தமிழகத்தில் கொரோனா வைரஸ் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கோவிட் - 19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் உள்ளிழுக்கும் திறன் பாதிக்கப்பட்டிருந்தாலும் இதயத் துடிப்பு அதிகரிப்பதில்லை. இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன, கோவிட் - 19 சிகிச்சையில் தற்போது ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் என்ன?
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5500-6000 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து அதிரித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக இதுவரை சுமார் 5,08,000 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,400 பேர்வரை உயிரிழந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து தமிழக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவரும் நிலையில், இந்நோயை எதிர்கொள்வதில் தொடர்ச்சியாக பல்வேறு படிப்பினைகள் கிடைத்துவருகின்றன.
இது குறித்து பிபிசியிடம் பேசிய கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் துறை பேராசிரியர் டாக்டர் பரந்தாமன், "முன்பே கூறியது போல, கோவிட் நோயை கண்டறிந்தவுடனேயே சிகிச்சைக்கு வர வேண்டும். நுரையீரலில் பாதிப்பு சிறிதளவு இருந்தாலும் ஸ்டீராய்டுகள், methylprednisolone போன்ற மருந்துகளை அளிக்க ஆரம்பித்துவிட வேண்டும். இதன் மூலம் நுரையீரல் பாதிப்பு அதிகரிப்பதைத் தடுத்துவிடலாம்" என்கிறார் அவர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

தற்போது பலர் கோவிட் - 19 என உறுதியானவுடனேயே அறிகுறியேதும் இல்லாத நிலையிலேயே சிடி ஸ்கேன் எடுத்துப் பார்க்கிறார்கள். இதில் நுரையீரலில் பாதிப்பு ஏதும் இல்லையென்றால் அலட்சியமாக இருந்துவிடுகிறார்கள்.
ஆனால், இது அபாயகரமானது என்கிறார்கள் மருத்துவர்கள். நோய் தாக்கியவுடனேயே ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் நுரையீரலில் பாதிப்பு இருப்பதே தெரியாது. நான்கைந்து நாட்களுக்குப் பிறகே இது தெரியவரும். முன்னதாகவே எடுத்துவிட்டால், அது தவறான நம்பிக்கையைக் கொடுத்து, சிகிச்சையில் அலட்சியம் காட்டச் செய்துவிடும்.
அதேநேரம், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணரல் போன்ற அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் உடனடியாக ஸ்கேன் எடுத்துவிடலாம். ஆகவே இதனை மருத்துவர்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

கோவிட் - 19 நோய் தாக்கி, ஆக்ஸிஜன் உள்ளிழுக்கும் திறன் குறைந்தால் இதயத் துடிப்பில் மாற்றம் ஏதும் ஏற்படுவதில்லை என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மனிதர்களுக்குப் பல்வேறு காரணங்களால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அதனை எதிர்கொள்ள அந்தத் தருணத்தில் இதயத் துடிப்பு அதிகரிக்கும். இதுதான் உடலின் இயல்பான செயல்பாடு.
"ஆனால், கோவிட் - 19 தாக்கும்போது, ஆக்ஸிஜன் உள்ளிழுக்கும் அளவு 70 என்ற நிலைக்குக் குறைந்தால்கூட இதயத் துடிப்பு சாதாரணமாகவே இருக்கும். ஆகவே, பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் ஆக்ஸிஜன் உள்ளிழுக்கும் விகிதம் 90க்குக் கீழே இருந்து, இதயத் துடிப்பும் சாதாரணமாக இருந்தால், அவர் கோவிட் -19ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உடனே சொல்லிவிடலாம்" என்கிறார் பரந்தாமன்.
கோவிட் - 19 தாக்கும்போது, உடலில் உள்ள ஆக்ஸிஜனை கண்காணிக்கும் அமைப்பு செயலிழப்பதால்தான் இது நடக்கிறது. நம்முடைய கழுத்தில் உள்ள கரோட்டிட் பாடி என்ற செல் தொகுப்பு போன்ற ஆக்ஸிஜன் சென்சார்கள் மூலம் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு கண்காணிக்கப்படுகிறது.
உடம்பில் ஆக்ஸிஜன் அளவு குறைந்த உடனேயே இவை செயல்பட்டு இதயத் துடிப்பை அதிகரிக்கும். கூடுதல் ஆக்ஸிஜன் கிடைப்பதற்காக இப்படிச் செய்கிறது. ஆனால், கோவிட் - 19 தாக்கும்போது இந்த அமைப்பு செயலிழக்கிறது.
ஆகவே ஆக்ஸிஜன் உள்ளிழுப்பு 70க்குக் கீழ் வந்தாலும் உடல் அதற்கேற்ற வகையில் செயல்பட முடிவதில்லை. ஆனால், இந்தச் செயலிழப்பு மிகத் தீவிரமான கோவிட் நோயாளிகளுக்கே நிகழும். அறிகுறிகள் இல்லாத நோயாளிகளுக்கு இது நிகழ்வதில்லை.
"ஆனால், இந்த நிலையிலும் நோயாளிகளைக் காக்க முடியும். இந்த நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மெதில்ப்ரெட்னிசலோன் போன்ற மருந்துகள் கொடுக்கப்பட்டு, வீக்கம் குறைய ஆரம்பித்தால், ஆக்ஸிஜனை கண்டறியும் அமைப்பு மீண்டும் செயல்பட ஆரம்பித்துவிடும்" என்கிறார் பரந்தாமன்.
இப்போது கோவிட் - 19ஆல் பாதிக்கப்பட்டவர்கள், மூன்று நிலைகளில் சிகிச்சையளிக்கப்படுகிறார்கள்.
அறிகுறிகள் இல்லாமல் சாதாரண நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ஸ்டீராய்ட் போன்ற மருந்துகள் கொடுத்து கண்காணிக்கப்படுகிறார்கள். மிதமான அறிகுறிகள் உள்ள நோயாளிகள் டோஸலிசிமாப், ரெம்டிசிவிர், பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மிகத் தீவிரமான நிலையில் உள்ள நோயாளிகள், மருந்துகளோடு ஆக்ஸிஜனும் தொடர்ச்சியாக அளிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், SAM PANTHAKY / Getty
தவிர, கோவிட் நோயாளிகளின் ஆக்ஸிஜன் உள்ளிழுப்பு விகிதம் அவர்கள் படுத்திருக்கும்போது அதிகமாகவும் உட்கார்ந்திருக்கும்போது குறைவாகவும் இருக்கும். ஆகவே, கோவிட்டால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் உள்ளிழுக்கும் விகிதம் குறைவாக உள்ளபோது, அவர்கள் எழுந்து உட்கார்ந்தால் மேலும் ஆக்ஸிஜன் குறைந்து அபாய நிலையை அடையக்கூடும்.
தற்போது கோவிட் - 19 சிகிச்சையில் உலகம் முழுவதும் தரப்படும் டோஸிலிஸிமாப், ரெம்டிசிவிர் போன்ற மருந்துகள் எந்த அளவுக்குப் பலனளிக்கின்றன?
"மிதமான அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர், டோஸிலிசிமாப் போன்றவற்றை ஆரம்பத்திலிருந்தே கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் இவை நுரையீரல் பாதிப்பு அதிகமடைவதைத் தடுக்கும். நோய் கடுமையாகத் தாக்கிய பிறகு, இவை பெரிதாகப் பலனளிப்பதில்லை. ஆனால், தற்போது இவைதான் இந்த நோய்க்கு நம்மிடம் உள்ள மருந்துகள்" என்கிறார் பரந்தாமன்.
தமிழ்நாட்டில் கோவிட் - 19 நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதமாக ஒரே நிலையில் நீடித்துவருகிறது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால், கோவிட் - 19லிருந்து மீண்ட பிறகு வரும் உடல்நலக் குறைபாடுகளை எதிர்கொள்வதுதான் இனி மிகப் பெரிய சவாலாக இருக்கும்.
கோவிட் - 19க்குப் பிந்தைய மறுவாழ்வுப் பயிற்சி அளிக்கும் துறை மிகப் பெரிய துறையாக உருவெடுக்கும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள். ஆகவே, அரசு மருத்துவமனைகள் இதற்கான தனிப் பிரிவுகளைத் துவங்குவதற்கு ஆரம்பித்துள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












