கொரோனா வைரஸை முத்தம் தந்து குணப்படுத்துவதாக கூறிய சாமியார் உயிரிழப்பு

முத்தம் தந்து கொரோனா வைரஸை குணப்படுத்துவதாக கூறிய சாமியார் உயிரிழப்பு

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் இணைய பக்கங்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினகரன் : முத்தம் தந்து கொரோனா வைரஸை குணப்படுத்துவதாக கூறிய சாமியார் உயிரிழப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முத்தம் தந்து கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும் என கூறிய சாமியார் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் அவரிடம் முத்தம் பெற்ற 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மத்தியப்பிரதேச மாநிலத்தில் 10,000திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 430 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அஸ்லம் பாபா என்ற சாமியார் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு பொதுவாகவே முத்தம் கொடுத்து ஆசிர்வாதம் வழங்குவார் என கூறப்படுகிறது. எனவே கையில் முத்தம் கொடுத்தால் கொரோனா அண்டாது என கூறி பலருக்கு முத்தம் கொடுத்து வந்துள்ளார்.

கடந்த 4ம் தேதி சாமியாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரிடம் முத்தம் பெற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 29 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தினகரன் நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

Presentational grey line

தினத்தந்தி: ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடிய 13 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடிய 13 பேருக்கு கொரோனா பாதிப்பு - தினத்தந்தி

பட மூலாதாரம், Getty Images

சென்னை தியாகராய நகரில் ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடிய 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது

இந்தப்பகுதியில் ஏற்கனவே 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவின.

சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பலருக்கும் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், வெளியூர்களிலும் தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது என தினத்தந்தி செய்தி விவரிக்கிறது.

Banner image reading 'more about coronavirus'
Presentational grey line

இந்து தமிழ் திசை: தூங்காநகரம் துயர்மிகு நகரமாகிவிடும்: சு.வெங்கடேசன் எச்சரிக்கை

முத்தம் தந்து கொரோனா வைரஸை குணப்படுத்துவதாக கூறிய சாமியார் உயிரிழப்பு

பட மூலாதாரம், SUBBURAM.VENKATESAN

"மக்கள் தொகை விகிதாச்சாரத்தின்படி ஒரு லட்சம் பேருக்கு செய்யப்பட்ட சோதனையின் அளவு தமிழக அளவில் 6,420 ஆக இருக்கிறது. ஆனால், மதுரையில் அந்த எண்ணிக்கை பாதியாகத்தான் இருக்கிறது. அதாவது 1 லட்சம் பேரில் வெறும் 3,975 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மே 29 முதல் ஜூன் 7-ம் தேதி வரையிலான 10 நாட்களில் சராசரியாக 250 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. ஆனால், வருவாய்த்துறை அமைச்சர் ஒவ்வொரு முறை ஆய்வுக்கூட்டம் நடத்திவிட்டு அதிக அளவில் பரிசோதனை செய்யப்படுகிறது என்று ஊடகங்களிடம் உண்மைக்கு மாறான தகவலைச் சொல்கிறார்" என்று குற்றம் சாட்டியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடமும், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடமும் அவர் புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கடந்த 10, 11, 12-ம் தேதிகளில் மதுரை மாவட்டத்தில் செய்யப்படுகிற பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது மாவட்ட சுகாதாரத்துறை. வெறும் 200 முதல் 400-க்குள் இருந்த பரிசோதனைகளின் எண்ணிக்கை இப்போது 700 முதல் 900 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மதுரை மாவட்ட எல்லைக்குள் நுழையும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மதுரை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

"இந்த எண்ணிக்கை போதாது. தினமும் 3 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதேபோல கடைசி 10 நாட்களில் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த 10 ஆயிரம் பேருக்கும் தாமதமின்றிப் பரிசோதனை செய்ய வேண்டும். இல்லை என்றால் தூங்காநகரம் துயர்மிகு நகரமாகிவிடும்" என்று சு.வெங்கடேசன் எச்சரித்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: