பிஹாரில் இளம் பெண்களால் நடத்தப்படும் சானிட்டரி நாப்கின் வங்கி

சானிட்டரி நாப்கின் வழங்கும் பணியில் பெண்கள்

பட மூலாதாரம், SEETU TEWARI

படக்குறிப்பு, சானிட்டரி நாப்கின் வழங்கும் பணியில் பெண்கள்
    • எழுதியவர், சீட்டூ திவாரி
    • பதவி, பிபிசி நிருபர்

"ஜேபி" என்றழைக்கப்படும் லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் சீடர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் அவரின் மதிப்புகள் மற்றும் இலட்சியங்களைக் கைவிட்ட நிலையில், பீகாரின் உட்பகுதிகளில் ஜே.பி. கட்டிய ஆசிரமங்கள் உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் இன்னும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.

1952 ஆம் ஆண்டில், ஜெயபிரகாஷ் நாராயண் நவாதாவின் கௌவ்வாக்கோல் தொகுதியில் ஷெகோதேவரா ஆசிரமத்தை நிறுவினார்.

127 இளம்பெண்கள் குழு, 27 சானிட்டரி பேட் வங்கிகள்

இந்த ஆசிரமத்தின் முயற்சியால், இன்று, பிஹார் மாநிலத்தின் நவாதா மாவட்டத்தின் ரஜோலி மற்றும் அக்பர்பூர் தொகுதிகளில் 127 இளம் பருவப் பெண்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, அவை 27 சானிட்டரி பேட் வங்கிகளை உருவாக்கியுள்ளன. இதில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பருவப் பெண்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

ரஜோலி தொகுதி மேம்பாட்டு அதிகாரி பிரேம் சாகர் மிஸ்ரா, தொலைபேசியில் பிபிசி-க்கு அளித்த பேட்டியில், "கிராமத்தின் இளம்பெண்களால் நடத்தப்படும் இந்த வங்கி அற்புதமான ஒரு ஏற்பாடு. சமூகத்தில் சானிட்டரி பேட்களைக் குறித்துப் பேசுவது கூட விலக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. அந்தத் தடையை உடைப்பதாக இந்த வங்கி அமைந்துள்ளது. இதுபோன்ற பல பிற்பட்ட பகுதிகள், கிராமங்களில் கூட இந்தப் பெண்கள் சானிட்டரி பேட்களை வழங்குகிறார்கள். " என்று கூறினார்.

ரஜோலியில் ஏற்பட்ட மாற்றத்தின் கதை

நவாதாவின் ரஜோலி தொகுதி, வறண்ட, நக்சல் பாதித்த ஒரு வனப்பகுதி.

இந்த மாற்றம் 2016 ஆம் ஆண்டு தொடங்கியது. சர்வோதய ஆசிரமத்தின் கிராம நிர்மாண மண்டலம், பாப்புலேஷன் ஃபௌண்டேஷன் ஆஃப் இந்தியா என்ற அமைப்புடன் இணைந்து, இளம் பருவப் பெண்களிடையே பணியாற்றத் தொடங்கியது.

நாப்கின்கள்

பட மூலாதாரம், Getty Images

ரஜோலியின் ஹர்தியா கிராமத்தைச் சேர்ந்த ஸ்வீட்டி, "அக்காக்கள் வந்த போது எங்க குடும்பத்தினர் எங்களை அவங்களோட பேசவே விடல. ஆனா அவங்க தொடர்ந்து வந்தாங்க. அப்புறம் கிராமவாசிகள் முதல்ல அம்மாக்களோட அவங்க பேசட்டும்னு சொன்னாங்க. அம்மாக்கள் கூட மனசில்லாம தான் அனுமதிச்சாங்க.” என்று கூறுகிறார்.

இதன் பின்னர், 13 முதல் 19 வயதுடைய இளம் பருவப் பெண்கள் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள், குழந்தைத் திருமணம், மாதவிடாய், இளம் பருவப் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கத் தொடங்கின.

பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்வீட்டி, இந்தக் குழுவில் சேர்ந்த பிறகுதான் துணி பயன்படுத்துவதை விட்டு சானிட்டரி பேட்களைப் பயன்படுத்தத் தொடங்கியதாகக் கூறுகிறார்.

தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மற்ற பிற மாற்றங்களைப் பற்றியும் அவர் பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார். "பள்ளிக்கும் இப்போது தனியாகப் போகிறோம். முன்னெல்லாம், வீட்டிலிருந்தோ அக்கம் பக்கத்திலிருந்தோ யாராவது ஆணின் துணையோடு செல்வோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், படிப்பு நிறுத்தப்படும் நிலை இருந்தது." என்கிறார்.

முன்னுதாரணமாகத் திகழ்ந்த மௌசம்.

ரஜோலி தொகுதி முழுமைக்கும் பருவ வயதுப் பெண்கள் மத்தியில் மாற்றத்திற்கான முன்மாதிரியாகத் திகழ்பவர், 19 வயது மௌசம் குமாரி. நவாதாவின் கே.எல்.எஃப் கல்லூரியின் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவியான மௌசம், செப்டம்பர் 2017 இல் சானிட்டரி பேட் வங்கியின் மாதிரியை உருவாக்கினார்.

பெண்கள்

பட மூலாதாரம், SEETU TEWARI

தனது குழுவான 'ஏக்தா கிஷோரி குழும’த்தைச் சேர்ந்த சிறுமிகளை தினமும் ஒரு ரூபாய் சேமிக்க அறிவுறுத்தினார். மாத இறுதியில் 30 ரூபாய் சேரும். குழுவின் இரண்டு சிறுமிகள் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஜோலி பஜார் சென்று சானிட்டரி பேட்களை வாங்கி வருவர்.

டிரக் டிரைவர் சோட்டே லால் சிங்கின் மகள் மௌசம், "முதல் முறையாக பேட்களை வாங்கிய பிறகு, மொத்த விலையில் பேட்களைக் கொடுக்குமாறு கடைக்காரரிடம் கேட்டோம், அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். இதற்குப் பிறகு நாங்கள் கிஷோரி குழுவின் சிறுமிகளுக்கு மொத்த விலையில் பேட்களை வழங்கத் தொடங்கினோம். அதே சமயம், கிராமத்தில் உள்ள மற்ற பெண்களுக்கும் இந்த பேட்களை வழங்கத் தொடங்கினோம். ஆனால், அவர்களுக்குச் சற்று கூடுதல் விலையில் வழங்கினோம். இதன் மூலம், பணம் சேமிக்க முடியாத இளம்பருவப் பெண்களுக்கு இலவசமாக வழங்கவும் முடிந்தது." என்று விளக்குகிறார்.

கிராம நிர்மாண மண்டலத்தின் தொகுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் பரத் பூஷண் சர்மா கூறுகையில், "ஹர்தியா பஞ்சாயத்தின் ஹர்தியா கிராமத்தில் இந்த மாதிரி வெற்றிகரமாகச் செயல்பட்ட நிலையில், மௌசம் மூலமாக இன்னும் பல இளம் பருவப் பெண்கள் குழுக்களை உருவாக்கிப் பயிற்சி அளித்தோம். இதன் காரணமாக இன்று 27 சானிட்டரி பேட் வங்கிகள் உள்ளன, அவை வளர் இளம் பருவப் பெண்கள் மட்டுமன்றி, கிராமத்துப் பெண்கள் அனைவருக்குமே மாதவிடாய்க் காலத்தில் உதவி செய்ய முடிகிறது.” என்று தெரிவித்தார்..

வங்கியின் உள்கட்டமைப்பு என்ற பெயரில், இந்த குழுக்களில் ஒரு பதிவேடு, பணத்தை டெபாசிட் செய்ய ஒரு பெட்டி மற்றும் சானிட்டரி பேட்களை வைத்திருக்க ஒரு அட்டைப்பெட்டி மட்டுமே உள்ளன.

இவையனைத்தும், குழுவின் தலைவர் அல்லது செயலாளரிடம் உள்ளன. கிஷோரி குழு ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூடுகிறது. அதில் சேர்ந்துள்ள தொகை மற்றும் தேவைக்கேற்ப பேட்கள் வழங்கப்படுகின்றன.

கிராமத்தில் வேறு எந்தப் பெண்ணுக்கும் ஒரு பேட் தேவைப்பட்டால், அவர் தலைவர் அல்லது செயலாளரின் வீட்டிற்குச் சென்று, உரிய விலையைச் செலுத்தி பேட்களைப் பெற்றுக்கொள்ளலாம். சுய உதவிக்குழுக்கள் அல்லது பார்வையாளர்கள் அவ்வப்போது குழுவிற்கு நன்கொடை அளித்தும் உதவுகிறார்கள்.

நாப்கின்கள்

பட மூலாதாரம், Getty Images

குழந்தை திருமண தடை, நோய்க்கான தீர்வு இவையும் குழுவின் சேவை

இந்த இளம்பெண்கள் குழுவினர் இதுவரை 53 குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இது தவிர, பருவ வயதினருக்கும் மாதவிடாயில் சுகாதாரக் கேட்டால் ஏற்படும் நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

சுரைலாவின் அரசு நடுநிலைப் பள்ளி மாணவி சானியா கூறுகையில், "முன்பு நான் துணியைப் பயன்படுத்தினேன், இதனால், ல்யூகோரியா ஏற்பட்டது. பின்னர் பேட் பயன்படுத்தத் தொடங்கியதால் அந்நோய் குணமானது” என்று கூறுகிறார்.

இந்த இளம் பெண்கள் குழுக்களின் விழிப்புணர்வால் பல பெண்கள் காப்பாற்றப்பட்டனர். அனிதாவிற்கு (பெயர் மாற்றப்பட்டது) வயிற்று வலி இருந்தது. அவருக்கு வயிறு வீக்கம் மற்றும் அடிக்கடி வாந்தி இருந்தது. இதன் விளைவாக, அனிதா தனது பெற்றோர் மற்றும் சமூகத்தின் அவதூறுகளைத் தாங்க வேண்டியிருந்தது.

"அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று அவளுடைய பெற்றோரும் நம்பினர். அவள் அழுது கொண்டேயிருந்தாள். நாங்கள் அவளைத் தூக்கிக்கொண்டு மருத்துவரிடம் சென்றோம். அவள் குணமாகிவிட்டாள்" என்கிறார் மௌசம்.

இளம்பெண்களால் தொடங்கப்பட்ட சிறார் மருத்துவமையத்தில் சிறுவர்களும் பயன்பெற்றனர்.

இந்தத் தொகுதியில், கிராம நிர்மாண மண்டலத்தின் முயற்சிகள் காரணமாக நிர்வாகப் பொறுப்புணர்வை அதிகரிக்க ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் மக்கள் மன்றங்கள் நடத்தப்படுகின்றன. இதில், தொகுதி நிலை அதிகாரிகள் மக்கள் முன் வருகின்றனர். மக்கள் தங்கள் கோரிக்கைகளை வைக்கின்றனர்.

கிஷோரி குழுவினருடன் பணிபுரியும் ஷீலா குமாரி, “மாதவிடாய், குடும்பக் கட்டுப்பாடு குறித்துப் பேசுவதற்கு முன்பு தயங்கிய நிலையில், அதே பெண்கள் இன்று, அனைவருக்கும் முன்னால் இளைஞர் கிளினிக்குகள் திறக்கவேண்டி அதிகாரிகளைக் கோரினர்." என்று பிபிசி-யிடம் தெரிவித்தார்.

"இந்த மக்கள் தங்கள் கோரிக்கைகளை சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டேவின் முன்வைத்தனர். அதன் பிறகு ராஜோலி மருத்துவமனையில் இளைஞர் மருத்துவமனை திறக்கப்பட்டது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஒரு ANM மற்றும் மருத்துவர் அங்கு வருகிறார்கள்."

இளம் பருவப் பெண்கள் மட்டுமல்ல, இளைஞர்களும் இந்த இளைஞர் கிளினிக்கைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 19 வயதான ஆதித்யா விந்து விரைந்து வெளியேறும் பிரச்சனையால் சங்கடப்பட்டார்.

பிபிசியுடன் பேசிய அவர், "என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை. பின்னர் இளைஞர்கள் கிளினிக்கிற்குச் சென்றேன். அங்கு ஆலோசனை பெற்றேன். இப்போது குணமடைந்துவிட்டேன். அதன் பிறகு என் நண்பர்களிடமும் சொன்னேன். பல இளைஞர்கள் தங்கள் பிரச்சினைகளுடன் அங்கு சென்றுள்ளனர்." என்றார்.

இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள். ரஜோலி காடுகளில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் மைக்கா (உள்ளூர் மொழியில் டெப்ரா)-வைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஜார்க்கண்ட்-பீகார் எல்லையில் அமைந்துள்ள ரஜோலியில் பல இடங்களுக்குச் செல்ல, நீங்கள் முதலில் ஜார்க்கண்டில் உள்ள கோடெர்மா நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில், உள்ளூர் மக்களின், குறிப்பாக பெண்களின் வாழ்க்கை பொது முடக்க காலத்தில் எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

பொது முடக்கத்தின் போது, கிஷோரி குழுவினர், வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கித் தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்கின. சானிட்டரி பேட்களை வாங்குவது முதல் இளம் பருவ பெண்கள் மற்றும் கிராமத்தின் மற்ற பெண்களுக்கு விநியோகம் செய்வது வரை, அனைத்தும் வாட்ஸ்அப் குழு ஒருங்கிணைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டன.

டுமரகோலைச் சேர்ந்த லட்சுமி தேவி, "நாங்கள் கடைக்குச் செல்ல முடியாவிட்டால், அந்தப் பெண்கள், பேட்களை இங்கே கொண்டு வந்து கொடுத்தார்கள். நாங்கள் அவற்றை வாங்கினோம். அதன் பிறகு எங்களுக்கு புது உயிர்வந்தது போலிருந்தது. இப்போது துணியைப் பயன்படுத்துவதற்கு மனமில்லை" என்று கூறுகிறார்.

சானிட்டரி பேட்கள் இந்த சிறுமிகளின் வாழ்க்கையின் எல்லைகளையும் விரிவுபடுத்தியுள்ளன. இளம்பெண்கள் அமைப்பின் தலைவராக மௌசம், புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 'பள்ளி விட்டால் வீடு, வீடு விட்டால் பள்ளி’ என்றிருந்த பெண்கள், இப்போது பாட்னா உள்ளிட்ட பிற நகரங்களுக்குச் செல்லத் துணிகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில், அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கக் கொள்கை விளக்கங்களில் இந்த சானிட்டரி பேட்கள் இடம்பெற்றுள்ளன. ஆயினும்கூட, இந்தியாவின் பெரும்பகுதியைச் சேர்ந்த பெண்கள் இன்னும் மாதவிடாய் மற்றும் அதன் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த சிரமங்களைக் குறைக்க மௌசம், கிஷோரி குழு மற்றும் ஜே.பி.யின் ஆசிரமம் ஆகியவை இணைந்து, சிறிய ஆனால் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: