சென்னையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சரிவது தொடருமா?

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக புதிதாக அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தப் போக்கு நீடிக்குமா?

செவ்வாய்க்கிழமையன்று அதாவது ஜூலை 14ஆம் தேதியன்று வெளியான மாநில சுகாதாரத்துறையின் செய்திக் குறிப்பின்படி அன்றைய தினம் 4,546 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 1,078 பேருக்கு தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதாவது தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட புதிய நோயாளிகளில் கிட்டத்தட்ட 23 சதவீதம் பேர் மட்டுமே சென்னையில் அடையாளம் காணப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முந்தைய எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இது மிகவும் குறைவு.

தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட துவங்கியதிலிருந்து முதல் சில நாட்கள் கோயம்புத்தூர் போன்ற நகரங்கள் முன்னிலையில் இருந்தன. இதற்குப் பிறகு தொடர்ச்சியாக தினமும் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் சென்னையில்தான் அடையாளம் காணப்பட்டார்கள்.

சென்னையில் இப்படி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருப்பதைக் கட்டுப்படுத்த தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் பல நடவடிக்கைகளை எடுத்தனர்.

ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கிற்குள் ஊரடங்கு விதிக்கப்பட்டது. இருந்தபோதும், இதில் பெரிய பலன் ஏதும் கிடைக்கவில்லை. சென்னையில் புதிய தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இதற்குப் பிறகு ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் மீண்டும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முறை ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டபோதும்கூட நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்தது.

ஜூன் 19ஆம் தேதியன்று வெளியான சுகாதாரத் துறைச் செய்திக் குறிப்பில் தமிழ்நாடு முழுவதும் புதிதாக 2,115 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் சென்னையில் மட்டும் 1,322 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஊரடங்கு காலம் முழுவதிலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. ஜூன் 30ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் புதிதாக அடையாளம் காணப்பட்ட 3,943 பேரில் 2,393 பேர் சென்னையில் இருந்தனர். புதிய நோயாளிகளில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் சென்னையில்தான் அடையாளம் காணப்பட்டனர்.

ஆனால் இதற்குப் பிறகு சென்னையில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் துவங்கியது. ஜூலை 8ஆம் தேதியன்று 1,261 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதற்குப் பிறகு தொடர்ச்சியாக எண்ணிக்கை சரியத் துவங்கியது. 9ஆம் தேதியன்று 1,216 பேர், 10ஆம் தேதியன்று 1,205 பேர், 11ஆம் தேதியன்று 1,185 பேர், 12ஆம் தேதியன்று 1,168 பேர், 13ஆம் தேதியன்று 1,140 பேர் என தற்போது எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கொரோனா வைரஸ்

தற்போது சென்னையில் எண்ணிக்கை குறைய ஆரம்பித்திருந்தாலும் இதற்கான பணிகள் ஜூன் துவக்கத்திலேயே துவங்கிவிட்டன. இது தொடர்பாக முன்னதாக பிபிசியிடம் பேசியிருந்த அமைச்சர் பாண்டியராஜன், "களப் பணியாளர்கள் 22 ஆயிரம் பேர், ஒவ்வொரு மண்டலத்திலும் மூன்று அணிகளாகப் பணியாற்றுகிறார்கள். இதில் 11 ஆயிரம் பேர் பெண்கள். இவர்கள் வீடுவீடாகச் சென்று யாருக்காவது காய்ச்சல் இருக்கிறதா என்று கண்காணிக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

இதற்கு அடுத்தபடியாக சோதனைகளின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரித்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. துவக்கத்தில் சோதனைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்த நிலையில், தற்போது சென்னையில் மட்டும் சுமார் பத்தாயிரம் என்ற எண்ணிக்கையில் சோதனைகள் செய்யப்படுகின்றன.

இதனால் நோயாளிகள் அடையாளம் காணப்படுவது அதிகரித்து, நோயாளிகள் உனடியாக சிகிச்சை முறைக்கு உட்படுத்தப்பட்டனர்.

துவக்கத்தில் படுக்கைகள் கிடைப்பதில் சிரமம் இருந்த நிலையில், தற்போது கோவிட் கேர் மையங்கள், கோவிட் கேர் க்ளீனிக்குகள், மருத்துவமனைகள் என படுக்கைகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான நோயாளிகள் தகுந்த இடங்களில் வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றனர்.

முதலில் திரு.வி.க. நகர், தண்டையார் பேட்டை ஆகிய பகுதிகளில் நோய்த் தொற்று அதிகரித்துவந்த நிலையில், தற்போது அந்தப் பகுதிகளில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து, கோடம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர்.

சென்னை மாநகராட்சி நடத்திய "ஃபீவர் க்ளீனிக்"கள் மூலம் கடந்த ஒரு வார காலத்தில் 50,599 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டு, நோய்ப் பரவலைத் தடுக்க முயற்சிக்கிறது சென்னை நிர்வாகம். இதற்கு பலன் இருக்கவும் செய்கிறது.

ஆனால், சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் போன்ற மாவட்டங்களிலும் மதுரை போன்ற தென் மாவட்டங்களிலும் தொடர்ந்து நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :