ஜல்லிக்கட்டு ராவணன்: காமன்வெல்தில் தங்கம் வென்றதற்கு பரிசாய் கிடைத்த காளை

- எழுதியவர், ஜெயலக்ஷ்மி ராமலிங்கம்
- பதவி, பிபிசி தமிழ்
உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் நெருங்க முடியாத அளவில் களத்தில் கெத்து காட்டிய காளைதான் ராவணன். அதோடு ஜல்லிக்கட்டு போட்டியில் ராவணன் காளை இரண்டாவது பரிசு வாங்கியது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் ராவணன் காளையே அதன் உரிமையாளர் அனுராதாவிற்கு கிடைத்த பரிசுதான் என்பது அதிகம் அறியப்படாத ஒன்று.
2019இல் நடந்த காமன்வெல்த் போட்டியில் அனுராதா பளுதூக்குதலில் தங்கம் வென்றதற்கு அவரது குடும்ப நண்பர் ஒருவர் பரிசாக வழங்கிய காளைதான் ராவணன்.
பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்த ராவணன் காளையைப் பற்றி அதன் உரிமையாளரான புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் பளுதூக்குதல் வீராங்கனை அனுராதாவிடம் பேசியது பிபிசி தமிழ்.
அனுராதா (26), காமன்வெல்த் போட்டியிலிருந்து தெற்காசிய போட்டிகள் வரை பல பதக்கங்களை வாங்கியுள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தமிழகத்திலிருந்து தங்கம் வென்ற முதல் வீராங்கனை அவர். 87 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றவர் அனுராதா. டிசம்பர் 2019இல் நேபாளில் நடந்த தெற்காசியப் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார் அனுராதா.
அவர் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதற்கு அனுராதாவின் சகோதரரின் நண்பர் வினோத் என்பவர் பரிசாக வழங்கிய காளைதான் ராவணன். அவரும் தனக்கு ஒரு சகோதரர்தான் என்கிறார் அனுராதா.
காளை வளர்ப்பதன் நுணுக்கங்கள் குறித்து அனுராதாவின் குடும்பத்தினர், வினோத்திடமே கேட்டுத் தெரிந்துகொண்டார்களாம்.
யார் இந்த அனுராதா?
அனுராதா புதுக்கோட்டை மாவட்டம் நெமலிபட்டி கிராமத்தை சேர்ந்தவர். அவரது பெற்றோர் இருவருமே கூலித் தொழிலாளிகள். அவரன் தந்தை பொன்ராஜ், அனுராதா 9ஆம் வகுப்பு படிக்கும்போது சாலை விபத்தில் இறந்தார்.

தந்தை மரணத்துக்கு பின்னர் அனுராதாவின் தாய் ராணி, கூலி வேலை செய்தே அனுராதாவையும் அவரது சகோதரர் மாரிமுத்துவையும் படிக்க வைத்தார்.
மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டியிலிருந்து பல்கலைகழகங்களுக்கு இடையே நடக்கும் பளுதூக்கும் போட்டி வரை கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்றுள்ளார். அதன்பிறகு போட்டித் தேர்வு எழுதி உதவி காவல் ஆய்வாளராக தேர்வாகி சிறிது காலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றினார்.
பின்னர் காவல்துறை சார்பாக தமிழ்நாடு அளவில் நடந்த பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். அதில் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அளவிலான போட்டியில் தங்கம் வென்றார். அதன்பிறகு பாட்டியாலாவில் தேசிய விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்றார்.
அங்கே கிடைத்த ஊக்கமே, அவரை காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்ல தூண்டுகோலாக அமைந்தது.

அவனியாபுரம் தொடங்கி அலங்காநல்லுர் வரை
தொடக்கத்தில் சில மாடுகளை அனுராதாவின் சகோதரர் வாங்கி வந்து வளர்த்து அதை ஜல்லிக்கட்டுக்கும் அனுப்பியுள்ளார். ஆனால் பெரிதளவில் எந்த மாடும் பேசப்படவில்லை.
அலங்காநல்லூரில் களமிறக்க ராவணனுக்கு முதலில் அங்கே அனுமதி கிடைக்கவில்லை. அதன்பின் அவனியாபுரத்தில் ராவணனை முதன்முதலாக களம் இறக்கினோம். அவனியாபுரத்தில் ராவணன் காளையின் திறனைக்கண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது என்று கூறினார் அனுராதா.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்தபோது அனுராதா பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பளுதூக்குக்கும் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இதனால் அவரால் ராவணன் காளை செய்த சாகசத்தை நேரில் காணமுடியவில்லை. தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பையும் அவரால் காண முடியவில்லை. அதன்பின் அவர் காணொளி மூலமாக தன் காளையின் சாகசத்தை கண்டுரசித்ததாகக் கூறினார் அனுராதா.
ராவணன் காளை சமூக வலைதளத்தில் பெரிதும் பேசப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் தொலைபேசி மூலம் அனுராதாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததாகக் கூறினார்.

தன்னுடைய காளை இரண்டாம் இடத்தைப் பிடித்ததும் மக்கள் மனதில் இடம் பிடித்ததும் தனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தான் செய்த சாதனையைக் காட்டிலும் தன் காளை செய்த சாகசம் அனைவர் மனதிலும் இடம் பிடித்துவிட்டது என்பது மகிழ்ச்சி தருகிறது. மேலும் தானே சாதித்தது போன்ற ஒரு பெருமையைத் தேடி தந்துள்ளது என்றார் அனுராதா.
ராவணனின் இந்த சாதனைக்கு தன்னுடைய சகோதரரின் பங்களிப்பு பெரிதும் இருப்பதாகக் கூறினார் அனுராதா.
காளை வளர்ப்பில் ஈடுபாடு வந்தது எப்படி?
செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் ஈடுபாடு கொண்ட அனுராதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 2017ல் தமிழகம் முழுவதும் பரவலாக நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு காளை வளர்ப்பதில் ஈடுபாடு வந்தது.
எவ்வளவு பொருளாதார நெருக்கடி வந்தாலும் காளைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதில் அனுராதாவின் சகோதரர் உறுதியுடன் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
அதோடு அல்லாமல் இன்னும் இது போன்று காளைகளை வளர்த்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் அனுராதா. இப்போது ஏழு காளைகளை வளர்ப்பதாகவும் கூறியுள்ளார்.
ராவணன் என்று பெயர் வைத்தது ஏன்?
பெரிய கொம்புகளுடன் தோற்றத்தில் முரட்டுத்தனமாக இருந்ததால் இந்தக் காளைக்கு ராவணன் என பெயர் சூட்டினோம் என்றார் அனுராதா. வீட்டுக்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே பிற காளைகள் நன்கு பழகிவிடும். ஆனால் ராவணன் காளையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆறு மாதங்கள் ஆனது என்றார் அனுராதா.
தான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இன்னும் தகுதி பெறவில்லை என்றாலும் அதற்காகத் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார் அனுராதா.
ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து இந்தியாவுக்கு பல போட்டிகளில் பெருமை சேர்த்து ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்காக பயிற்சியில் இருக்கும் அனுராதா, ஜல்லிக்கட்டில் தன் காளை தவற விட்ட முதல் இடத்தை ஒலிம்பிக்கில் தாம் பிடிக்க வேண்டும் என்ற உறுதியோடு இருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













