இளையராஜாவுக்கு நீதிமன்றம் நிபந்தனை: பிரசாத் ஸ்டூடியோவுடன் பேச்சு நடத்த உத்தரவு

இளையராஜா

பட மூலாதாரம், ILAYARAJA FB

(இன்றைய நாளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை வெளியேற்றியதை எதிர்த்தும் தியானம் செய்ய ஒரு நாள் அனுமதிக்கோரியும் இளையராஜ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக கடந்த 4 நாட்களாக விசாரணை நடைபெற்றது.

அப்போது பிரசாத் ஸ்டூடியோ தரப்பில், தங்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற்றால் இளையராஜாவையும் அவரது உதவியாளர்களையும் ஸ்டூடியோவிற்குள் அனுமதிக்க தயார் என தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம் அவர் இசையமைத்த பகுதியின் இடத்துக்கு உரிமை கோரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட இளையராஜா, தனது வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்ல இளையராஜாவுக்கு ஒருநாள் அனுமதி வழங்கியுள்ளார்.

"பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று இசைக்கருவிகளை எடுக்கும் தேதியை இரு தரப்பும் பேசி முடிவு செய்யலாம். அதற்கான நேரத்தை பொறுத்தவரை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்குள் அதாவது அந்த 7 மணி நேரத்திற்குள் பேசி முடிக்க வேண்டும்," என நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், "இளையராஜா நடத்தும் பேச்சுவார்த்தையின்போது ஸ்டூடியோவில் தியானம் மேற்கொள்வது குறித்து விவாதித்து முடிவெடுத்துக்கொள்ளலாம்" என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ செல்லும்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அனைத்தையும் கவனிக்கும் வழக்கறிஞர் ஆணையராக லட்சுமிநாராயணனை நீதிமன்றம் நியமித்துள்ளது.

80 வயதுக்கு மேல் தபால் வாக்கு: எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை முதல் ஆன்லைன் விசாரணை

80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் மூலம் வாக்களிக்களிக்கும் முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துவதை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கு ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2021ல் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி அளிக்கப்படுவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

முதியோர் வாக்கு

பட மூலாதாரம், Getty Images

அப்படிச் செய்தால் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்ற ரகசியத்தைக் காக்க முடியாது என்பது உள்ளிட்ட காரணங்களால் தபால் வாக்கு முறையை அறிமுகப்படுத்தக்கூடாது என தி.மு.கவின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, தி.மு.க சார்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் தீபக் என்பவரும் இதே போன்ற ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார். தி.மு.க. தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சுப்பைய்யா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. தீபக் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே துரை என்ற 86 வயது முதியவர் ஒருவரும் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஆகவே தங்கள் வழக்கையும் அதே தேதியில் ஒன்றாக விசாரிக்க வேண்டுமென தி.மு.க. தரப்பு கோரியது. இதையடுத்து டிசம்பர் 3 இயக்கம் தொடர்ந்த வழக்கு, தி.மு.க. தொடர்ந்த வழக்கு ஆகியவை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அன்றைய தினம் ஒரே அமர்வில் இந்த வழக்குகள் விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாடு இருந்தாலும்ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி

ஜல்லிக்கட்டு

பொங்கல் திருவிழாவை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக 50 சதவீதம் அளவுக்கு பார்வையாளர்களுடன் இந்த நிகழ்வை நடத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை ஒட்டி தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு எனப்படும் மாடு பிடிக்கும் நிகழ்ச்சி நடந்துவருகிறது. 2017ஆம் ஆண்டு முதல் புதிய விதிமுறைகளுடன் இந்தப் போட்டி நடந்து வருகிறது. இந்த நிலையில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, புதிய விதிமுறைகளுடன் இந்த ஆண்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது.

அதன்படி, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு பிடிக்கும் நிகழ்ச்சிகளில் 300க்கு மிகாமல் மாடு பிடி வீரர்கள் கலந்துகொள்ளலாம். எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவுக்கு ஏற்ப, 50 சதவீதத்திற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் உடல்வெப்ப பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

மாடு பிடிக்கும் வீரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையத்திலிருந்து கோவிட் - 19 தொற்று இல்லையென சான்று பெற்றிருக்க வேண்டும். பார்வையாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதும் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :