இந்திரா காந்தி - ஜெயபிரகாஷ் நாராயண் இடையேயான உறவில் கசப்புணர்வு நிலவியது ஏன்?

இந்திரா காந்தி - ஜெயபிரகாஷ் நாராயண் இடையேயான உறவில் கசப்புணர்வு நிலவியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி

1974ஆம் ஆண்டுவாக்கில், இந்தியா முழுவதும் இந்திரா காந்திக்கு எதிராகவும், ஜே.பி.க்கு ஆதரவாகவும் சூழல் நிலவியது. ஜே.பி. நாட்டை மீட்பவராகக் காணப்பட்டார். அவரது முழு புரட்சியின் முழக்கமும் பொது மக்களை ஈர்க்கத் தொடங்கியது மட்டுமல்லாமல், கட்சியற்ற ஜனநாயகம் என்ற அவரது கருத்து தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஜே.பி.யுடன் மோதுவதற்குப் பதிலாக, அவரையும் சேர்த்துக் கொண்டு செல்லும் முயற்சி இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து ஒரு கோரிக்கை இருந்தது. அனைவரின் நெருக்குதல் காரணமாக, இந்திரா காந்தி தயக்கத்துடன் ஜே.பி.யை சந்திக்க ஒப்புக்கொண்டார்.

இந்த உரையாடல் இந்திராவுக்கும் ஜே.பி.க்கும் இடையில் மட்டுமே இருக்கும் என்று ஜே.பி.யிடம் கூறப்பட்டது.

1974 நவம்பர் 1ஆம் தேதி இரவு இந்திராவைச் சந்திக்க ஜேபி அவரது எண். 1, சஃப்தர்ஜங் சாலை இல்லத்திற்கு சென்றபோது, ​​அங்கு ஜேபி அமர்ந்தவுடன் ஜக்ஜீவன் ராமையும் அழைக்குமாறு இந்திரா கூறினார்.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர், "ஜிந்தகி கி கேரவன்" என்ற தனது சுயசரிதையில் "இதில் ஜே.பிக்கு என்ன ஆட்சேபம் இருக்க முடியும்?" என ஜெகஜீவன் ராம் கூறியதாக எழுதுகிறார்.

"பிஹார் சட்டசபையை நிறுத்தி வைப்பது கூட பரவாயில்லை, ஆனால் சட்டசபையை கலைக்கும் விஷயம் ஏன்? இப்போதே ஏன் அதற்கு வாக்குறுதி அளிக்க வேண்டும்?" என்று அவர் கேட்டார்.

அதற்கு இந்திரா காந்தி அமைதியாக இருந்தார். 5-10 நிமிடங்களுக்குப் பிறகு ஜே.பி எழுந்தார்.

இந்திரா மற்றும் ஜே.பி-ன் சந்திப்பு தோல்வியடைந்தது

இந்திரா காந்தி - ஜெயபிரகாஷ் நாராயண் இடையேயான உறவில் கசப்புணர்வு நிலவியது ஏன்?

பட மூலாதாரம், Rupa & Company

இந்திரா காந்தியின் சுயசரிதையான 'இந்திரா காந்தி எ பர்சனல் அண்ட் பொலிடிக்கல் பயோகிராபி'-ஐ எழுதிய இந்தர் மல்ஹோத்ரா, இந்த சந்திப்பை வேறு கோணத்தில் விவரிக்கிறார்.

அவரைப் பொறுத்தவரை. இந்திராவுக்கும் ஜே.பி.க்கும் இடையே காரசாரமான மற்றும் கசப்பான விவாதம் நடந்தது. அவரது பணக்கார நண்பனான அமெரிக்காவின் உத்தரவின் பேரில் அவரது இயக்கம் வாக்குறுதி அளிக்கிறது என்று இந்திரா குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த ஜே.பி., சோவியத் யூனியன் போன்ற சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறினார்.

பிரபல பத்திரிகையாளரும், ஜேபி இயக்கத்தில் பங்கேற்றவருமான ராம் பகதூர், "பிஹார் சட்டமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என்று ஜேபி வலியுறுத்தினார். அதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் இந்திராவிடம் பேசினார்," என்று கூறுகிறார்.

இறுதியில், பேச்சு கிட்டத்தட்ட முடியும்போது, "நீங்கள் நாட்டைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்" என்று இந்திரா காந்தி பேசியதாக ராம் பகதூர் குறிப்பிடுகிறார்.

மேலும் அவர், "இந்திராவின் பதில் ஜே.பி.யின் இதயத்தை புண்படுத்துவதாக இருந்தது. இதற்கு ஜே.பி. "நாட்டை தவிர வேறு என்ன நான் நினைத்தேன்? என்று கேட்டார்" என எழுதுகிறார்.

அதற்குப் பிறகு, ஜே.பி தன்னை சந்திக்க வருவோரிடம், "இந்திரா என்னை அவமதிக்கிறார். இனி இந்திராவை நாங்கள் தேர்தல் களத்தில் எதிர்கொள்வோம் என்று சொல்ல தொடங்கினார்" என குறிப்பிடுகிறார்.

இந்திரா காந்தி - ஜெயபிரகாஷ் நாராயண் இடையேயான உறவில் கசப்புணர்வு நிலவியது ஏன்?

பட மூலாதாரம், Rupa & Company

இந்திராவிடம் ஜே.பி காட்டிய பெட்டி நிறைய கடிதங்கள்

இந்த சூடான விவாதத்திற்குப் பிறகு, இந்திரா காந்தியுடன் ஒரு நிமிடம் மட்டும் பேச ஜே.பி. விருப்பம் தெரிவித்தார்.

அதை இந்தர் மல்ஹோத்ரா இப்படி எழுதுகிறார், "ஜக்ஜீவன் ராம் வேறொரு அறைக்குச் சென்றபோது, ​​ஜே.பி. இந்திராவிடம் மஞ்சளாகி விட்ட காகித அடங்கிய பெட்டியை கொடுத்தார். இந்திராவின் தாய் கமலா நேரு, 20 மற்றும் 30களில் ஜே.பி.யின் மனைவி பிரபாவதிக்கு எழுதிய கடிதங்கள் அவை. அவற்றை பிரபாவதி மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

அந்த கடிதங்களில் கமலா, நேரு குடும்பத்தின் பெண்கள் தன்னிடம் நடந்துக் கொண்ட முறையைப் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு தனது மனைவி இறந்த பிறகு தனக்கு இந்த கடிதங்கள் கிடைத்ததாக ஜே.பி. கூறினார் . ஜே.பியின் இந்த 'செயல்' காரணமாக இந்திரா காந்தி சிறிது நேரம் உணர்ச்சிவசப்பட்டார், ஆனால் அதற்குள் அவர்களுக்கிடையில் மிகுந்த இடைவெளி ஏற்பட்டு விட்டதால் அவரால் இயல்பாக பழக முடியவில்லை.

புவனேஸ்வரில் அதிகரித்த இடைவெளி

இந்திரா காந்தி - ஜெயபிரகாஷ் நாராயண் இடையேயான உறவில் கசப்புணர்வு நிலவியது ஏன்?

பட மூலாதாரம், Subramanian Swamy

ராம் பகதூர் ராய் , "ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் இந்திரா காந்தியின் உறவு, மாமா மற்றும் மருமகள் போன்றது, ஆனால் ஜேபி ஊழல் பிரச்சனையை எழுப்பத் தொடங்கியபோது, ​​இந்திராவின் ஒரு செயலால் அந்த உறவு மோசமடைந்தது" என கூறுகிறார்.

பெரிய முதலாளிகளின் பணத்தில் வளர்ந்தவர்களுகளுக்கு ஊழல் பற்றி பேச உரிமை இல்லை என்று அவர் 1974ஆம் ஆண்டு, ஏப்ரல் 1ஆம் தேதி புவனேஸ்வரில் ஒரு அறிக்கையை அளித்தார் . இந்த அறிக்கையால் ஜே.பி. மிகவும் வேதனை அடைந்தார்.

இந்த அறிக்கைக்குப் பிறகு, பதினைந்து முதல் இருபது நாட்கள் வரை ஜே.பி. எந்த வேலையும் செய்யவில்லை என்பதை நான் பார்த்திருக்கிறேன். விவசாயம் மற்றும் பிற மூலங்களிலிருந்து அவர் பெற்ற வருமான விவரங்களை சமர்ப்பித்து, அதை பத்திரிகைகளுக்குக் கொடுத்து இந்திரா காந்திக்கும் அனுப்பினார்.

இந்திரா காந்தியின் செயலாளராக இருந்த பி.என்.தார் "இந்திரா காந்தி, தி எமர்ஜென்சி அண்ட் இன்டியன் டெமாக்ரஸி" என்ற தனது புத்தகத்தில், "எங்களுக்கும் ஜே.பி.க்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வைக்கும் காந்தி அமைதி அறக்கட்டளையின் சுகத் தாஸ்குப்தா என்னிடம், கொள்கை விஷயங்கள் அப்பாற்பட்டவை. எனது அறிவுரை என்னவென்றால், "நீங்கள் ஜே.பிக்கு கொஞ்சம் மதிப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்" என்று எழுதுகிறார்.

ராதாகிருஷ்ணா மற்றும் தாஸ்குப்தா ஆகியோர், ஜே.பி. பிரதமரான பிறகு, நேருவுக்கும் காந்திக்கும் இடையில் இருந்ததைப் போலவே, இந்திரா காந்தி அவர்களுடன் ஒரே மாதிரியான உறவை ஏற்படுத்துவார் என்று நம்பினர்.

இந்திரா காந்தி ஜே.பியை நிச்சயம் ஒரு மனிதராகப் பாராட்டினார். ஆனால் அவர் ஆரம்பத்தில் இருந்தே அவரது கருத்துக்களுடன் உடன்படவில்லை. அவரைப் பொறுத்தவரை, அவர் ஒரு கோட்பாட்டாளர், நடைமுறைக்கு மாறான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். ஒருவருக்கொருவர் இதுபோன்ற கருத்துக்களைக் கொண்டிருந்ததால், இருவருக்கும் இடையில் சமமான அரசியல் புரிதலை உருவாக்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதானது. உண்மை என்னவென்றால், இருவரின் முக்கியத்துவமும் மிகப் பெரியது, விதிவசமாக அவர்களுக்கு இடையே ஒரு மோதல் ஏற்படுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை."

பி.என் தார் மேலும் எழுதுகிறார், 'இந்த வாய்ப்பு வந்தபோது, ​​சட்டத்தை அதன் பணிகளை செய்ய ஜே.பி. அனுமதிக்கவில்லை. இந்திரா காந்தியின் நோக்கங்கள் அல்லது ஜனநாயக கொள்கைகள் குறித்து ஜே.பி கொண்டிருந்த சொந்த அவநம்பிக்கை இதற்கு காரணமாக இருக்கலாம். இந்திராவுக்கும் ஜே.பி.க்கும் இடையிலான கசப்பு அதிகரித்ததால் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அறிவித்தார். முன்னதாக, டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் ஒரு பெரிய பேரணியில் ஜே.பி. உரையாற்றினார்.

ஜே.பி.யின் பேரணியைத் தடுக்க முயற்சி

இந்திரா காந்தி - ஜெயபிரகாஷ் நாராயண் இடையேயான உறவில் கசப்புணர்வு நிலவியது ஏன்?

பட மூலாதாரம், SHANTI BHUSHAN

பிரபல பத்திரிகையாளர் கூமி கபூர் தனது 'தி எமர்ஜென்சி - எ பெர்சனல் ஹிஸ்டரி' என்ற புத்தகத்தில் இப்படி எழுதுகிறார்.

"கூட்டம் கூடாமல் இருக்க, அப்போதைய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வித்யாசரண் சுக்லா, தூர்தர்ஷனிடம் ஞாயிற்றுக்கிழமை திரைப்படத்தின் நேரத்தை நான்கில் இருந்து ஐந்தாக மாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

முன்பே தீர்மானிக்கப்பட்ட 'வக்த்' படத்திற்கு பதிலாக, 1973 ஆம் ஆண்டின் மிகப்பெரிய திரைப்பட பிளாக் பஸ்டர் 'பாபி' -ஐ காட்ட முடிவு செய்யப்பட்டது.

ராம்லீலா மைதானத்தை சுற்றி மீண்டும் எந்த பேருந்தும் அனுமதிக்கப்படவில்லை, மக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது. ஜே.பி., ஜக்ஜீவன் ராம் ஆகியோர் 'பாபி'யை விட மிகவும் கவர்ச்சிகரமானவர்கள் என்பதை நிரூபித்தனர். அடல் பிஹாரி வாஜ்பேயியின் வளர்ப்பு மகள் நமீதா பட்டாச்சார்யா என்னிடம் சொன்னார், "அவர் கூட்டத்தை நோக்கிச் செல்லும்போது, ​​முணுமுணுக்கும் குரல் கேட்டது. நாங்கள் டாக்ஸி டிரைவரிடம், இது யாருடைய குரல்?'என்று கேட்டோம். இது மக்கள் காலடியின் குரல்' என அவர் பதில் அளித்தார். நாங்கள் திலக் மார்க்கை அடைந்தபோது, ​​அது மக்களால் நிரம்பியிருந்தது. நாங்கள் எங்கள் டாக்ஸியை அங்கேயே விட்டுவிட்டு, அங்கிருந்து கால்நடையாக ராம்லீலா மைதானத்திற்குச் சென்றோம்," என்று குறிப்பிட்டார்.

ஜே.பி.யின் கைது

இந்திரா காந்தி - ஜெயபிரகாஷ் நாராயண் இடையேயான உறவில் கசப்புணர்வு நிலவியது ஏன்?

1975 ஜூன் 25 இரவு ஒன்றரை மணிக்கு, காந்தி அமைதி அறக்கட்டளையின் செயலாளரான ராதாகிருஷ்ணாவின் மகன் சந்திரஹர் திறந்த வெளியில் வானத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்தார்.

திடீரென்று அவர் உள்ளே வந்து தனது தந்தையை எழுப்பி, "காவல்துறையினர் இங்கு கைது செய்ய வாரண்ட் கொண்டு வந்துள்ளனர்" என்று கிசுகிசுத்தார் .

ராதாகிருஷ்ணா வெளியே வந்தார். விஷயம் உண்மையாக இருந்தது.

ஜே.பி.க்கு எதிராக கைது செய்வதற்கான வாரண்டை காவல்துறை அவருக்குக் காட்டியது. நீங்கள் சிறிது நேரம் காத்திருக்க முடியுமா என்று ராதாகிருஷ்ணா போலீஸ்காரர்களிடம் கூறினார்.

ஜேபி மிகவும் தாமதமாக தூங்கினார். எப்படியிருந்தாலும், அவர் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவர் அதிகாலையில் பாட்னாவின் விமானத்தை பிடிக்க வேண்டும். காவல்துறை காத்திருக்க ஒப்புக்கொண்டது.

ராதாகிருஷ்ணா இதற்கிடையில் அமைதியாக உட்காரவில்லை.

ஜே.பி. கைது செய்யப்பட்டதை யார், யாருக்கெல்லாம் சொல்ல வேண்டுமோ அவர்களுக்கு தெரிவிக்குமாறு அவர் தனது தொலைபேசி ஆப்பரேட்டருக்கு அறிவுறுத்தினார்.

அவர் மொரார்ஜி தேசாயை அழைத்தபோது, ​​போலீசார் அவரது வீட்டை அடைந்திருப்பது தெரிந்தது.

மூன்று மணியளவில் காவல்துறையினர் மீண்டும் ராதாகிருஷ்ணாவின் கதவைத் தட்டினர்.

"நீங்கள் ஜே.பி.எழுப்புகிறீர்களா? ஜேபி ஏன் போலீஸ் நிலையத்திற்கு வரவில்லை என்று எங்களுக்கு தொடர்ந்து வயர்லெஸ் மூலம் செய்தி வந்து கொண்டிருக்கிறது" என்று கூறினர்.

சந்திரசேகர் ஒரு டாக்ஸியில் சென்றடைந்தார்

இந்திரா காந்தி - ஜெயபிரகாஷ் நாராயண் இடையேயான உறவில் கசப்புணர்வு நிலவியது ஏன்?

பட மூலாதாரம், Rajakaml Prakashan

ராதாகிருஷ்ணா மெல்ல தயங்கிக் கொண்டே ஜே.பி.யின் அறைக்குச் சென்றார். அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார் . அவர் மெதுவாக ஜே.பி.யை எழுப்பி, காவல்துறையின் வருகையை அறிவித்தார். பின்னர் ஒரு போலீஸ் அதிகாரி உள்ளே நுழைந்தார். அவர், "மன்னிக்கவும் ஐயா. உங்களை என்னுடன் அழைத்துச் செல்ல எங்களுக்கு உத்தரவு உள்ளது" என்றார். ஜே.பி., "தயாராவதற்கு எனக்கு அரை மணி நேரம் கொடுங்கள்.

பயந்து போன ராதாகிருஷ்ணா, ஜேபிக்கு அறிமுகமானவர்களில் சிலராவது, அவர் புறப்படுவதற்கு வர வேண்டும் என கால தாமதம் செய்ய முயன்றனர். ஜே.பி. தயாரானதும், ராதாகிருஷ்ணா, "புறப்படுவதற்கு முன் ஒரு கப் தேநீர் குடியுங்கள்" என்றார்.

இப்படியே, இன்னும் பத்து நிமிடங்கள் கடந்து விட்டன.

பின்னர் ஜே.பி., "இனி ஏன் தாமதிக்க வேண்டும்? போகலாம்" என்றார்.

போலீஸ் காரில் ஜே.பி. அமர்ந்தவுடன், அதிவேகமாக வந்த டாக்ஸி அங்கே பிரேக் போட்டு நின்றது. அதிலிருந்து குதித்து சந்திரசேகர் இறங்கினார். அதற்குள் ஜே.பியின் கார் போய்விட்டது.

அழிவு காலம் வந்தால், விபரீத புத்தி

ராதாகிருஷ்ணாவும் சந்திரசேகரும் அவரை ஒரு காரில் பின்தொடர்ந்தனர்.

ஜே.பி. நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஜே.பியை நாற்காலியில் அமர்த்திய பிறகு, போலீஸ் சூப்பிரண்டு வேறு அறைக்குச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து, அவர் வெளியே வந்து சந்திரசேகரை ஒரு மூலையில் அழைத்துச் சென்று, "ஐயா, உங்களை இங்கு அழைத்து வர ஒரு போலீஸ் குழு உங்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டது" என்றார்.

சந்திரசேகர் புன்னகைத்து, "இப்போது நானே இங்கு வந்துவிட்டேன், எனவே நீங்கள் என்னை இங்கேயே கைது செய்யலாம் " என்றார். போலீஸ்காரர்களும் அவ்வாறே செய்தனர்.

ராதாகிருஷ்ணா ஜே.பி.யிடம், "மக்களுக்கு ஒரு செய்தி கொடுக்க விரும்புகிறீர்களா?" என கேட்டார்.

ஜே.பி. அரை நொடி யோசித்து நேரடியாக ராதாகிருஷ்ணாவின் கண்களை பார்த்து, "அழிவு காலம் வந்தால் புத்தியும் விபரீதமாக செயல்படும் " என்றார்.

ஜே.பி. 1976 இல் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

இந்திராவின் பணத்தை திருப்பிக் கொடுத்த ஜே.பி

இந்திரா காந்தி - ஜெயபிரகாஷ் நாராயண் இடையேயான உறவில் கசப்புணர்வு நிலவியது ஏன்?

பட மூலாதாரம், OXFORD India

மற்றொரு சம்பவம் இந்திரா மற்றும் ஜே.பி.யின் உறவைக் கெடுத்தது.

ஜே.பி. சிறையில் இருந்து விடுதலையான பிறகு, காந்தி அமைதி அறக்கட்டளையின் தலைவர் ராதாகிருஷ்ணா, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் உட்பட அனைவரிடமும் ஜே.பிக்கு டயாலிசிஸ் மெஷின் வாங்க நிதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

பி.என்.தார் அந்த நிகழ்வை, "ராதாகிருஷ்ணாவின் ஆலோசனையுடனும், எனது முழு ஆதரவோடும், இந்திரா காந்தி, ஜே.பியின் டயாலிசிஸ் இயந்திரத்திற்கு 90,000 ரூபாய் என ஒரு நல்ல தொகையை அனுப்பினார். ஜே.பி.யின் ஒப்புதலுக்குப் பிறகு ராதாகிருஷ்ணா அதற்கான ரசீதையும் அனுப்பினார். ஆனால், இந்திரா காந்தியின் இந்த செயலை ஜே.பி முகாமின் பல தீவிர போக்கு கொண்டவர்கள் ஏற்க்கவில்லை. இறுதியில் அவர்களின் அழுத்தம் காரணமாக ஜேபி அந்த தொகையை இந்திரா காந்திக்கு திருப்பித் தர வேண்டியிருந்தது," என்று எழுதுகிறார்.

ஜனவரி 1977 இல், இந்திரா காந்தி தேர்தலை நடத்த முடிவு செய்தார். அந்தத் தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்றது, இந்திரா காந்தி தனது சொந்த தொகுதியை பறிகொடுத்தார்.

பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக போராட்டம்

மார்ச் 1977இல் ஜனதா கட்சியின் வெற்றிக்கு பின்னர், ஒரு அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

சஞ்சய் காந்தியின் கட்டாய கருத்தடை திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சஞ்சய் காந்தியை பிடித்துக் கொண்டு, தி துர்க்மேன் கேட் அழைத்துச் சென்று, பொது இடத்தில் கருத்தடை செய்வார்கள் என இந்திரா கவலைப்படுவதாக அவரது நண்பர் புபுல் ஜெயக்கர் வெளியுறவு செயலாளர் ஜகத் மேத்தாவுக்கு போன் செய்து கூறினார்.

இதை ஜகத் மேத்தா, பிரபல சுதந்திர போராட்ட வீரரும், பின்னர் திட்ட ஆணையம் மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்திய தூதருமான லட்சுமி சந்த் ஜெயினிடம் சொன்னபோது, ​​அவர் ஜே.பி-ஐ சந்தித்தார்.

"இதைக் கேட்டு ஜே.பி. மிகவும் வருத்தப்பட்டார். இந்திரா காந்தியைச் சந்தித்து அவரை ஊக்குவிக்க அவரது இல்லத்திற்குச் செல்ல முடிவு செய்தார். ஜே.பி, இந்திராவை சந்தித்து அவருடன் தேநீர் அருந்தினார்." என்று 'சிவில் டிஸ்ஒபீடியன்ஸ் டு ஃப்ரீடம் ஸ்ட்ரகிள் ஒன் லைப் -ல் என்ற புத்தகத்தில் லட்சுமி சந்த் எழுதுகிறார்,

செலவுக்கு என்ன செய்வாய் என இந்திராவிடம் கேட்டார்

இந்திரா காந்தி - ஜெயபிரகாஷ் நாராயண் இடையேயான உறவில் கசப்புணர்வு நிலவியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

"இந்த சந்திப்புக்குப் பிறகு, இந்திரா காந்தியின் அரசியல் வாழ்க்கை இன்னும் முடிவடையவில்லை என்று ஜே.பி ஒரு அறிக்கையை வெளியிட்டார்" என்று ராம் பகதூர் ராய் கூறுகிறார்.

பழிவாங்கும் அரசியல் செய்ய வேண்டாம் என்று ஜனதா கட்சி தலைவர்களுக்கு இது ஒரு சமிக்ஞையாக இருந்தது. அவர்கள் ஜே.பி.க்கு செவிசாய்க்கவில்லை என்பது வேறு விஷயம். இப்போது நீங்கள் பிரதமராக இல்லாதபோது, ​​உங்கள் செலவுகள் எப்படி சமாளிப்பீர்கள் என்று கூட ஜே.பி. இந்திராவிடம் கேட்டார்.

நேருவின் புத்தகங்களின் ராயல்டி அவரது வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று இந்திரா பதிலளித்தார். அவருக்கு எதிராக அநியாயம் ஏதும் இருக்காது என்று ஜே.பி. அவருக்கு உறுதியளித்தார், மேலும் இது குறித்து மொரார்ஜி தேசாய் மற்றும் சரண் சிங் ஆகியோரிடமும் கோரிக்கை விடுத்தார்.

பாட்னாவில் கடைசி சந்திப்பு

சில நாட்களிலேயே , ஜனதா கட்சி மீது ஜே.பி.க்கு ஏற்பட்ட ஆர்வம் கலைந்தது . அவர் பாட்னாவில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், ஜனதா கட்சி தலைவர்கள் அவரை கவனிக்கவில்லை. " ஜே.பி.யைப் பார்க்க, பாட்னா செல்லுமாறு மொரார்ஜியிடம் யோசனை கூறியபோது, ​​அவர் கேலியாக, "நான் காந்தியை கூட சந்திக்கச் செல்லவில்லை, பின் ஜே.பி ஏன்?" என்று சொன்னதாக குல்தீப் நாயர் கூறுகிறார்.

இந்திரா காந்தி அதற்கு நேர்மாறாக செய்தார். பெல்ச்சியில் இருந்து திரும்பும் போது, ​​பாட்னாவில் தங்கி ஜே.பியைச் சந்திக்கச் சென்றார். இந்த சந்திப்புக்குப் பிறகு, ஜே.பி. இந்திராவை ஆசீர்வதித்து, "உன் எதிர்காலம் உன் கடந்த காலத்தை விட பிரகாசமாக இருக்கும்" என்று கூறினார்.

ஜே.பி.யை நெருக்கமாக அறிந்த ரஜி அகமது, ஜே.பி.யின் வாழ்க்கையின் கடைசி நாட்களில், இருவரின் உறவும் மீட்டெடுக்கப்பட்டது என்று கூறுகிறார். இருப்பினும், அரசியல் வல்லுனர்களின்படி, இந்திரா காந்தி, ஜே.பி.யை சந்தித் தது , அவரது ராஜ தந்திரத்தின் ஒரு பகுதி என்றும், அதில் அவர் முழு வெற்றி அடைந்த தாகவும் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: