கொரோனா தடுப்பு மருந்து: "வரும் ஜூலைக்குள் இந்தியாவில் 25 கோடி பேருக்கு அளிக்கப்படும்" - யாருக்கு முன்னுரிமை?

coronavirus latest news

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி: "வரும் ஜூலைக்குள் இந்தியாவில் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து"

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் இந்தியாவில் 25 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கோவேக்சின், ஜைகோவ்-டி மற்றும் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு ஆகிய 3 தடுப்பு மருந்துகளையும் மனிதர்களுக்கு செலுத்தி மருத்துவ பரிசோதனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தன்னை சமூக ஊடகங்களில் பின்தொடர்கிறவர்களுடன் 'சண்டே சம்வத்' தளத்தின் மூலம் நேற்று கலந்துரையாடினார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

அப்போது அவர், "அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் இந்தியாவில் 20 முதல் 25 கோடி பேருக்கு, 40 முதல் 50 கோடி 'டோஸ்' தடுப்பு மருந்து போடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இதற்கான முன்னுரிமை பட்டியலை தயாரித்து அளிக்க உத்தரவிடப்படும். இதற்கான வடிவமைப்பை மத்திய அரசு தயாரித்து வருகிறது" என உறுதிபட குறிப்பிட்டார்.

மேலும், "கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து முன்னணியில் நின்று களப்பணி ஆற்றி வருகிற சுகாதார பணியாளர்களுக்கு (மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ சார்பு பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் நோயாளிகளை கண்டறிதல், பரிசோதனை மற்றும் சிகிச்சையில் ஈடுபட்டுள்ள பல தொழில் பிரிவினர்) தடுப்பு மருந்து போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்."

"பெருந்தொற்றை விரைவாக கட்டுப்படுத்துவதற்கு ஒற்றை 'டோஸ்' தடுப்பு மருந்தே விரும்பத்தக்கது. ஆனால் ஒற்றை 'டோஸ்' தடுப்பு மருந்தில் விரும்புகிற அளவு நோய் எதிர்ப்புச்சக்தியை அடைவது பெரும்பாலும் கடினம். இரட்டை 'டோஸ்' தடுப்பு மருந்துகள், விரும்பிய நோய் எதிர்ப்புச்சக்தியை அடைவதற்கு ஏற்றவை. ஏனெனில், முதல் 'டோஸ்' சில நோய் எதிர்ப்பு பாதுகாப்பை அளிக்கிறது. இரண்டாவது 'டோஸ்' அதை மேலும் அதிகரிக்கிறது.

ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்- வி' தடுப்பு மருந்தை பொறுத்தமட்டில், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

coronavirus latest news

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் பாதகமான நிகழ்வுகள் பொதுவானவை. இது போன்ற நிகழ்வுகளில் ஊசி போடப்பட்ட இடத்தில் உள்ள வலி, லேசான காய்ச்சல் மற்றும் சிவத்தல், படபடப்பு, மயக்கம் போன்ற உள்ளூர் பக்கவிளைவுகள் அடங்கும். ஆனால் இந்த பக்க விளைவுகள் நிலையற்றவை. தடுப்பு மருந்தின் பாதுகாப்பு விளைவை பாதிக்காது" என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "பயணச்சீட்டு முன்பதிவின்போது இந்தியில் குறுஞ்செய்தியா?"

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு போது, அலைபேசியில் குறுஞ்செய்தி இந்தியில் வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

கூடுதலாக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. முன்பதிவு செய்தவர்களுக்கு பயணச்சீட்டு உறுதிப்படுத்தப்பட்டதற்காக அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அக்குறுஞ்செய்திகள் ஆங்கிலத்தில்தான் இடம்பெறும். ஆனால், தற்போது பெயர் மற்றும் புறப்படும் இடம், சேரும் இடம் ஆங்கிலத்தில் உள்ளதாகவும், மற்ற எழுத்துகள் அனைத்தும் இந்தியில் வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், முன்பதிவு பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்டதை அறியமுடியாமல் பயணிகள் குழப்பமடைவதாக தகவல் பரவியது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ரயில்வே நிர்வாகம், "ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் சுயவிவரம் என்ற தலைப்பின் கீழ், விவரங்களைப் பதிவு செய்யும் போது, ஒருவரின் விருப்பமான மொழியில் பயணச்சீட்டு தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு ஏதுவாக, விருப்பமான மொழி என்ற இடத்தில் ஆங்கிலம் அல்லது ஹிந்தி என்பதைக் குறிக்க வேண்டும். ட்விட்டர் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டிய நபரின் சுயவிவரத்தில், விருப்பமான மொழி இந்தி என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. கணினி உருவாக்கிய தகவல் இந்தியில் அனுப்பப்படுவதற்கு இதுவே காரணம். எனவே, சரியான மொழி விருப்பத்தை தயவு செய்து தேர்வு செய்யும்படி பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ் திசை: "கடன் தவணை, வட்டியை முறையாக செலுத்தியவர்களுக்கு சிறப்பு சலுகை"

கொரோனா பொது முடக்கத்தின்போது, அரசு அறிவித்த 6 மாத சலுகை காலத்தில் கடன் தவணை, வட்டி உள்ளிட்டவற்றை சரியாக செலுத்தியவர்களுக்கு சலுகை வழங்குவது குறித்து நிதி அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

coronavirus latest news

பட மூலாதாரம், PRAKASH SINGH / getty images

உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கொன்றில், கொரோனா பொது முடக்க காலத்தின்போது, 2 கோடி ரூபாய்க்கும் குறைவான கடன் பெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனி நபர் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன், நுகர்வோர் கடன் உள்ளிட்ட கடன் பெற்றவர்களுக்கு வட்டி செலுத்துவதிலிருந்து அரசு 6 மாத சலுகை அளித்தது. மேலும், இந்த காலத்தில் செலுத்த வேண்டிய வட்டி மீதான வட்டியை ஏற்பதாக அரசு கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

அரசின் இந்த அறிவிப்பு, கொரோனா காலத்தில் கடன் தவணை சலுகையை பயன்படுத்தாமல் தவணை தொகையை செலுத்தியவர்களை அவமதிப்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் தவணை தொகையை செலுத்தியவர்களுக்கு கேஷ்-பேக் என்ற வகையில் சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

தவணை தொகையை திரும்ப செலுத்த அளிக்கப்பட்ட 6 மாத காலத்தில் அதற்கு வட்டி மீது வட்டி விதிக்கப்பட்டிருந்தால் எவ்வளவு என்பதை கணக்கிட்டு அந்தத் தொகையை தவணையை திரும்ப செலுத்தியவர்களுக்கு அளிக்கலாம் என தெரிகிறது.

வட்டி மீதான வட்டி எவ்வளவு என்பது குறித்து வங்கிகள் கணக்கெடுத்து வருகின்றன. எவ்வளவு தொகை என்பது குறித்து திட்டவட்டமான அளவீடு இன்னமும் கிடைக்கப் பெறவில்லை. மேலும் நிதி அமைச்சகம் அளித்துள்ள பரிந்துரையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகே எவ்வளவு கேஷ்-பேக் ஆபர் என்பது தெரியவரும்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: