ஹெச்.ராஜா மீதான வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

பட மூலாதாரம், H.RAJA BJP
உயர் நீதிமன்றத்தையும் காவல்துறையையும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா அவதூறாகப் பேசிய விவகாரத்தில் இரண்டு மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல்செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்லத்தின்போது காவல்துறையினருக்கும் ராஜாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஊர்வலம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறையினர் கூறியபோது, உயர்நீதிமன்றத்தை தகாத வார்த்தைகளால் பேசினார்ஹெச்.ராஜா. மேலும் காவல்துறையினர் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, உயர்நீதிமன்றத்தையும் காவல்துறையையும் அவதூறாகப் பேசியதாக ராஜா உள்ளிட்ட 8 பேர் மீது சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுவது, நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தற்போதுவரை திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், துரைசாமி என்ற வழக்கறிஞர் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.
அந்த மனுவில், "சென்னை உயர் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில், வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை; வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. ஆகவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, வழக்கை நடத்த உத்தரவிட வேண்டுமென," கோரியிருந்தார்.
இந்த வழக்கு வியாழக்கிழமையன்று, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. ஒரு வருடத்திற்கு மேலாகியும் இந்த வழக்கில் ஏன் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லையெனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
முன்னதாக, இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்தது. அப்போது ஹெச். ராஜா நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதையடுத்து, விவகாரம் முடித்துவைக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













