கொரோனா சிக்கலில் சீனா: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

கொரோனா வைரஸ் பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரிஜேஷ் மிஸ்ரா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஜெனரிக் மருந்துகள் எனப்படும் பொதுவான மருந்துகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 2019ம் ஆண்டில், 201 நாடுகளுக்கு இந்த ஜெனரிக் மருந்துகளை ஏற்றுமதி செய்து அதிலிருந்து பில்லியன் கணக்கான பணத்தை இந்தியா சம்பாதித்துள்ளது.

News image

ஆனால், இன்றும் இந்த மருந்துகளை தயாரிக்க இந்தியா சீனாவை நம்பியுள்ளது. மருந்துகளை தயாரிப்பதற்கான ஏ.பி.ஐ (Active Pharmaceutical Ingredients (API)) என்ற மூலப்பொருளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது இந்தியா.

கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக, அந்நாட்டுடனான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஏ.பி.ஐ. இறக்குமதி செய்யப்படாததால், பல நிறுவனங்கள் மருந்து உற்பத்தியைக் குறைத்து வருகின்றன. இதன் விளைவுகள் உலகளாவிய மருந்துகளின் விநியோகத்தில் எதிரொலிக்கிறது.

2018-19 ஆம் ஆண்டில் இந்திய அரசின் வணிகத் துறையால் அங்கீகரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட, இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 19.14 பில்லியன் டாலராக இருந்தது என்று இந்திய வர்த்தக ஊக்குவிப்பு கவுன்சில் (டி.பி.சி.ஐ) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இந்த மருந்துகளைத் தயாரிக்க ஏ.பி.ஐ (மூலப்பொருள்) சுமார் 85% சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஏ.பி.ஐ உற்பத்தி மிகக் குறைவு என்பதோடு, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஏ.பி.ஐ மூலப்பொருளை இறுதியான மருந்தாக தயாரிப்பதற்காக சில பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதாவது, இந்திய நிறுவனங்களும் மருந்துத் துறையில் சீனாவை நம்பியுள்ளன.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

அதிகரிக்கும் ஏபிஐ விலைகள்

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவிலிருந்து ஏபிஐ இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து பொருட்கள் நிறுத்தப்படுவதால், இந்தியாவில் மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் இப்போது ஏ.பி.ஐகளை அதிக விலைக்கு வாங்க வேண்டியிருக்கிறது.

மும்பையை சேர்ந்த ஆர்த்தி ஃபார்மா நிறுவனம் ஏ.பி.ஐ.களை இறக்குமதி செய்து மருந்து நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறது. சீனாவில் இருந்து தற்போது மூலப்பொருள் இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று நிறுவனத்தின் உரிமையாளர் ஹேமல் லத்தியா கூறினார். சரக்குகள் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது, அவை எப்போது வரும் என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை என்று அவர் கூறுகிறார்.

பிபிசி-யிடம் பேசிய அவர், "இந்தியாவில் தயாரிக்கப்படும் ஏ.பி.ஐ.களும் சீனாவைச் சார்ந்தே இருக்கின்றன. எனவே, இங்கு ஏ.பி.ஐ தயாரிப்பதும் பாதிப்படைந்துள்ளது. அதோடு, சீனாவிலிருந்து நாங்கள் இறக்குமதி செய்யும் ஏ.பி.ஐ.களும் குறைந்துவிட்டன.''

ஏப்ரல் மாதத்திற்குள் இறக்குமதி மீண்டும் தொடங்கலாம் என்று அவர்கள் மதிப்பிடுகின்றனர். ஆனால் இந்த பிரச்சனை ஒன்று முதல் ஒன்றரை மாதங்கள் வரை நீடிக்கும்.

"ஏபிஐ பழைய சரக்குகளின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சீனாவிலிருந்து ஏபிஐகளை இறக்குமதி செய்து உள்ளூர் நிறுவனங்களுக்கு விற்கும் நிறுவனங்கள் சரக்குப் பற்றாக்குறை காரணமாக அதிக விலையில் விற்பனை செய்கின்றன.

கோப்புப்படம்

பட மூலாதாரம், AFP

இந்தியாவில் ஏன் ஏபிஐ உற்பத்தி குறைவாக உள்ளது?

இந்தியாவுடன் ஒப்பிடும்போது சீனாவில் ஏ.பி.ஐ உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்து விட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனாவிலிருந்து ஏ.பி.ஐ இறக்குமதி நிறுத்தப்படுவது குறித்து கவலைப்படுவது இது முதல் முறை அல்ல. இது தொடர்பாக 2014 ஆம் ஆண்டிலும் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது.

அந்த நேரத்தில், இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பதற்றங்களினால் மூலப்பொருட்களின் விநியோகத்தை சீனா நிறுத்தக்கூடும் என்ற கவலை இருந்தது. இந்த சிக்கலைச் சமாளிக்க, பிரதமர் அலுவலகத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்டன, இந்த சூழ்நிலையைச் சமாளிக்க ஒரு பணிக்குழுவும் அமைக்கப்பட்டது.

அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் 12 மருந்துகள் உள்ளன என்று அப்போதைய ரசாயன மற்றும் உர அமைச்சர் அனந்த்குமார் கூறியிருந்தார், இவற்றின் தயாரிப்புக்குத் தேவையான 80 முதல் 90 சதவீதம் மூலப்பொருட்கள் சீனாவிலிருந்து வருகின்றன.

இந்தியாவில் ஏ.பி.ஐ உற்பத்தியை அதிகரித்து, சீனாவை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்று பணிக்குழு பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உற்பத்தி குறைந்துவிட்டதா?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

பெரும்பாலான நிறுவனங்கள் மருந்துகளின் உற்பத்தியைக் குறைத்துவிட்டன அல்லது ஏற்கனவே வைத்திருந்த சரக்கு இருப்பை வைத்தே வேலை செய்கின்றன. மிக முக்கியமான தேவைகளுக்காக மட்டுமே பொருட்களை வாங்குகின்றன என்று ஹேமல் லத்தியா கூறுகிறார்.

கூடுதல் சரக்குகளை யாரும் வாங்கவில்லை. தேவை அதிகமாக இருக்கும் நிலையில் உற்பத்தி குறைவாக இருப்பதால் விலைகள் அதிகரித்து வருகின்றன. ஒன்றரை மாதங்களுக்குள் சரக்கு விநியோகம் தொடங்கவில்லை என்றால், சிரமங்கள் அதிகரிக்கும், விலைகளும் அதிகரிக்கும்.

தனது நிறுவனத்தின் தயாரிப்புகளுக்காக சீனாவிலிருந்து 70% ஏபிஐகளை இறக்குமதி செய்வதாக சொல்கிறார் மருந்து தயாரிப்பு நிறுவனமான மேக்ஸ்டார்-பயோ ஜெனிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஜகதீஷ் பன்சால். அவரது நிறுவனம் காப்ஸ்யூல்களை உருவாக்குகிறது. சீனாவிலிருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டிருப்பதால், ஏற்கனவே சரக்கை வைத்திருப்பவர்கள் அதை அதிக விலைக்கு விற்கிறார்கள்.

"தற்போது இருக்கும் சரக்கு சுமார் ஒரு மாதம் நீடிக்கும்" என்று ஜெகதீஷ் பன்சால் கூறுகிறார். ஒரு மாதத்திற்குள் இறக்குமதி தொடங்கவில்லை என்றால், சிரமங்கள் அதிகரிக்கும்.

சீனாவிலிருந்து ஏ.பி.ஐ இறக்குமதி நிறுத்தப்படுவதால், தங்கள் நிறுவனத்தில் மருந்துகளின் உற்பத்தி குறைந்து வருவதாகவும், விரைவில் அது கிடைக்காவிட்டால் மருந்துகளின் உற்பத்தி நிறுத்தப்படலாம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

இருந்தாலும் தற்போது மருந்துகளின் விலை பாதிக்கப்படாது என்று ஜகதீஷ் பன்சால் கூறுகிறார். ஆனால், சீனாவிலிருந்து பொருட்களைப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆனால், அதன் தாக்கத்தை தாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

டெல்லி மருந்துப் பொருள் வர்த்தகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆஷிஷ் குரோவர் கூறுகையில், பல நிறுவனங்களிடம் இருக்கும் சரக்கு கையிருப்பானது, இரண்டு-மூன்று மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும். அதன்பிறகு சிக்கல்கள் எழக்கூடும். ஆனால், சீனாவிலிருந்து ஏ.பி.ஐ இறக்குமதி ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் தொடங்கிவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

"உற்பத்தி நடக்கிறது, ஆனால் ஏபிஐ விலைகள் அதிகரித்து வருகின்றன. எந்தவொரு மருந்துக்கும் தேவை திடீரென்று அதிகரிக்கவில்லை, இதனால் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. சீனாவில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது, ஆனால் அது தொடர்பான எந்த மருந்துகளும் இங்கிருந்து செல்லவில்லை, எனவே தற்போது மருந்துகளின் விலைகள் ஏதும் பாதிக்கப்படவில்லை.

அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?

இந்திய மருந்து ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (Pharmexcil) ஆண்டு அறிக்கையின்படி, 2018-19ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மருந்துகளின் ஏற்றுமதி 19 பில்லியன் டாலராக இருந்தது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கோரிக்கையின் அடிப்படையில், டி.பி.டி மற்றும் பி.சி.ஜி ஆகியவற்றுக்கான சுமார் 65% மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன, 90% தட்டம்மை தடுப்பூசிகள் இந்தியாவால் தயாரிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

ஜெனரிக் மருந்துகளை தயாரிக்கும் உலகின் முதல் 20 நிறுவனங்களில் எட்டு இந்தியாவைச் சேர்ந்தவை.

இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் 55 சதவீதத்தை வாங்குகின்றன வட அமெரிக்காவும் ஐரோப்பாவும். அதேபோல், இந்தியாவில் இருந்து அதிக அளவில் மருந்துகளை இறக்குமதி செய்யும் நாடு அமெரிக்கா.

ஆப்பிரிக்காவில் ஜெனரிக் மருந்து சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 50% ஆகும்.

2018-19ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 201 நாடுகளுக்கு 9.52 மில்லியன் மதிப்புள்ள மருந்துகளை ஏற்றுமதி செய்தது.

இப்போது சீனாவிலிருந்து ஏபிஐ இறக்குமதி நீண்ட காலமாக தடைபட்டால், இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் மருந்துகளின் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. அதே நேரத்தில், இந்தியாவின் பொருளாதாரமும் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: