடிய பெரிய பொருளாதாரம் என சர்வதேச பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எஃப்) கணித்திருக்கிறது.

இப்படி இருக்கும் போது ரேட்டிங் முகமைகள் இந்தியாவுக்கு நெகட்டிவ் மதிப்பீடுகளை வழங்குவது எப்படி நியாயப்படுத்த முடியும் என விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்திய பொருளாதாரத்துக்கு நல்ல ரேட்டிங் இல்லை என்ற போதும், ரெசசன் மேகங்கள் சூழ்ந்து இருந்த போதும், நடப்பு 2020-21 நிதி ஆண்டில், உலகிலேயே அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்ற நாடு இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சர் கூட தன் உரையில் செலவினங்களை ஒத்திவைத்து பொருளாதார நெருக்கடியில் இருப்பதற்கு பதிலாக, செலவினங்களை அதிகரித்து பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளி வருவது மேல் என குறிப்பிட்டிருந்தார். எனவே செலவழிப்பது தான் இப்போதைக்கு சரியான தீர்வு" என்கிறார் பானு மூர்த்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: