கொரோனா வைரஸ்: ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கும் இந்தியா - கள நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி
அங்கித் சேத்தியா மும்பையில் உள்ள புறநகர் பகுதியில் 50 படுக்கை வசதி கொண்ட ஒரு மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
இவர் ஆக்சிஜன் ஏற்பாடு செய்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் தூங்காமல் அலைந்து கொண்டிருந்தார்.
பிவாண்டியில் உள்ள அவரது எஸ்.எஸ் ஹாஸ்பிடல் மற்றும் ரிசர்ச் சென்டரில் இருந்த 4 டேங்க் திரவ ஆக்சிஜனில், இரண்டு டேங்குகள் மட்டுமே முழுமையாக இருந்தன.
அந்த மருத்துவமனையில் இருக்கும் 50 படுக்கைகளுள் 44 படுக்கைகளில் கோவிட்-19 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
அதிக அளவில் நோயாளர்கள் வருவதால் வழக்கமாக 9 மணி நேரத்தில் தீரும் ஆக்சிஜன் சிலிண்டர் 6 மணி நேரத்திலேயே முடிந்து விடுகிறது.
ஆனால் இவருக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்பவர்களிடமும் தற்போது ஆக்சிஜன் கையிருப்பு இல்லை.
வெள்ளி இரவு முழுவதும் அவர் 10 ஆக்சிஜன் விநியோகஸ்தர்களைத் தொடர்பு கொண்டார். நான்கு வேறு மருத்துவமனைகளையும் தொடர்புகொண்டார். யாராலும் உதவ முடியவில்லை .
அதிகாலை 2 மணியளவில் அவரது மருத்துவமனையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வேறு ஒரு மருத்துவமனையில் இருந்து 20 பெரிய ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற முடிந்தது.
அவற்றைக் கொண்டு வருவதற்கான வாகன வசதியும் அவரிடம் இல்லை. இரவு முழுவதும் ஐந்து முறை அவரது மருத்துவமனையில் இருக்கும் ஆம்புலன்ஸ் ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்து வருவதற்காக சென்று வந்தது .
விநியோகஸ்தர்களிடம் இருந்து திரவ ஆக்சிஜனை பெறுவதற்காகவே தற்போது அவரது மருத்துவமனையில் நான்கு பேர் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பட மூலாதாரம், AFP
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) பிற்பகலில் பிபிசியிடம் அவர் பேசியபோது, "அடுத்த 12 மணி நேரத்திற்கு மட்டுமே என்னிடம் ஆக்சிஜன் இருப்பு உள்ளது. நெருப்புடன் போராடுவதைப் போல ஒவ்வொரு நாளும் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். எப்படியாவது ஆக்சிஜன் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் போராட்டம் இது," என்று அவர் குறிப்பிட்டார்.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 15 சதவீதம் பேருக்கு செயற்கை சுவாச உதவி தேவைப்படுகிறது.
பெரும்பாலானவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது வெளிப்படையாக தெரியவில்லை.
ஆனால் அவர்களின் உடலில் ஆக்சிஜன் அளவு மிகவும் அபாய கட்டத்தை அளவுக்கு குறைந்து போகிறது.
தீவிர சிகிச்சையில் இருப்பவர்களில் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கே வெண்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுகிறது.
இந்தியா முழுவதும் காற்றிலிருந்து ஆக்சிஜனை பிரித்து எடுப்பதற்கு சுமார் 500 தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
இவ்வாறு பிரித்தெடுக்கப்படும் ஆக்சிஜனின் பெரும்பங்கு இரும்பு மற்றும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி துறையில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகளுக்கான உலைக்கலன்களை இயக்குவதற்கு சென்றுவிடுகிறது.
இவ்வாறு தயாரிக்கப்படும் ஆக்சிஜனில் 15 சதவிகித மருத்துவ பயன்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
தொழிற்சாலையிலிருந்து ஆக்சிஜன் திரவ வடிவில் மருத்துவமனைகளுக்கு டேங்கர்களில் அனுப்பிவைக்கப்படும். அங்கு அந்த ஆக்சிஜன் வாயுவாக மாற்றப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்படும்.
சில மருத்துவமனைகள் ஆக்சிஜனை வாயுவாக சேமிக்கும் ஸ்டீல் மற்றும் அலுமினிய சிலிண்டர்களை பயன்படுத்துகின்றன. இந்த சிலிண்டர்கள் ஒவ்வொரு படுக்கைக்கும் மாற்றப்பட்டு கொண்டே இருக்க வேண்டும்.
முடக்க நிலையை இந்தியா தொடர்ந்து தளர்த்தி வருவதால் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சுமார் 48 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த ஒரு வார காலம் மட்டும் ஆறு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையுடைய நாடாக இந்தியா உள்ளது.
இதன் காரணமாக ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.
ஆல் இந்தியா இண்டஸ்ட்ரியல் கேஸ் மேனுஃபாக்சரிங் அசோசியேசன் அமைப்பின் தரவுகளின்படி, ஏப்ரல் மாதம் இந்தியா முழுவதும் நாள்தோறும் 750 டன் ஆக்சிஜன் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டன.
ஆனால் தற்போதைய நிலவரப்படி தினசரி 2700 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க தொடங்கி விட்ட காரணத்தால் அங்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவும் மிகவும் அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், Reuters
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் விகிதம் அதிகமாக உள்ளது.
தற்போது உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் 55 சதவிகிதம் மருத்துவமனைகளுக்கு சென்று விடுகின்றன. 45 சதவீதம் மட்டுமே தொழிற்சாலைகளுக்கு செல்கின்றன என்று இந்த அமைப்பின் தலைவர் சாகேத் டிக்கு தெரிவிக்கிறார்.
தொழிற்சாலைகளுக்கு நாங்கள் இந்த ஆக்சிஜனை அனுப்பாவிட்டால் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பாவிட்டால் மனித உயிர்கள் அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் என்று அவர் கூறுகிறார்.
இந்த சூழலை சமாளிக்க ஆக்சிஜனை உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
ஆனால் பிரச்சனைக்கு அது மட்டுமே தீர்வாகாது. இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்திக் கூடங்கள் பெரும்பாலும் பெருநகரங்களுக்கு அருகிலேயே உள்ளன.
தொலை தூரங்களில் உள்ள கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு இவை அனுப்பப்பட வேண்டும். ஆனால் அவை கிரையோஜெனிக் டேங்க் உடைய சரக்கு வாகனங்களில் மட்டுமே அனுப்பி வைக்கமுடியும்.
இந்தியாவில் அத்தகைய வாகனங்களின் எண்ணிக்கை 1500 மட்டுமே.
டெல்லி போன்ற சில மாநிலங்களில் ஒரே ஒரு ஆக்சிஜன் உற்பத்திக் கூடம் கூட கிடையாது. இத்தகைய மாநிலங்கள் அனைத்தும் அண்டை மாநிலங்களில் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
உயிரையே காப்பாற்றும் ஆக்சிஜன் வாயுவின் விலைக்கு இந்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயம் செய்து இருந்தாலும், அது கள்ளச்சந்தையில் விற்கப்படுவது தடுக்கப்படவில்லை.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

சிலிண்டரில் விற்கப்படும் ஆக்சிஜனின் விலைக்கு அதிகபட்ச வரம்பை இந்திய அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் திரவ வடிவ ஆக்ஸிஜனுக்கு அவ்வாறு நிர்ணயம் செய்யப்படவில்லை என்று கூறுகிறார் டிக்கு.
சுமார் 80,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ள இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை இறப்பு விகிதத்தை அதிகரிக்கவே செய்கிறது.
கடந்த வாரம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் நான்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. எனினும் இந்த கூற்றை அதிகாரிகள் மறுக்கின்றனர்.
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மருத்துவமனையில் 70 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்த நிகழ்வு இன்னும் மறக்கப்படவில்லை.
ஆக்சிஜன் விநியோகம் செய்பவர்களுக்கு பணம் கொடுக்கப்படாததால் விநியோகம் நிறுத்தப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
தற்போது மத்திய பிரதேசத்தில் ஆக்சிஜனுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.
சின்ட்வாராவில் ஆக்சிஜன் நிரப்புதல் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் பியூஸ் பட் கடந்த மாதத்தில் இருந்ததைவிட இப்போது ஆக்சிஜன் தேவை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறுகிறார்.
இந்தியாவிலேயே அதிகமான கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொண்டுள்ள மகாராஷ்டிராவிலும் இதே நிலைமைதான்.
ஆக்சிஜன் பற்றாக்குறையை தடுப்பதற்காக மகாராஷ்டிராவில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தொழில் காரணங்களுக்காக கொண்டுசெல்லப்படும் ஆக்சிஜன் அளவை அந்த மாநில அரசு கட்டுப்படுத்தி உள்ளது.
"மகாராஷ்டிராவில் இருந்து ஆக்சிஜன் வராததால் இங்கு எங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இப்படி ஒரு சூழலை நான் என் வாழ்வில் எதிர் கொண்டதே இல்லை என்று கூறுகிறார் பியூஸ்.
இந்தப் பிரச்சனைக்கு அரசு தீர்வு காணாவிட்டால் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரிய நெருக்கடியாக உருவாகும். அது இத்தாலியில் கொரோனா வைரஸ் நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது என்ன நிகழ்ந்ததோ அது இங்கேயும் நிகழ வழிவகுக்கும் என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.
சுமார் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரிலும் இதே நிலைமைதான்.
ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 960 படுக்கைகள் உள்ளன. அங்கு கோவிட்-19 தொற்றாளர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள 400 படுக்கைகளில் பெரும்பாலானவை நிரப்பப்பட்டு விட்டன.
தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் 110 படுக்கைகளில் 100 படுக்கைகள் நிரப்பப்பட்டுள்ளன.
சென்ற வார இறுதியில் அங்கித் சேத்தியாவும் ஆக்சிஜன் வேண்டும் என்று கோரிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
தனது மருத்துவமனையில் இருந்து ஒரு மிகப்பெரிய ஆக்சிஜன் சிலிண்டரை அருகில் உள்ள வேறு ஒரு மருத்துவமனைக்கு அவர் கொடுத்தார்.
"தங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் வந்து சேர்வதற்கு முப்பது நிமிடங்களுக்கு முன்பே ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காவிட்டால் அவரது மருத்துவமனையில் இருக்கும் ஐந்து நோயாளிகள் உயிர் இழப்பார்கள் என்று அந்த மருத்துவமனையின் உரிமையாளர் என்னிடம் கூறினார். நிலைமை அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது," என்றார் சேத்தியா.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?
- கொரோனா தடுப்பூசி: எமிரேட்ஸில் பரிசோதனை தடுப்பூசி போட்டுக் கொண்ட மதுரை இளைஞரின் நேரடி அனுபவம்
- இரான், வட கொரியாவை தொடர்ந்து பாகிஸ்தானும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகிறதா?
- வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா தடை - பாகிஸ்தான், சீனாவுக்கு லாபம் தரும் நடவடிக்கையா?
- வெள்ளியில் வேற்று கிரக உயிர்கள்? - நம்பிக்கை ஒளி பாய்ச்சும் புதிய கண்டுபிடிப்பு
- தமிழகத்தில் கொரோனா வைரஸ் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன?
- 'நீட் தற்கொலைகளுக்கு காரணம் திமுகதான்' - எடப்பாடி பழனிசாமி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












