தமிழில் பேசிய நரேந்திர மோதி - "அச்சமில்லை, அச்சமில்லை; இனி ஒரு விதி செய்வோம்...." - என்ன பேசினார்?

மோதி

பட மூலாதாரம், PM MODI twitter

இந்திய இளைஞர்கள் பாரதியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்றும் பாரதியின் படைப்புகளைப் படித்து, அவற்றிலிருந்து உத்வேகம் பெற வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோதி கூறியிருக்கிறார்.

பாரதியாரின் பிறந்த நாளையொட்டி வானவில் பண்பாட்டு மையம், உலகளாவிய பாரதி திருவிழாவை நடத்தியது. அதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்டோர் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினர்.

முதலில் பேசிய முதல்வர் பழனிசாமி, "சுதந்திர இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என மாபெரும் கனவுகளைச் சுமந்து கவிதைகள் புனைந்த தீர்க்கதரிசி பாரதி" என்று குறிப்பிட்டார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இதற்குப் பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "சுப்பிரமணிய பாரதியை எப்படி விவரிப்பது? மிகவும் கடினமான கேள்வி இது. பாரதியாரை எந்த ஒரு தொழிலுக்குள்ளும் பரிமாணத்திற்குள்ளும் அடைக்க முடியாது. அவர் கவிஞர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி, பத்திரிகை ஆசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர் என பல பரிமாணங்களைக் கொண்டவர்" என்று குறிப்பிட்டார்.

மேலும், பாரதி வாரணாசியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் எனவும் அந்தத் தொகுதியின் பிரதிநிதியாக தான் இருப்பதாகவும் குறிப்பிட்ட பிரதமர் மோதி, "பாரதியின் மொத்த படைப்புகள் தற்போது 16 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. 39 ஆண்டுகளுக்குள் அவ்வளவு எழுதியிருக்கிறார் அவர்" என்று ஆச்சரியம் தெரிவித்தார்.

"அவரது எழுத்துகள் மிகப் பிரகாசமான எதிர்காலத்திற்கான வழிகாட்டி. நம் இளைஞர்கள் பாரதியாரிடமிருந்து நிறைய கற்க முடியும். குறிப்பாக, துணிச்சலைக் கற்கலாம். பயம் என்றால் பாரதிக்கு என்னவென்றே தெரியாது. "அச்சமில்லை... அச்சமில்லை... அச்சமென்பதில்லையே.. இச்சகத்தில் உளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்... அச்சமென்பதில்லையே" என்று பாடினார். இந்த உணர்வை நம் இளைஞர்களிடம் பார்க்கிறேன். எதையும் செய்ய முடியும் என்ற அந்த உணர்வு, நமது நாட்டிற்கும் இந்த கிரகத்திற்கும் பெரும் நன்மைகளைச் செய்ய முடியும்" என்று குறிப்பிட்டார்.

கடந்த காலப் பெருமிதங்களில் வாழ்வது நமக்குப் நன்மை பயக்காது என பாரதி எச்சரித்ததாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

"பழமையும் புதுமையும் கலந்த கலவையையே பாரதியார் விரும்பினார். அவர் தமிழ் மொழியையும் இந்திய தாய்நாட்டையும் இரு கண்களாக கருதினார். பழங்கால இந்தியாவின் பெருமை, வேதங்கள் பெருமை, உபநிஷத்துகள், நம்முடைய பாரம்பரியம், கலாசாரம், கடந்த காலம் ஆகியவற்றை அவர் பாடினார். அதே நேரம், இதுபோல கடந்த காலங்களிலேயே வாழ்வது நமக்கு நன்மை பயக்காது என்று எச்சரித்தார். அறிவியல் உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று கூறினார்" என்றார்.

மேலும், பாரதியாரின் முற்போக்குச் சித்தாந்தத்தில் பெண்களுக்கு பிரதானமான பங்கிருந்தது என்றும் பாரதி பெண்கள் தலைநிமிர்ந்து நடக்க வேண்டுமென்றும் கூறியதை சுட்டிக்காட்டியவர், அவருடைய அந்தப் பார்வை நமக்கு உத்வேகமூட்டுகிறது என்றார்.

"பிளவுபட்ட எந்த சமூகமும் முன்னேறாது என்பதை பாரதி உணர்ந்திருந்தார். ஆனால், சமூக தீமைகளை, சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுகொள்ளாத அரசியல் சுதந்திரம் எவ்வளவு வெறுமையானது என்பது குறித்தும் பேசினார். நம் இளைஞர்கள் பாரதியிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. நம் இளைஞர்கள் பாரதியின் படைப்புகளைப் படித்து, அவற்றிலிருந்து உத்வேகம் பெற வேண்டும்" என்று கூறி தனது உரையை பிரதமர் நிறைவுசெய்தார்.

முன்னதாக, பாரதியாரின் அச்சமில்லை, அச்சமில்லை என்ற வரிகளையும், இனி ஒரு விதி செய்வோம். அதை எந்த நாளும் காப்போம், தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம் என்ற வரிகளையும் தமிழிலேயே உச்சரித்து அதன் விளக்கத்தையும் அளித்தார் பிரதமர் நரேந்திர மோதி.

இந்த விழாவில் பாரதியின் எழுத்துகளைத் தொகுத்த சீனி. விஸ்வநாதனுக்கு பாரதி விருது வழங்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: