நீதிபதி முரளிதர்: பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்த நீதிபதி பணி இடமாற்றம்

முரளிதர்

பட மூலாதாரம், TWITTER / NYAYAFORUM

படக்குறிப்பு, முரளிதர்

டெல்லி வன்முறை வழக்கை விசாரித்து வரும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News image

இதுதொடர்பாக நேற்று இரவு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 222 மற்றும் உட்பிரிவு (1) வழங்கும் அதிகாரத்தின் மூலம், இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதரை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணி இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் எஸ். முரளிதர் அடங்கிய அமர்வு வழங்கிய அதிரடி உத்தரவே தற்போது இவர் பணி இடமாற்றம் செய்யப்படுவதற்கான காரணம் என்று பல்வேறு தரப்பினர் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், கடந்த 12ஆம் தேதியே முரளிதரை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றத்திற்கு பணி இடமாற்றம் செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வட கிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததில், இதுவரை காவல்துறையினர் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்த நீதிபதி பணி இடமாற்றம்

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில், இதுகுறித்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரித்து வந்த நீதிபதி முரளிதர், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பிரவேஷ் வர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதோடு, "1984ஆம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த சம்பவத்தை போன்றொரு நிகழ்வு மீண்டும் நடைபெற விடமாட்டோம்" என்று தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி, டெல்லி வன்முறை தொடர்பாக வெளியாகியுள்ள காணொளிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறும் நீதிபதிகள் முரளிதர் மற்றும் தல்வாத் சிங் தலைமையிலான அமர்வு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

மேலும், வன்முறை வெடித்துள்ள டெல்லியில் பொது மக்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் சட்டம் அவர்களுக்கு துணை நிற்கும் என்பதை உறுதிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் நடைமுறைப்படுத்தி, இன்று (வியாழக்கிழமை) தக்க பதில் அளிக்கும்படி டெல்லி காவல்துறைக்கு முரளிதர் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த பணி இடமாற்றம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

யார் இந்த முரளிதர்?

டெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்த நீதிபதி பணி இடமாற்றம்

எஸ். முரளிதர் தனது வழக்குரைஞர் பணியை 1984ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கினார். சுமார் மூன்றாண்டுகளுக்கு பிறகு, அதாவது 1987ஆம் ஆண்டு டெல்லி சென்ற அவர் இந்திய உச்ச நீதிமன்றத்திலும், டெல்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்குரைஞராக பணியாற்றினார்.

உச்ச நீதிமன்றத்தின் சட்ட சேவை குழுவில் வழக்குரைஞராக ஈடுபாட்டுடன் செயல்பட்ட அவர், பிறகு அதே குழுவின் உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்தார்.

போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நர்மதா அணை கட்டுமானத்தால் சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் நலனுக்காக என சமூக நலன் சார்ந்த பல்வேறு வழக்குகளில் இலவசமாகவோ அல்லது குறைந்த தொகையை பெற்றுகொண்டோ முரளிதர் நீதிமன்றங்களில் வாதாடியதாக டெல்லி உயர்நீதிமன்றத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு பொதுநல வழக்குகளிலும், மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான வழக்குகளிலும் இவரை எண்ணற்ற முறை உச்ச நீதிமன்றம் நடுநிலை அறிவுரையாளராக நியமித்துள்ளது.

டெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்த நீதிபதி பணி இடமாற்றம்

தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றின் சட்ட ஆலோசகராக பணியாற்றியுள்ள முரளிதர், 2002 முதல் 2006இல் டெல்லி உயர்நீதிமன்றத்தின் வழக்குரைஞராக நியமிக்கப்படும் வரை சட்ட ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக செயல்பட்டார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் 2003ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற இவர், "Law, Poverty and Legal Aid: Access to Criminal Justice" என்ற புத்தகத்தின் ஆசிரியரும் கூட.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதியான முரளிதரை பணி இடமாற்றம் செய்ததது சரியல்ல என்று டெல்லி உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் மோஹித் மாத்தூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், "முரளிதர் போன்ற மூத்த நீதிபதிகளை பணி இடமாற்றம் செய்வது தொடர்பாக நாங்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளோம். அதன்படி, மூத்த நீதிபதிகளை வேறொரு மாநிலத்தின் நீதிமன்றத்திற்கு பணி இடமாற்றம் செய்யும்போது சில விடயங்களை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதியான முரளிதரை பணி இடமாற்றம் செய்து தலைமை நீதிபதியாக நியமித்திருக்க வேண்டிய நிலையில், அவர் தொடர்ந்து நீதிபதியாகவே தொடர்கிறார். மேலும், நீதிபதிகளை காரணமின்றி கொலீஜியம் பணி இடமாற்றம் செய்யக்கூடாது" என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: