கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட வழக்கு - நீதிமன்றம் புதிய உத்தரவு

hiv aids

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

சிவகாசி அரசு மருத்துவமனையில் தவறுதலாக எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு மாதம் 7,500 ரூபாய் பராமரிப்புச் செலவுக்காக பணம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மனைவியான இவருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில், 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரத்தம் செலுத்தப்பட்ட சில தினங்களுக்குப் பிறகு, ரத்தம் கொடுத்த நபர் தாமாக முன்வந்து தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்தது என்று அறிவித்தார்.

தன்னுடைய ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள அவர் முற்பட்டபோது, எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த பெண்ணுக்கு உடலில் செலுத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

பெண்ணின் உடலில் தவறுதலாக எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்ட இந்த விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை என்று மகப்பேறின் பின் உறுதியானது.

சிவகாசி அரசு மருத்துவமனையில் தானமாகப் பெற்ற ரத்ததத்தை முறையாக பரிசோதித்து அப்பெண்ணின் உடலில் ஏற்றாததுதான் இதற்கு காரணம் என்றும், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி உயர் நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் கடந்த ஆண்டு 2019 ஜனவரி மாதம் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கும் எச்.ஐ.வி பாதிப்பு இல்லை என்பது மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டது.

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட வழக்கு - நீதிமன்றம் புதிய உத்தரவு

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையே இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கிருபாகரன், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும், அதில் பத்து லட்சம் ரூபாய் அந்தப் பெண்ணின் பெயரில் பொதுத்துறை வங்கி ஒன்றில் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள 15 லட்சம் ரூபாய் அவருடைய இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும் , பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 450 சதுர அடிக்கு குறையாமல் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட சுற்றுச் சுவருடன் கூடிய வீடு கட்டித்தர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் அந்த பெண்ணிற்கு அரசு நிரந்தர வேலை, பயணம் செய்ய இருசக்கர வாகனம், வீட்டிற்கு தனியாக குடிநீர் வசதி என அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க உத்தவிட்டிருந்தார் அனைத்து உத்தரவுகளும் நிறைவேற்ற பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண் காணொலிக் காட்சி வாயிலாக முன்னிலையாகி தனக்கு மருத்துவர்கள் சத்தான உணவு பழங்கள் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அதற்கான செலவு செய்ய தன்னிடம் வசதி இல்லை எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் அந்த பெண்ணிற்கு அரசு மாதந்தோறும் ரூபாய் 7,500 ரூபாய் உணவிற்காக வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவரின் கல்வித் தகுதிக்கு ஏற்ப இளநிலை பணியாளர் வழங்குவது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட இந்த பெண்ணிற்கான மருத்துவ வசதிகள் ஏதேனும், தாம்பரத்தில் உள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் உள்ளதா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :