ஜிடிபி வீழ்ச்சி: ''ஏழைகள் சாப்பாட்டு செலவை குறைத்து விட்டார்கள்'' - பொருளியல் பேராசிரியர் ஜோதி சிவஞானம்

பட மூலாதாரம், Getty Images
மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு பதிலாக விலைவாசியை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பதிலாக சரிவை ஏற்படுத்தும் முடிவுகளை பாஜக அரசு எடுத்ததுதான் இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என பொருளியல் பேராசிரியர் ஜோதி சிவஞானம் கூறுகிறார்.
இந்தியாவின் 2020 நிதியாண்டின் முதல் காலாண்டு ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) 23.39 சதவீதம் சுருங்கியிருக்கிறது என இந்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் காட்டுகிறது. இந்த வரலாறு காணாத சரிவு எதை உணர்த்துகிறது என பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் விளக்கினார் சென்னை பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம்.
பேட்டியிலிருந்து:
பிற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஜிடிபி -23.9சதவீதம் சுருங்கியுள்ளது. இதன் தொடக்கம் எது?
2020ல் நாம் சந்தித்துள்ள இந்த வீழ்ச்சியின் விதை 2016ல் துளிர்விட்டது. 2016ல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பின் தாக்கம் இந்திய பொருளாதாரத்தில் ஆழமான சரிவை ஏற்படுத்திவிட்டது. 2016ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு புள்ளிவிவரங்கள் அதற்கு சாட்சி. 2017-18ல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு கொண்டுவந்தார்கள். அப்போது சரிவு என்ற செடி ஆழமாக வேரூன்றியது. கடந்த நான்கு ஆண்டுகளாக பொருளாதாரம் உயரவில்லை. குறிப்பாக கடந்த 2019-20 வேகமான சரிவு ஏற்பட்டது. தற்போது கொரோனா முடக்கத்தில் அந்த செடி விருட்சமாகிவிட்டது.
நிதிஅமைச்சகம் தெரிவித்தது போல பொருளாதார சரிவுக்கு கடவுளின் செயல் காரணமல்ல. இந்திய அரசு எடுத்து தவறான பொருளாதார கொள்கை முடிவுகள்தான் காரணம். கூர்ந்து பார்த்தால், பாஜக அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து ஜிடிபி புள்ளிவிவரங்களை கணக்கிடும் முறையை பலவிதமாக மாற்றி அமைத்தர்கள். ஜிடிபி புள்ளி அதிகரித்துள்ளதாக காட்டுவதற்கு கணக்கிடும் முறையை மாற்றினார்கள்.
ஒரு நாட்டின் ஜிடிபி அதிகரிக்கின்றது என்றால், அங்கு முதலீடு அதிகரிக்கவேண்டும், மின்சாரத்தின் நுகர்வு அதிகரிக்கவேண்டும்,பொது மக்களின் வாங்கும் சக்தி உள்ளிட்ட 22 விதமான குறியீடுகள் அதிகரிக்கவேண்டும். ஆனால் பாஜக அரசாங்கம் மாற்றியமைத்த ஜிடிபி கணக்கீட்டில், ஜிடிபி சதவீதம் மட்டும் உயருகிறது, ஆனால் பிற குறியீடுகள் குறைந்துகொண்டே போகின்றன.

பட மூலாதாரம், Getty Images
சுமார் 130கோடி மக்கள் வாழும் நாட்டில் சாதாரண மக்களின் நுகர்வு குறைந்துள்ளது என்றால் பொருளாதார சரிவு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம். எத்தனை நபர்களுக்கு வருமான இழப்பு, வேலையிழப்பு ஏற்பட்டிருந்தால், மக்களின் நுகர்வு குறைந்திருக்கும் என பாருங்கள்.
ஏற்றுமதி 20 சதவீதம் ,இறக்குமதி 40 சதவீதம் குறைந்துவிட்டது. சாதாரண மக்கள் செய்யும் செலவு 27 சதவீதம் சுருங்கிவிட்டது. தனியார் முதலீடுகள் சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளது. இவையெல்லாம் இந்த ஒரே ஆண்டில் ஏற்பட்டவை அல்ல. கடந்த ஆண்டே பொருளாதாரம் மைனஸ் அளவுக்கு சென்றபோதும், ஜிடிபி கணக்கிடும் முறையை மாற்றியமைத்து ஜிடிபி அதிகரித்துள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள். தற்போது உண்மை வெளிப்படையாக தெரிகிறது.
கொரோனாவால் உடனே மரணம் ஏற்படுத்துவதில்லை. இணைநோய்கள் இருப்பவர்களுக்கு கொரோனா வந்தால் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதுபோலவே, ஏற்கனவே, இணைநோய் ஏற்பட இவர்கள் எடுத்த தவறான கொள்கை முடிவுகள், அதோடு பிரச்சனைகளை சரியாக கையாளாமல் விட்டதால் ஏற்பட்ட சரிவுகள் தொடர்ந்தால், தற்போது கொரோனா ஊரடங்கில் சரிவு உறுதியாகிவிட்டதை நாம் பார்கிறோம்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

மேக் இன் இந்தியா, பிரதமர், அமைச்சர்கள் பயணம் செய்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்ததாக சொல்லப்பட்ட சாதனைகள் இந்த ஜிடிபி புள்ளிவிவரத்தில் காணப்படவில்லை. ஏன்?
திட்டங்கள் எல்லாம் பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியாகின. நேரடியாக மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. அரசு அறிவித்த திட்டங்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்கவில்லை. மக்களிடம் பணபுழக்கம் ஏற்படவில்லை. இதன்மூலம் உண்மை என்ன என்பதை புரிந்துகொள்ளலாம்.
இந்தியாவில் உற்பத்தி செய்த பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டுவது மேக் இன் இந்தியா என்ற திட்டம். தற்போது ஏற்றுமதி 20 சதவீதம் குறைந்துவிட்டது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு நேர் எதிர்மறையான திட்டம் ஆத்ம நிர்பர். கொரோனா சமயத்தில் ஆத்ம நிர்பர் என்ற திட்டத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்த பொருட்களை உள்நாட்டில் நுகர்வுக்கு கொடுப்பது என்ற திட்டம் அறிமுகமானது. ஆனால் இங்கு நுகர்வு குறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தயாரிக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்யவோ, உள்நாட்டில் நுகரவோ மக்கள் தயாராக இல்லை.
ஏற்றுமதி,இறக்குமதியால்தான் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா பெரும் வளர்ச்சியை எட்டியது. 1990களுக்கு முன்னர் உள்நாட்டு உற்பத்தியை மட்டுமே நாம் நம்பினோம். 1990களில் புதிய பொருளாதார கொள்கை வந்த பின்னர், வெளிநாட்டு நிறுவனங்களுக்காக இந்தியாவில் தயாரிப்பு பணிகள் குறைந்த செலவில் அளிப்பது, தகவல் தொழில்நுட்ப பணிகள் என பல்வேறு விதத்தில் ஏற்றுமதி இறக்குமதி மூலம் நம் பொருளாதாரம் உயர்ந்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் துறைகள் என்னென்ன. எந்த துறையில் நாம் இந்த காலாண்டில் உயர்வை எட்டியிருக்கிறோம்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்வதில் ஆட்டோமொபைல் உள்ளிட்ட உற்பத்தி தொழில்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்டவை சுமார் 82 சதவீதமாக உள்ளன.
இந்தியாவின் பொருளாதாரத்திற்கு விவசாயம் உள்ளிட்ட உள்நாட்டு தொழில்கள் 15 சதவீதம் ஈட்டுகின்றன. விவசாயத்தில் இந்த காலாண்டில் 3.4சதவீதம் வளர்ச்சி உள்ளது. ஏனெனில், ஊரடங்கு காலத்தில், பிறதொழில் நிறுவனங்களை போல விவசாயத் தொழில்கள் பாதிக்கப்படவில்லை. இந்த வளர்ச்சியால் விவசாயிகள் பலனை அனுபவிக்கவில்லை. ஜிடிபி புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் மக்களின் நுகர்வு 27 சதவீதம் குறைந்துள்ளது. இந்திய கிராமங்களை பொறுத்தவரை, மக்களின் நுகர்வில் பெரும்பகுதி உணவுக்காக செலவிடப்படும். அந்த செலவு குறைந்துள்ளது.
விவசாயம், கட்டுமான தொழில் செய்பவர்கள் தங்களது வருமானத்தை முழுமையாக செலவு செய்யக்கூடியவர்கள். பெரும் பணக்காரர்கள் தங்களிடம் உள்ள பணத்தில் பெரும்பகுதியை செலவு செய்யமாட்டார்கள். ஆனால் சாதாரண மக்கள் வருமானத்தை செலவு செய்யவேண்டும் என்றபோதும், அவர்கள் செய்யவில்லை.
தவறான பொருளாதார கொள்கை முடிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மக்கள். ஏழை மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது என்பது உணவுக்கு செலவு செய்ய கூட பணம் இல்லாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம். ஒரு புறம் இந்தியா முழுவதும் முதலீடுகள் குறைந்துவிட்டது, வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டது, சாதாரண மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துவிட்டது. ஆனால் விலைவாசி அதிகரித்துவிட்டது. இதன் வெளிப்பாடுதான் இந்த புள்ளிவிவரங்கள்.
குறைந்தபட்சம் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு நேரடியாக பணத்தை நிவாரணமாக மத்திய அரசு அளித்திருக்கவேண்டும். அதையும் செய்யத் தவறியதால், மாநில அரசுகள் மட்டும் பெரும்பங்கு நிவாரணத்தொகையை கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இத்தனை ஆதாரங்களும் சொல்வது ஒன்றைத்தான். தவறான கொள்கை முடிவுகள் எளிய மக்களை பாதித்தது, அதன் விளைவாக இந்திய நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவை எட்டியுள்ளது. இதிலிருந்து மீள நீண்ட காலம் ஆகும். எந்த வெளிச்சமும் தெரியவில்லை. காரிருள் சூழ்ந்துவிட்டது. இழைத்த தவறுகளை சரிசெய்யும் நேரம் கடந்துவிட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












