தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு - தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், STRDEL via getty images
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் புதிய வசதி செய்து தரப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிவிருக்கும் நிலையில், தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிடவும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்கவும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரியான உமேஷ் சின்கா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னை வந்தனர். இந்தக் குழு நேற்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினர்.
இன்று 2வது நாளாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்குப் பிறகு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது.
இதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா, 80 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் முறையில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
"சில அரசியல் கட்சிகள் இந்த முறை குறித்து சில சந்தேகங்களை எழுப்பியுள்ளன. யார் யார் இப்படி வாக்களிக்க விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பது எப்படித் தெரியும், ரகசியத் தன்மை எப்படிப் பாதுகாக்கப்படும் என்பதெல்லாம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பான விதிமுறைகள் விரைவில் வகுக்கப்படும். இந்த முறையில் தேர்தல் அதிகாரி அவர்களுடைய வீட்டிற்கு சென்று அந்த வாக்குச்சீட்டை பெறுவார். இது ஒரு நடமாடும் வாக்குச் சாவடியைப் போல இருக்கும். இந்த நடமாடும் குழுவுடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் செல்ல விரும்பினால் செல்லலாம்," என்றார் உமேஷ் சின்ஹா.
முதியவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்துவதற்கு தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது குறித்து கேட்டபோது, "இது மிக முற்போக்கான நடவடிக்கை. உடல் நலக் குறைவுள்ளவர்களை வாக்குச்சாவடிக்கு வரச் சொல்வது சரியாக இருக்காது. உடல்நலக் குறைவுள்ளவர்களும் இந்த தேர்தல் நடவடிக்கையில் பங்கேற்க ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கான எந்திரங்கள் வந்து இறங்கியுள்ள நிலையில், அந்த எந்திரங்களைத் தயார் செய்யும் பணிகள் ஜனவரி 31க்குள் நிறைவடையும் என்றும் உமேஷ் சின்ஹா கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
"கோவிட் நோய் குறைந்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது. இருந்தபோதும் வாக்குச் சாவடிகள் மிகுந்த கவனத்துடன் கையாளப்படும். பிகாரில் தேர்தலை நடத்திய அதிகாரிகளின் அனுபவம் இதில் பயன்படுத்திக்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் தேர்தல் எப்போதுமே அமைதியாக நடந்திருக்கிறது. தேர்தல் செலவு குறித்து இங்கே மிகக் கவனமாக இருப்பார்கள். இதில் மிகக் கண்டிப்பாக நடந்துகொள்வோம். வாக்காளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்" என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் முன்கூட்டியே நடைபெறுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, தேர்தல் தேதியை முடிவுசெய்ய பல்வேறு விஷயங்கள் மனதில் கொள்ளப்படும் என்றும் தங்களது குழு இது தொடர்பான தகவல்கள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கும் என்றும் மே 24க்குள் தேர்தல் நடவடிக்கைகளை நிறைவுசெய்ய வேண்டும் என்றும் இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
பல கட்சிகள் ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது குறித்து தேர்தல் ஆணையம் மனதில் கொள்ளும் என்றும் கன்னியாகுமரி இடைத்தேர்தல் குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எல்லா வாக்குச் சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் 'விவிபேட்'கள் இருக்கும் என்றும் ஆகவே அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
"பிகார் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையைக் குறைத்தோம். அதுபோல இங்கேயும் ஒரு வாக்குச் சாவடிக்கு ஆயிரம் பேருக்கு மேல் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும். அப்படி இருந்தால் அந்த வாக்குச் சாவடி இரண்டாகப் பிரிக்கப்படும்" என உமேஷ் சின்ஹா கூறினார்.
தேர்தல் ஆணைய அதிகாரிகளின் இந்தக் குழு நாளை புதுச்சேரியில் ஆய்வுகளையும் ஆலோசனைகளையும் மேற்கொள்கிறது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












