ஹாத்ரஸ் வழக்கு: உண்ணாமல் நீதி கோரும் குடும்பம்; பாதுகாப்பு கேட்டு கோரிக்கை - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் வீட்டில் கடந்த சனிக்கிழமையில் இருந்து அடுப்பு பத்தவைத்து எதையும் சமைக்கவில்லை.
ஒரு வாய் சாப்பாடு கூட அவர்கள் சாப்படவில்லை. கடந்த சனிக்கிழமையில் இருந்து அடுப்பு பத்தவைத்து எதையும் சமைக்கவில்லை. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தங்களது வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள் ஹாத்ரஸில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார்.
களத்திலிருக்கும் பிபிசி செய்தியாளர் சிங்கி சின்ஹாவின் கூற்றுதான் இது.
அவர்கள் வீட்டுப் பெண் கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகக் கூறும் இவர்களின் கோரிக்கை, இதற்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே.
இவர்களது வீட்டில் பல உறவினர்கள் கூடியிருக்கிறார்கள். அவ்வளவு பேருக்கும் சமைப்பது கூட கடினம். இவ்வளவு நாள் கழித்து இன்றுதான் உயிரிழந்த அப்பெண்ணின் அண்ணி சமையலறைக்கு சென்றார்.
நேற்று வரை வெறும் பிஸ்கெட்டுகளை மட்டுமே இவர் சாப்பிட்டார்.
இன்று காலையில் இருந்து ஊடகங்களும் பத்திரிகையாளரும் அங்கே குவியத் தொடங்கியுள்ளனர்.
அக்டோபர் 3ஆம் தேதியான நேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வழக்கில் அவரது பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் கேட்டுக்கொண்டுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் தந்தையுடைய உடல்நிலை மோசமடைய, அவருக்கு சிகிச்சை அளிக்க சிறப்புப் புலனாய்வுக்குழுவின் பரிந்துரையின் பேரில் மருத்துவக்குழு ஒன்று அங்கு சென்றுள்ளது.
பல அரசியல்வாதிகளும் ஹாத்ரஸ் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
"போலீஸாரே அந்தப் பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்துள்ளனர். அதோடு, அங்கு செல்லும் பத்திரிகையாளர்களையும், அரசியல் தலைவர்களையும் தாக்குகின்றனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்," என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அப்பெண்ணின் அஸ்தியை கரைக்க அவரது குடும்பம் மறுத்துவிட்டதாக சில பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.
தங்களை இறுதிச் சடங்கு செய்யவிடாமல், போலீஸாரே உடலை எரித்தாகக்கூறும் அக்குடும்பத்தினர், எரிக்கப்பட்டது தனது மகளா இல்லையா என்று தெரிய வரும்வரை அஸ்தியை கரைக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஹாத்ரஸில் உயிரிழந்தப்பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக மருத்தவ அறிக்கை கூறவில்லை என்று போலீஸார் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில்தான் இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
எனினும், சிறப்புப் புலனாய்வுக்குழுவும், சிபிஐயும் சேர்ந்தே இந்த விசாரணையை நடத்தும் என்று தெரிகிறது.
பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் இன்று ஹாத்ரஸ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் குடும்பத்தினருக்கு கிராமத்தில் பாதுகாப்பு இல்லை என்றும் 'Y' பிரிவு பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
பிற செய்திகள்:
- ஐபிஎல் 2020: MI Vs SRH - 37 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
- விவசாய சட்டங்கள்: ’காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய சட்டங்கள் கிழித்தெறிந்து குப்பையில் வீசப்படும்’ - ராகுல் காந்தி
- டேவிட் அட்டன்பரோ: இன்ஸ்டாகிராமில் `சாதித்த' 94 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் - யார் இவர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












