டெல்லி வன்முறை: காதலர் தினத்தன்று திருமணம்; 11 நாட்களில் மரணம்

டெல்லி வன்முறை: காதலர் தினத்தன்று திருமணம்; 11 நாட்களில் மரணம்

பட மூலாதாரம், BBC

    • எழுதியவர், விக்னேஷ்.அ
    • பதவி, பிபிசி தமிழ்

டெல்லியில் நடந்த மத ரீதியான வன்முறைகளில் இறந்தவர்களின் உடல்களை வாங்க கிழக்கு டெல்லியில் உள்ள குரு தேஜ் பகதூர் மருத்துவமனையின் பிணவறை முன்பு கண்ணீருடனும் கதறலுடனும் காத்திருக்கின்றனர் அவர்களது உறவினர்கள்.

புதன்கிழமை பிபிசி தமிழ் குழு அங்கு சென்றபோது, மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவைவிட, அதன் பிணவறை முன்பு கூடியிருந்த கூட்டமே அதிகமாக இருந்தது.

News image

மத மோதல்களில் கொல்லப்பட்ட சுமார் 10 முதல் 15 பேரின் உடல்கள் அங்கு இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்களில் சிலரது உறவினர்களிடம் பேசியது பிபிசி தமிழ்.

வன்முறையில் தந்தையை இழந்த இந்து ஆண் ஒருவரும், முஸ்லிம் தாய் ஒருவரும் கண்ணீருடன் பிணவறையில் வெளியே அமர்ந்திருந்தனர்.

"நாங்கள் அவனை இத்தனை ஆண்டுகளாக வளர்த்தோம். அவர்கள் என் மகனை கொன்று விட்டார்கள்," என்று தன் இறந்த மகனை நினைத்து அழுகிறார் வடகிழக்கு டெல்லியின் பழைய முஸ்தஃபாபாத் பகுதியைச் சேர்ந்த ஹஸ்ரா. இவர் பலியான அஷ்ஃபக் ஹுசேனின் பெரியம்மா.

24 வயதாகும் அவரது மகன் அஷ்ஃபக் ஹுசேனுக்கு காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதிதான் திருமணம் நடந்தது.

டெல்லி வன்முறை

பட மூலாதாரம், BBC

படக்குறிப்பு, ஹஸ்ரா

"ஐந்து துப்பாக்கி குண்டுகள் அஷ்ஃபக்கின் உடலில் பாய்ந்தன. அவற்றில் மூன்று குண்டுகள் அவனது நெஞ்சில் பாய்ந்தன," என்று ஷரீபுல் தெரிவித்தார்.

முதலில் அல் ஹிந்த் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் உடற்கூறாய்வுக்காக ஜி.டி.பி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரீசியனாக பணியாற்றும் அஷ்ஃபக் ஹுசேன் பிப்ரவரி 25ஆம் தேதி மாலை முஸ்தஃபாபாத் பகுதியில் நடந்த வன்முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று அவரது தாய் தெரிவிக்கிறார்.

என் மருமகளுக்கு நான் என்ன பதில் சொல்வது, அவளின் எதிர்காலம் என்னாவது என்று அழுதுகொண்டே கேள்வி எழுப்புகிறார் ஹஸ்ரா.

அவரது கேள்விக்கு அங்கிருந்த யாரிடமும் பதிலில்லை.

'ஒரே நிமிடத்தில் பல்லாண்டு நட்பை மறந்துவிட்டனர்'

டெல்லியில் உள்ள வடக்கு கோண்டா பகுதியைச் சேர்ந்த பர்வேஸ் பிப்ரவரி 25ஆம் தேதி, இரவு அவரது வீட்டின் முன்பாகவே சுட்டுக்கொல்லப்பட்டார்.

டெல்லி வன்முறை
படக்குறிப்பு, ஷாஹில்

அவரது வீடு இருந்த தெருவில் வன்முறை நடந்த சமயத்தில் வீட்டில் இருந்து வெளியே வந்த பர்வேஸ் வீட்டின் நுழைவாயில் முன்பாகவே சுட்டுக்கொல்லப்பட்டார்.

இரண்டு நாட்களாகியும் புதன்கிழமை மாலை வரை அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

உடற்கூறாய்வு, வழக்குப்பதிவு உள்ளிட்ட நடைமுறைகள் முடிந்த பின்னரே உடல் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார் அவரது மகன் ஷாஹில்.

"என்னுடன் ஒன்றாகப் படித்த, என் பகுதியில் வசிக்கும் நண்பர்களே இப்போது எதிரிகள் ஆகிவிட்டனர். ஒரே நிமிடத்தில் அனைத்தையும் மறந்துவிட்டனர்," என்கிறார் ஷாஹில்.

"நான் என் தந்தையின் உடலை வாங்கிச் சென்று இறுதிச் சடங்கு செய்ய விரும்புகிறேன். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. டெல்லிக்கு வர அச்சப்பட்டு வெளியூரில் உள்ள உறவினர்கள் இறுதிச் சடங்குக்கு வரவே அச்சப்படுகிறார்கள்," என்கிறார் ஷாஹில்.

தந்தையை இழந்த மகன்

டெல்லி வன்முறை

பட மூலாதாரம், BBC

படக்குறிப்பு, மோனு குமார்

ஹஸ்ராவின் அருகிலேயே கண்ணீருடன் அமர்ந்திருந்தார் மோனு குமார். கோண்டா பகுதியில் உள்ள அரவிந்த் நகர் எனும் பகுதியைச் சேர்ந்த அவர் மத வன்முறையில் 51 வயதான தனது தந்தையை பறிகொடுத்துள்ளார்.

நானும் எனது தந்தையும் மருந்து வாங்கிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம்.

டெல்லி வன்முறை

பட மூலாதாரம், BBC

படக்குறிப்பு, உயிரிழந்த வினோத் குமார்

'அல்லாகு அக்பர்' என்று கத்திக்கொண்டு வந்த ஒரு கும்பல் கற்கள் மற்றும் கத்தியைக் கொண்டு தாக்கியதில் தனது தந்தை வினோத் குமார் உயிரிழந்துவிட்டார் என்று கூறினார் மோனு குமார்.

அதே கும்பலால் தாக்கப்பட்டு தலையில் கடுமையாக காயமடைந்துள்ளதாக கூறும் மோனு குமார் தனது தந்தையின் உடலை பெற்றுக்கொள்ள புதன்கிழமை மாலை வரை பிணவறை முன்பு காத்திருந்தார்.

தாங்கள் வந்த இரு சக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: