இந்தியாவில் கொரோனா வைரஸ்: பெலுடா கோவிட்-19 பரிசோதனை - மலிவு விலை, உடனடி முடிவுகள்

கருத்தரிப்பு பரிசோதனையைப் போல, சில நிமிடங்களில் கோவிட் - 19 பாதிப்பைக் கண்டறிந்து முடிவைத் தெரிவிக்கக் கூடிய, காகிதத்தின் அடிப்படையிலான, செலவு குறைந்த ஒரு தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் சிலர் உருவாக்கியுள்ளனர்.
அது எப்படி செயல்படுகிறது என்று பிபிசி செய்தியாளர்கள் சௌதிக் பிஸ்வாஸ் மற்றும் கிருத்திகா பதி விளக்குகின்றனர்.
இந்திய கற்பனை கதையில் வரும் துப்பறியும் கதாபாத்திரத்தின் நினைவாக இந்தப் பரிசோதனைக்கு "பெலுடா" பரிசோதனை என பெயரிடப்பட்டுள்ளது. இது "கிறிஸ்பர்" என்ற மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
பெலுடா என்ற இந்த உபகரணத் தொகுப்பு ஒரு மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவை தெரிவித்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் விலை சுமார் ரூ.500 என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவின் பெரிய நிறுவனமான டாட்டா நிறுவனம் இந்த உபகரணத் தொகுப்பைத் தயாரிக்கும். காகிதத்தை அடிப்படையாகக் கொண்டு கோவிட்-19 நோய் பாதிப்பைக் கண்டறியும் முதலாவது தொழில்நுட்பமாக இது இருக்கும்.
``இது எளியது, துல்லியமானது, நம்பகமானது, அதிக அளவில் செய்யக் கூடியது, சிக்கனமானது'' என்று இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே. விஜய்ராகவன் பிபிசியிடம் தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள ஜெனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைப்பு உயிரியலுக்கான சி.எஸ்.ஐ.ஆர். கல்வி நிலையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இதை உருவாக்கியுள்ளனர். இந்த உபகரணம் தனியார் ஆய்வகங்களிலும் பரிசோதிக்கப்பட்டது. ஏற்கெனவே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் உள்பட சுமார் 2,000 நோயாளிகளிடம் இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் 96 சதவீதம் அளவுக்கு சரியான முடிவு கிடைத்தது. மிகச் சரியாகக் கூறினால் 98 சதவீதம் துல்லியத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. நுண்உணர்வின் அடிப்படையில் வேறுபாட்டைக் கண்டறியும் இந்த நுட்பத்தின் மூலம், நோய் பாதித்த அனைவரும் அடையாளம் காணப்படுவார்கள். தனித்துக் காட்டும் திறன் 98 சதவீதம் இருப்பதால், நோய் பாதிப்பு இல்லாத அனைவருமே பிரித்து காட்டப்படுவார்கள்.
முதலாவது அம்சத்தின்படி தவறான பரிசோதனை முடிவு அதிக அளவில் வராது; இரண்டாவதாக தவறான பாசிட்டிவ் எண்ணிக்கை அதிகமாக இருக்காது. வணிக ரீதியில் இந்தப் பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்தியாவின் மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது.
60 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதால், உலக அளவில் இந்த நோய் பாதித்தவர்கள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இந்த நோயால் இதுவரையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஆரம்பத்தில் பரிசோதனைகள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இப்போது நாடு முழுக்க 1200க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் மூலம் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதற்கு இரண்டு பரிசோதனை முறைகள் பின்பற்றப்படுகின்றன.

பட மூலாதாரம், EPA
முதலாவது நடைமுறை, ஏற்கெனவே பரிசோதித்து நிரூபிக்கப்பட்ட நடைமுறை - பி.சி.ஆர். பரிசோதனை என்று குறிப்பிடப்படுகிறது. வைரஸின் மரபணு பொருளை ஆய்வகத்தில் பெருகச் செய்வதற்கு இதில் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. இரண்டாவதாக, ஆன்டிஜென் என்ற விரைவாக முடிவைக் கண்டறியும் பரிசோதனை முறை. எடுக்கப்படும் சாம்பிளில் வைரஸ் சிதைவுகள் இருப்பதை இது கண்டறியும்.
பொதுவாக பி.சி.ஆர். பரிசோதனைகள் நம்பகத்தன்மை உள்ளவை, அதற்கு ரூ.2400 வரை செலவாகும். அதில் தவறான பாசிட்டிவ் முடிவுகள் காட்டுவது குறைவாக இருக்கும். ஆன்டிஜென் பரிசோதனைகள் மலிவானவை. நோயின் தாக்கம் இருப்பதை மிகவும் சரியாகக் கண்டறியக் கூடியது. ஆனால், பி.சி.ஆர் பரிசோதனையுடன் ஒப்பிடும்போது, தவறான நெகடிவ்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
பெருமளவில் மருத்துவப் பரிசோதனை செய்தல் என்பது இன்னும் சாத்தியமாகவில்லை என்று உலக அளவிலான ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கிய கொள்கை குறித்த ஆராய்ச்சியாளர் டாக்டர் அனந்த் பான் கூறியுள்ளார்.
``இன்னும் நீண்ட காத்திருப்பு தேவைப்படுகிறது. உபகரணத் தொகுப்புகள் கிடைப்பது சிரமமாக உள்ளது. நாங்கள் துரித ஆன்டிஜென் பரிசோதனைகளை அதிக அளவில் செய்கிறோம். அது தவறான நெகடிவ்களை அதிகம் காட்டக் கூடியதாக உள்ளது'' என்று டாக்டர் பான் பிபிசியிடம் கூறினார்.


பெலுடா பரிசோதனைக்கான உபகரணத் தொகுப்பு, ஆன்டிஜென் பரிசோதனை உபகரணத் தொகுப்பைக் காட்டிலும் மலிவானது, அதிக துல்லியமாக முடிவை அளிக்கக் கூடியது என்பதால், ஆன்டிஜென் பரிசோதனைக்கு மாற்றாக பெலுடா பரிசோதனை அமையும் என்று அவர் கூறுகிறார்.
``பி.சி.ஆர். பரிசோதனை மீது உள்ள நம்பகத்தன்மை இந்தப் புதிய பரிசோதனை முறையின் மீதும் உள்ளது. இது வேகமாக முடிவைத் தெரிவிக்கும், நவீன கருவிகள் இல்லாத சிறிய ஆய்வகங்களிலும் கூட இந்த பரிசோதனையைச் செய்ய முடியும்'' என்று ஐ.ஜி.ஐ.பி இயக்குநர் டாக்டர் அனுராக் அகர்வால் பிபிசியிடம் தெரிவித்தார்.
பி.சி.ஆர். பரிசோதனைக்கு எடுப்பதைப் போலவே பெலுடா பரிசோதனைக்கும் சாம்பிள் எடுக்கும் முறை இருக்கும். மூக்கின் பின்பகுதியில் சுவாசப் பாதையில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, மூக்கில் சில அங்குலம் உள்ளே இருந்து ஸ்வாப் எடுக்கப்படும். உமிழ்நீர் சாம்பிள் அடிப்படையில் கோவிட்-19 பரிசோதனை செய்வதற்கு இந்தியா இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

வழக்கமான பி.சி.ஆர். பரிசோதனையில், நோயாளியிடம் இருந்து எடுக்கப்படும் சாம்பிள், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப் படுகிறது. அங்கு பல ``சுற்றுகள்'' பரிசோதனைக்குப் பிறகு முடிவு கண்டுபிடிக்கப் படுகிறது.
புதிய பெலுடா பரிசோதனையில் கிறிஸ்பர் என்ற மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் வைரஸ் கண்டுபிடிக்கப் படுகிறது.
எளிதாகச் சொல்வதாக இருந்தால் கம்ப்யூட்டரில் வேர்டு பைலில் திருத்தம் செய்வதைப் போன்றதாக இந்தத் தொழில் நுட்பம் உள்ளது. எழுத்துகளை அழித்துவிட்டு, புதிய எழுத்துகளை டைப் செய்வதற்கு கர்சரை அங்கே கொண்டு செல்கிறோம். அதேபோல இந்தத் தொழில்நுட்பத்தில் குறிப்பிட்ட ஒரு ஜெனோம் (மரபணு தொகுப்பில்) பகுதியை நீக்கிவிட்டு புதியதை சேர்க்கிறது. நோய்த் தொற்றுகளைத் தடுத்து வளைந்த உயிரணு நோய் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க மரபணு எடிட்டிங் நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.
பெலுடா போன்ற, நோய் அறிகுறி கண்டறியும் பரிசோதனையில் இதைப் பயன்படுத்தும்போது, புதிய கொரோனா வைரஸ் வந்திருப்பதற்கான அறிகுறியைக் காட்டக் கூடிய மரபணுவில், குறிப்பிட்ட மரபணுத் தொகுப்பில் இணைப்பதாக கிறிஸ்பர் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. பின்னர் அந்த மரபணு தொகுப்பை மேன்மைப்படுத்திக் காட்டுவதால், காகிதத்தில் அதன் தகவலைக் கண்டறிய முடிகிறது. இரண்டு நீலநிறக் கோடுகள் தோன்றினால், பாதிப்பு உள்ளதாக அர்த்தம். ஒரு நீல நிற கோடு தோன்றினால் பாதிப்பு இல்லை என்று அர்த்தம். ``குறைந்த அளவில் தான் பரிசோதனை செய்யும் நிலை உள்ளது. இந்த உபகரணத் தொகுப்புகள் அதிகம் கிடைக்கும்படி செய்ய வேண்டும். இந்த வகையில் பெலுடா பரிசோதனை முக்கியமான ஒரு படிநிலையாக இருக்கும்'' என்று ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஸ்டீபன் கிஸ்லெர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், EPA
அதிக கால அவகாசம் தேவைப்படும் பி.சி.ஆர். மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகளுக்குப் பிறகு ``மூன்றாவது வரிசை பரிசோதனைகளின்'' ஒரு பகுதியாக கிறிஸ்பர் அடிப்படையிலான பரிசோதனை முறைகள் அமைந்துள்ளன என்று ஹார்வர்டு குளோபல் ஹெல்த் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த டாக்டர் தாமஸ் டிசாய் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இதேபோன்று காகிதத்தின் அடிப்படையிலான பரிசோதனை முறையை உருவாக்குவதற்கு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அதிக எண்ணிக்கையில் தயாரிக்கும் போது இதன் விலை மலிவாக இருக்கும். ஷெர்லாக் உயிரி அறிவியல் நிறுவனம் உருவாக்கிய, காகித அடிப்படையிலான பரிசோதனை முறையை அவசர காலத்தில் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக (எப்.டி.ஏ) தூறை அனுமதி அளித்துள்ளது. ``எந்தவொரு நோய்க் கிருமி அல்லது கிருமியிலும் டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ வரிசைகளில் தனித்துவமான மரபணு தடம் இருப்பதை'' கண்டறியும் தன்மை கொண்டது என்று அந்தத் தொழில்நுட்பத்தை விவரிக்கின்றனர். மரபணு சார்ந்த அனைத்துத் தகவல்களையும் சேமித்து வைக்கும் மூலக்கூறுகளாக டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ ஆகியவை உள்ளன.
``வீட்டில் நீங்களே செய்து கொள்ளக் கூடிய, காகித அடிப்படையிலான பரிசோதனை தான் பொருத்தமான, சரியான பரிசோதனை முறையாக இருக்கும்'' என்கிறார் டாக்டர் டிசாய்.
``ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தில் சில உயிரியல் வரையறைகள் உள்ளன. மக்கள் வீட்டிலேயே ஆர்.என்.ஏ.வை எடுத்து பெரிதாக்கி பார்ப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது'' என்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்த விஷயத்தில் தான் பெலுடா பரிசோதனை முறை பெரிய மாற்றத்தைக் காட்டுகிறது.
``வீட்டிலேயே ஆர்.என்.ஏ.வைப் பிரித்தெடுத்து, பெரிதுபடுத்திப் பார்க்கும் வகையிலான'' முன்மாதிரி பரிசோதனை நடைமுறையை உருவாக்க தாங்கள் முயற்சித்து வருவதாக, பெலுடா பரிசோதனை முறையை உருவாக்கிய குழுவின் தலைமை உறுப்பினரும், சி.எஸ்.ஐ.ஆர். - ஐ.ஜி.பி.எம்.ஆர். மூலக்கூறு விஞ்ஞானியுமான டாக்டர் தேவஜோதி சக்ரவர்த்தி கூறியுள்ளார்.
``எளிதான, செலவு குறைந்த, உண்மையிலேயே அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் ஒரு பரிசோதனை முறையை உருவாக்கிட நாங்கள் முயற்சிக்கிறோம். சாதனங்கள் மற்றும் நிபுணர்கள் தான் பரிசோதிக்க வேண்டும் என்ற தேவை இல்லாமல் இதைச் செய்யும் வாய்ப்பை உருவாக்க முயற்சிக்கிறோம்'' என்று டாக்டர் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

பட மூலாதாரம், EPA
``இந்தப் பரிசோதனையின் முக்கியத்துவத்தைக் காட்ட இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், தேவை உள்ள சரியான தருணத்தில் இந்தப் பரிசோதனை முறை உருவாக்கப் பட்டுள்ளது'' என்று டாக்டர் கிஸ்லெர் தெரிவித்தார். ``இதன் செயல் திறன் நிரூபிக்கப்பட்டால், உலகம் முழுக்க இந்த நடைமுறை பரவிடும்'' என்றார் அவர்.
நோய்த் தொற்றில் இருந்து முழுமையாக மீள்வதற்கு ஒரு தடுப்பு மருந்து அவசியமானதாக உள்ளது. ஆனால் ``இயல்புநிலைக்கு வந்துவிட்டோம்'' என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கு, நம்பகமான ஒரு பரிசோதனை முறையும் தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.
``நான் நினைத்திருக்கும் உலகில், பல் துலக்குவது அல்லது ஒரு டோஸ்ட் தயாரிப்பதைப் போல எளியதாக இந்தப் பரிசோதனை முறை இருக்கும்'' என்று டாக்டர் கிஸ்லெர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
- உசிலம்பட்டியில் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு திருட்டு
- அர்மீனியா - அஜர்பைஜான் போர் நிறுத்தம்: பிணங்களை எடுத்துக்கொள்ள அனுமதி
- DC vs RR: சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான் தொடர்ந்து தோற்பது ஏன்?
- இந்தியா-சீனா எல்லை சர்ச்சை: பிரதமர் நரேந்திர மோதி சீனாவின் பெயரை தவிர்ப்பது ஏன்?
- உலகில் உள்ள கடல்கள் எல்லாம் காணாமல் போனால் என்னவாகும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












