இந்திரா காந்தியின் பாணியை மோதி பின்பற்றுகிறாரா?

இந்திரா காந்தி

பட மூலாதாரம், Keystone

இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பிறந்தநாள் நவம்பர் 19. நூறு ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 19ஆம் தேதி பிறந்தவர் அவர். இந்திரா காந்தியின் நூற்றாண்டு இம்மாதம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி வெளியாகும் கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

இந்திரா காந்தியின் ஆளுமைத்தன்மை, நாட்டைப் பற்றிய அவரது கண்ணோட்டம் போன்றவற்றை வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரிடமிருந்து தெரிந்துக்கொள்ள விரும்பினோம்.

பிரிட்டன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லார்ட் ஸ்வராஜ் பால். பிரிட்டனில் செல்வந்தராக கோலோச்சும் தொழிலதிபரான லார்ட் ஸ்வராஜ் பால் உடன் பிபிசி நிருபர் உரையாடினார்.

இந்திரா காந்தியைப் பற்றி பல விஷயங்களைச் சொன்ன லார்ட் ஸ்வராஜ் பால், பிரதமர் நரேந்திர மோதியின் பாணி இந்திராவை போன்றே இருப்பதாக கருதுகிறார்.

இந்திரா காந்தி மிகப் பெரிய ஆளுமை கொண்டவர், ஆனால் மக்களுக்கு அவரைப் பற்றி முழுமையாக தெரியாது, அவரைப் பற்றி பொதுவான, சில தவறான கருத்துகள் உலா வருகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல.

ஊழலை வெறுத்தவர் இந்திரா காந்தி. ஊழலை எப்படியாவது நிறுத்தவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார், ஆனால் இந்தியாவில் ஊழல் முடிவுக்கு வரவேண்டும் என்று யாரும் விரும்பவில்லை.

லார்ட் ஸ்வராஸ் பால்
படக்குறிப்பு, லார்ட் ஸ்வராஸ் பால்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பொருளாதாரத்தை திறந்துவிட்டார் இந்திரா காந்தி. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இங்கு வந்து தொழில் செய்வதை இந்திய தொழிலதிபர்களும் வணிகர்களும் விரும்பவில்லை.

ஏனெனில் உள்ளூரில் இருக்கும் சில முதலாளிகளின் கையிலேயே உள்ளூர் பொருளாதாரம் இருந்தது. அவர்களின் சுயநலம், பொதுநலத்தை விரும்பவில்லை.

உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் முதலாளிகள் செல்வந்தர்களாகவும், நிறுவனங்கள் ஏழையாகவும் இருக்கிறது என்று 1983ஆம் ஆண்டிலேயே சொன்னேன். இன்றும் அதே நிலைதான் நீடிக்கிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்திரா காந்தி பொருளாதாரத்தை திறந்துவிட்டபோது நிதியமைச்சர் பொறுப்பில் இருந்தவர் பிரணாப் முகர்ஜி. அந்த சமயத்தில் பல ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஆனால், அதற்கான உரிய அங்கீகாரமும், பாராட்டும் இந்திராவுக்கு கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.

உலக அரங்கில் இந்தியாவின் பிம்பத்தை வலுப்படுத்தினார் இந்திரா காந்தி. அவருக்கு பிறகு தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி மட்டுமே இந்தியாவின் நிலையை சர்வதேச அளவில் பலப்படுத்தியிருக்கிறார்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், மோதியின் பாணியை கூர்ந்து கவனித்தால், அது இந்திரா காந்தியுடன் பெருமளவில் ஒத்துப்போகிறது.

इंदिरा गांधी

பட மூலாதாரம், Getty Images

இந்திராவால் செய்ய முடியாதது

மோதி ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். அதிர்ஷ்டவசமாக அவரது முயற்சிகள் வெற்றிகரமாக செயல்படுவதை காண முடிகிறது, உலகம் முழுவதும் அவரை ஏற்றுக்கொண்டிருந்தபோதிலும், நாட்டில் அவர் பரவலாக விமர்சிக்கப்படுகிறார். இதே நிலைதான் இந்திரா காந்திக்கும் ஏற்பட்டது.

ஆனால் அந்த காலத்தில், நிர்வாகத்திலும், தொழிற்துறையிலும் கோலோச்சிக் கொண்டிருந்த சிலர், மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருந்தனர். இந்திரா அதனை கட்டுப்படுத்த வேண்டிய முயற்சிகளை எடுத்தார்.

இப்போது, மோதி தொழிலதிபர்களின் அதிகாரத்தை குறைப்பதில் வெற்றியடைந்துவிட்டார்.

இந்திரா காந்தி செய்ய நினைத்து, செய்ய முடியாததை மோதி வெற்றிகரமாக செயல்படுத்திவிட்டார் என்றே கருதுகிறேன்.

பிரதமருக்கு நான் பரிந்துரையோ பாராட்டோ தெரிவிக்கவில்லை. உண்மையில் அவர்களிடம் சிறப்பான திறமைகள் இருப்பதால்தான் நாடு முழுவதும் உள்ள மக்கள் சேர்ந்து அவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

ஆனால், நாட்டின் முன்னேற்றம் மட்டுமே ஊழலைத் தடுக்க வேண்டும். இந்திரா இதற்கு மிகவும் கடினமாக முயற்சி செய்தார், அதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

லார்ட் ஸ்வராஜ் பால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லார்ட் ஸ்வராஜ் பால்

தேவையற்ற இந்தியர்களா என்.ஆர்.ஐகள்?

நான் இந்தியாவில் முதலீடு செய்ய நினைத்தபோது, என்.ஆர்.ஐ. என்ற வார்த்தைக்கு "தேவையற்ற இந்தியர்கள்" என்று பொருள் கொள்ளப்பட்டது. உண்மையிலுமே அன்று வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ) அனுமதியளித்திருந்தால் இன்று இந்திய பொருளாதாரம் உச்சத்தில் இருந்திருக்கும்.

1990 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால், இந்திய பொருளாதாரம் சர்வதேச சந்தைக்கு திறந்துவிடப்பட்டது. என்.ஆர்.ஐ.க்கள் தங்கள் நாட்டிற்கு பங்களிக்க விரும்புவதில் ஆர்வமாக இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

எண்பதுகளில் பிபிசி உலகச் சேவைக்கு நான் அளித்த அரை மணிநேர நேர்காணலின் போது ஸ்டீவ் ரிச்சர்ட்ஸ் என்னிடம் கேட்டார், "லார்ட் பால், நீங்கள் என்ன சதவிகிதம் இந்தியர், எத்தனை சதவிகிதம் பிரிட்டன் குடிமகன்?"

அதற்கு என்னுடைய பதில் என்ன தெரியுமா? ''நான் 100% இந்தியன் மற்றும் 100% பிரிட்டிஷ் குடிமகனாக இருக்கிறேன். இரண்டிற்காகவும் நான் பெருமைப்படுகிறேன்."

என்னைப்போலவே வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருதுவார்கள். மோதி வலுவானவர், வெற்றிப் பாதையில் பயணிக்கிறார். அதைத்தான் நாங்களும் விரும்புகிறோம்.

இந்திரா காந்தியின் பாணியை மோதி பின்பற்றுகிறாரா?

பட மூலாதாரம், Getty Images

சர்வாதிகாரி என்று அழைக்கப்பட்டதால் வருத்தப்பட்ட இந்திரா

இந்திரா காந்தி மிகவும் கடினமான நபராக கருதப்பட்டார். ஆனால் அவர் மிகச் சிறந்தவர், மென்மையானவர். சர்வாதிகாரி என்று விமர்சிக்கப்பட்டபோது இந்திரா மிகவும் வருத்தமடைந்தார்.

1957இல் இந்தியாவிற்கு சென்றபோது பிரதமர் ஜவஹர்லால் நேருவை சந்திக்க சென்றிருந்தேன். அங்குதான் இந்திராவை முதன்முதலாக சந்தித்தேன். முதல் சந்திப்பில் வணக்கம் என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே பகிர்ந்துக் கொண்டோம்.

அதன்பிறகு, மகளின் சிகிச்சைக்காக லண்டனுக்கு வந்தேன். இந்தியாவிற்கு மீண்டும் அழைத்துவரும் நிலையில் மகளின் உடல்நிலை இல்லை. இந்தியாவில் வாழும் குடும்ப உறவினர்களை சந்தித்து நீண்ட நாளாகிவிட்டது.

குடும்ப உறுப்பினர்கள் லண்டனுக்கு வர முயன்றனர், ஆனால் அந்த சமயத்தில் ஏர் இந்தியா விமானத்திற்கான பயணச்சீட்டு வாங்க இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவை.

அப்போது, பிள்ளைகளை சந்திக்க விரும்புகிறேன் என்று இந்திரா காந்திக்கு கடிதம் ஒன்று எழுதினேன். கடிதத்திற்கு பதில் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தினர் என்னை தேடும் தகவல் கிடைத்ததும் வியப்படைந்தேன். குழந்தைகளை இங்கு அழைத்துக் கொள்ளலாம் என்று என்னிடம் கூறப்பட்டதை நம்பவே முடியவில்லை.

இந்திரா காந்தியின் பாணியை மோதி பின்பற்றுகிறாரா?

பட மூலாதாரம், AFP

எமர்ஜென்சி முடிவை எடுத்தது இந்திரா காந்தி இல்லை

பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர், சாதாரண மனிதனின் கடிதத்திற்கு உடனடி நடவடிக்கை எடுத்தார். இதைவிட பணிவாக, திறமையாக வேறு யாரால் செயல்படமுடியும்?

1971 ஆம் ஆண்டு வங்கதேசம் உருவாக்கப்பட்ட பின்னர் அவர் லண்டனுக்கு வந்தபோதுதான் நான் அவரை முறைப்படி சந்தித்தேன் என்று சொல்லலாம். அந்த சமயத்தில் மேற்கத்திய செய்தி ஊடகம் இந்திரா காந்திக்கு எதிராக இருந்தது. இந்திரா என்ன செய்தாலும் அது முற்றிலும் சரியானதாகவே இருக்கும் என்று ஊடகங்களிடம் சொல்ல முயற்சி செய்தேன்.

அதன்பிறகு எங்கள் இருவரின் நட்பு தொடங்கியது. 1975இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்திராவின் தேர்தல் வெற்றியை ரத்து செய்த சமயத்தில் இந்தியாவில்தான் இருந்தேன்.

எமர்ஜென்சியை அமல்படுத்தியது உண்மையிலுமே இந்திரா காந்தியின் முடிவல்ல. அவரது ஆலோசகர்கள் அழுத்தத்தை கொடுத்து அவரை இந்த முடிவு எடுக்க தூண்டினார்கள். இருந்தபோதிலும் இந்த அவசர முடிவு குறுகிய காலத்திற்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் இந்திரா தெளிவாக இருந்தார்.

மலர்களை பார்த்தால் மனம் மலரும் இந்தி

1977 ம் ஆண்டு தேர்தலில் இந்திரா தோல்வியடைந்து, ஜனதா கட்சி அரசமைத்தபோது, இந்திரா இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டிற்கு சென்று விடுவார் என்று பலர் கூறினார்கள்.

ஆனால், இந்தியாவை விட்டு செல்லமாட்டேன் என்று திடமாக சொன்னார் இந்திரா. தனது அரசியல் எதிரிகளை இங்கிருந்தபடியே எதிர்கொள்வேன் என்று நம்பிக்கையுடன் சூளுரைத்தார் இந்திரா.

1978இல் சிக்மங்களூரில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, மக்களவை உறுப்பினரானார் இந்திரா காந்தி. லண்டனுக்கு வரும்படி அவருக்கு நான் விடுத்திருந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அவர் லண்டனுக்கு வந்தார்.

இந்திரா காந்தி

பட மூலாதாரம், Getty Images

லண்டனில் பல அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அவருக்கு எதிராக இருந்தாலும், பல எம்.பி.க்கள், தொழிற் கட்சி தலைவர் மைக்கேல் பேட் உட்பட பல அரசியல்வாதிகளை இந்திரா காந்தி சந்திக்க ஏற்பாடு செய்தேன். பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்களையும் இந்திரா சந்தித்தார்.

அவர்கள் அனைவரும் இந்திரா காந்தியை வரவேற்ற முறையை பார்த்து, மக்களுடனான அவரது உறவு ஒருபோதும் விரிசலடையாது என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

இந்திரா மிகவும் நேர்மையானவர். அவரை சந்திக்கச் செல்லும்போது மலர்கொத்தை மட்டுமே கொண்டு செல்வேன். மலர்களை பார்த்தால் மனமும் முகமும் மலர்ந்து சிரிப்பார் இந்திரா காந்தி.

மலரைப் போலவே அனைவரின் மனதிலும் மணம் வீசும் நினைவுகளை ஏற்படுத்துபவர் இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் இந்திரா காந்தி.

(லார்ட் ஸ்வராஸ் பால் உடன் பிபிசி செய்தியாளர் இக்பால் அகமத் மேற்கொண்ட உரையாடலின் அடிப்படையில் எழுதப்பட்டது இந்த கட்டுரை.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :