பாலியல் வல்லுறவு புகார்: "சினிமா துறையினர், அரசியல்வாதிகள் உள்பட 139 பேரால் பாதிக்கப்பட்டேன்"

பாலியல் வல்லுறவு

25 வயதான பெண் ஒருவர் கடந்த 9 ஆண்டுகளில் தன்னை 139 பேர் பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார். ஹைதராபாதின் புஞ்ஜகுட்டா காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காட் பவர் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் நல்கொண்டா பகுதியை சேர்ந்த அந்த பெண் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்த பெண் மற்றும் காட் பவர் பவுண்டேஷனை சேர்ந்த ராஜசேகர ரெட்டியுடன் பிபிசி தெலுங்கு சேவை செய்தியாளர் தீப்தி பத்தினி தொலைபேசியில் பேசினார்.

புகார் அளித்த பெண்ணிற்கு 15 வயதில் குழந்தை திருமணம் நடந்துள்ளது. அவர் 10ம் வகுப்பு தேர்வுகள் முடிந்தவுடன் திருமணம் நடந்ததாக கூறுகிறார். அவரது பெற்றோர்கள் கூலித் தொழிலாளர்கள். தனக்கு ஒரு தம்பி இருப்பதாகவும் அந்த பெண் கூறுகிறார். ''என்னிடம் யாரும் என் விருப்பத்தை கேட்கவில்லை, என்னை திருமணம் செய்து வைக்குமாறு பையன் வீட்டிலிருந்த பலர் எனது பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்தனர்'' என்கிறார் அந்த பெண்.

பாலியல் வல்லுறவு

பட மூலாதாரம், Getty Images

''நான் என் படிப்பை முடிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் வீட்டு வேலை செய்யும் ஒரு பெண்ணாகவே என்னை நடத்தினார்கள். திருமணம் முடிந்த பிறகு வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தார்கள். என் பெற்றோர்களும் தங்களால் முடிந்த பணத்தை தொடர்ந்து வழங்கினார்கள்'' என பாதிக்கப்பட்ட பெண் நடந்தவற்றை விவரித்தார்.

வரதட்சணை கேட்டு குடும்ப வன்முறைக்கு ஆளானதோடு அந்த பெண்ணின் பிரச்சனைகள் முடியவில்லை. கணவரின் உறவினர்கள் தன்னை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதாகவும் அவர் கூறுகிறார். ''பாலியல் தொழிலில் நான் ஈடுபட ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என் பெற்றோர்களை கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். எனவே பயத்தில் அமைதியாக இருந்தேன். எல்லா கொடுமைகள், பாலியல் அத்துமீறல்கள் என அனைத்தையும் பொறுத்துக்கொண்டு ஒர் ஆண்டிற்கு மேலாக அமைதியாக இருந்தேன்'' என்கிறார் பாதிக்கப்பட்ட பெண். பின்னர் 2010ம் ஆண்டு தனது தைரியத்தை வளர்த்துக்கொண்டு தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார்.

தனது பெற்றோருடன் சேர்ந்து வசித்து வந்த பெண், கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பித்துள்ளார். அத்துடன் தனது பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்து விட்டன என அவர் நினைத்தார். ''எனக்கு சில நண்பர்கள் கிடைத்தார்கள், அதில் ஒரு பெண்ணிற்கு நான் எதிர்கொண்ட அனைத்து பிரச்சனைகளும் தெரியும். என்னை அவள் தன் அண்ணனிடம் அறிமுகம் செய்து வைத்தாள். அவர் பெயர் சுமன். அவர் மாணவர் அமைப்பின் தலைவர். அவர் எனக்கு உதவி செய்வதாக கூறினார்.

ஆனால் அவர்களும் என்னை ஆடைகள் இன்றி நிர்வாணமாக புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து மிரட்ட தொடங்கினார்கள்''

பாலியல் வல்லுறவு

பட மூலாதாரம், Getty Images

காவல் துறையில் அளித்த புகாரில் எம். சுமன் தான் முக்கிய குற்றவாளியாக பதிவு செய்யப்ட்டுள்ளார். ''சுமன் மற்றும் அவரின் தங்கை என்னை மேல் படிப்பிற்காக ஹைதிராபாத் அழைத்து செல்வதாக கூறி எனது பெற்றோரை சம்மதிக்க வைத்தனர். அவர்களிடம் எனது புகைப்படங்கள் இருந்ததால் என்னால் எதையும் தடுக்க முடியவில்லை. என்னை ஹைதராபாத் அழைத்து சென்று ஒரு கும்பலிடம் ஒப்படைத்தனர். பிறகு ஒவ்வொரு கும்பலாக நான் மாற்றப்பட்டேன். என்னை நீண்ட நாட்கள் ஒரு வீட்டில் தங்கவிடவே இல்லை'' என்கிறார் புகார் அளித்த பெண்.

தனது புகாரில், ''சுமன் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி பணம் சம்பாதிக்கும் நபர்'' என குற்றம்சாட்டி யுள்ளார். தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக அந்த பெண் சிலரின் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறார். அந்த பெயர்களில் தெலுகு திரைப்பட நடிகர்கள், ஊடக துறையை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளின் உதவியாளர்கள் என பலரின் பெயர்களும் அடங்கும்.

''ஆடைகள் இல்லாமல் என்னை நடனம் ஆட சொன்னார்கள். போதை மருந்துகளை உட்கொள்ள வற்புறுத்தினார்கள். ஒரு சில முறை கருவுற்றேன். என் கருவையும் கலைத்தார்கள். அவர்களிடம் நான் மட்டும் சிக்கிக்கொள்ளவில்லை, வேறு சில பெண்களும் உள்ளனர்'' என பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிடுகிறார்.

ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தனது புகைப்படங்களை தன்னிடம் திருப்பி கொடுத்து விடுவதாக சுமன் கூறினார் என பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிடுகிறார். அதற்கு பதில் இந்த பெண் 9 லட்சம் பணம் கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைக்கப்படுகிறது. அந்த சூழலில் தான் இந்த பெண் காட் பவர் பவுண்டேஷனை சேர்ந்த ராஜசேகர ரெட்டியை சந்திக்கிறார்.

ராஜசேகர ரெட்டியிடம் இருந்த 9 லட்சம் பணம் வாங்கும் யூக்கியையும் சுமன் மற்றும் ஒரு சிலர் இந்த பெண்ணிற்கு விளக்கியுள்ளனர்.

ஆனால் பணம் கொடுத்தாலும் பயனில்லை என்பதை இந்த பெண் புரிந்துகொள்கிறார். ஏனென்றால் இவர் பெயரில் இணையத்தில் ஏற்கனவே சில புகைப்படங்கள் தவறான நோக்கத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.

ஆடைகள் இன்றி காணொளியில் பேசவும் இந்த பெண் வற்புறுத்தப்பட்டுள்ளார். அதன் மூலம் இவரின் வங்கி

கணக்கிற்கே பணம் வந்து சேர்ந்துள்ளது. அதையும் சுமன் கைப்பற்றியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகிறார்.

இந்த நேரத்தில் ராஜசேகர ரெட்டி, தனது அறக்கட்டளையில் பாதிக்கப்பட்ட இந்த பெண்ணை பணியில் அமர்த்தியுள்ளார். ஊரடங்கின்போது தனக்கு இந்த வேலை வாய்ப்புகிடைத்ததால், இவர் இரண்டு மாதங்கள் வேலை செய்துள்ளார்.

''ஒரு நாள், அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது, மயக்கம் அடைந்தார். அவருக்கு முதலுதவி அளித்தோம். அதன் பின் அவர் நடந்த அனைத்தையும் எங்களிடம் விவரித்தார். எனவே பாதுகாப்புக்காக அவரை எங்கள் அறக்கட்டளையிலேயே தங்க வைத்தோம். அந்த பெண் எந்த இடத்தில் நீண்ட நாட்கள் வைக்கப்பட்டாரோ, அந்த இடங்களை கண்டறிந்தோம். சில ஆதாரங்களையும் சேகரித்தோம். என ராஜசேகர ரெட்டி கூறுகிறார்.

பாலியல் வல்லுறவு

பட மூலாதாரம், Getty Images

காவல் துறையில் புகார் அளிக்க சென்றபோது , என் சாதி பெயர் சொல்லி கடுமையாக பேசினார்கள், எப்படியோ போராடி வழக்கு பதிவு செய்துள்ளோம் என பாதிக்கப்பட்ட அந்த பெண் வருத்தம் தெரிவிக்கிறார்.

''பாதிக்கப்பட்ட பெண்ணின் அளித்த விவரங்களை பதிவுசெய்துள்ளோம், அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதை வரும் நாட்களில் தெரிவிக்கிறோம்'' என காவலர் நிரஞ்சன் ரெட்டி பிபிசியிடம் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக பேச சுமனை பிபிசி அணுகியது. ஆனால் அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. அவர் உறுப்பினராக இருக்கும் மாணவர் அமைப்பிடம் பேசினோம். ஆனால் அவர் அந்த அமைப்பை சேர்ந்தவர் அல்ல என அந்த அமைப்பினர் திட்டவட்டமாக கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: