கொரோனா வைரஸ் ஊரடங்கை மீறி உயரும் தங்கத்தின் விலை - ஏன்?

ஊரடங்கை மீறி உயரும் தங்கத்தின் விலை

பட மூலாதாரம், SOPA Images / Getty

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்

இந்து தமிழ் திசை - தங்கம் விலை உயர்வு ஏன்?

ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், சுப நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டாலும் ஆன்-லைன் வர்த்தகம் தொடர்வதால் தங்கத்தின் விலை உயர்வும் தொடர்கிறது என்கிறது இந்து தமிழ் திசை.

அதேநேரம், கடந்த ஒரு மாதமாக நகைக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால், அக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ஆபரண நகைகளின் மதிப்பு தற்போது கிராம் ஒன்றுக்கு ரூ.1,169 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து பொருளாதார பேராசிரியரான புதுச்சேரி முன்னாள் எம்.பி ராமதாஸிடம் கேட்டபோது, "சர்வதேச அளவில் கொரோனா பரவலால் பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் வரவு குறைந்து, விலை உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறைவும் ஒரு காரணம். அதில் முதலீடு செய்தவர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தற்போது ஆர்வம் காட்டுவதாலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது'' என்றார்

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

தினத்தந்தி - மலிவு விலை கொரோனா சோதனை

கொரோனா வைரஸ் தொற்று நோய் உள்ளதா, இல்லையா என்பதை முதற்கட்டமாக பரிசோதித்து அறிய, மத்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையின் அங்கமான சி.எஸ்.ஐ.ஆர். என்னும் அறிவியல், தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஜெனோமிக்ஸ் மற்றும் இன்டிகிரேடிவ் பயாலஜி இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் மிகவும் மலிவான ஒரு சோதனை முறையை கண்டுபிடித்துள்ளனர் என்கிறது தினத்தந்தி செய்தி.

இதில் கொரோனா நோய் கிருமிகளை கண்டறிய விலை உயர்ந்த எந்தவொரு எந்திரமும் தேவைப்படாது. இந்த மலிவு கட்டண முறைக்கு மறைந்த திரைப்பட இயக்குனர் சத்யஜித்ரேயின் கதைகளில் வருகிற துப்பறியும் பாத்திரமான பெலுடாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுபற்றி ஜெனோமிக்ஸ் மற்றும் இன்டிகிரேடிவ் பயாலஜி இன்ஸ்டிடியூட் இயக்குநர் அனுராக் அகர்வால் கூறியதாவது:-

இந்தப் பரிசோதனை முறையும் தற்போது வழக்கத்தில் உள்ள ஆர்.டி.பி.சி.ஆர் முறையைப் போன்றதுதான். ஆர்.என்.ஏ.வை பிரித்தெடுத்து, டியோக்ஸரிபோனுகிளரிக் அமிலமாக மாற்றும் முறைதான். ஒரு காகிதத்தில் புதுமையான வேதியியலைப்பின்பற்றி இந்த பரிசோதனை செய்யப்படும்.

மலிவு விலை கொரோனா சோதனை

பட மூலாதாரம், ARUN SANKAR / Getty

பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்வது போல ஒரு மணி நேரத்தில் இதில் முடிவு வந்து விடும். இந்த சோதனை முறை கண்டறிந்து இருப்பவர்கள் எங்கள் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் தேபஜோதி சக்கரவர்த்தியும், சவிக் மைத்தியும் ஆவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு

உலகமே கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போராடிவரும் நிலையில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளைத் திட்டமிடுவதில் பாகிஸ்தான் மும்முரமாக உள்ளது என்று ஜம்மு காஷ்மீர் காவல் துறை தலைவர் தில்பாக் சிங் கூறியுள்ளார்.

இதுவரை பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ அனுப்பி வைத்த பாகிஸ்தான், இப்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளவர்களை அனுப்பி வைப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: