TNPSC தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண்

பட மூலாதாரம், Twitter
டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டு தேடப்பட்டுவந்த ஜெயக்குமார் சென்னையில் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
குரூப் - 4 எனப்படும் நான்காம் நிலை அரசுப் பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியன்று மாநிலம் முழுவதும் நடத்தியது.
அதில் முதல் 100 இடங்களில் இருந்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரண்டு இடங்களில் இருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தனர். வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள், இந்த மையங்களைத் தேர்வுசெய்திருந்தார்கள். குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், கூடுதலாக இந்த இரு இடங்களையும் தேர்வுசெய்திருந்ததாக சொல்லப்பட்டது.
இது தொடர்பாக பலர் புகார் அளித்ததும், இந்த விவகாரம் குறித்து டிஎன்பிஎஸ்சி விசாரிக்க ஆரம்பித்தது. விசாரணையின் முடிவில் முறைகேடு நடந்தது உறுதிப்படுத்தப்பட்டு, பணம் கொடுத்து தேர்வில் தேர்ச்சி பெற முயன்ற 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இதற்குப் பிறகு இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் துவங்கின. இதுவரை 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் சிவகங்கையைச் சேர்ந்த காவலரான சித்தாண்டி மற்றும் சென்னை முகப்பேரில் வசித்துவந்த ஜெயக்குமார் ஆகியோரைக் காவல்துறை தேடிவந்தது. இதில் சித்தாண்டி சில நாட்களுக்கு முன்பாக கைதுசெய்யப்பட்டார்.
ஜெயக்குமார் தொடர்ந்து தேடப்பட்டு வந்தார். அவரைப் பற்றிய தகவல்களை அளிப்பவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படுமென காவல்துறை அறிவித்திருந்தது. இந்த வழக்கை விசாரிக்கும் தனிப்படை காவலர்கள் வெளி மாநிலங்களுக்கும் சென்று தேடிவந்தனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இந்த நிலையில், சென்னையில் உள்ள சைதாப்பேட்டை 23வது நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞருடன் ஜெயக்குமார் சரணடைந்திருக்கிறார். விரைவில் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவுசெய்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஜெயக்குமாரின் பங்கு என்ன?
டிஎன்பிஎஸ்சியில் பணியாற்றிவந்த ஓம் கந்தனுக்கு பழனி என்பவர் மூலம் முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற நபர் அறிமுகமானார். அவர் ஓம் கந்தனிடம் தனக்கு தெரிந்த நபர்களை குரூப் - 4 தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் அதற்காக 15 லட்ச ரூபாய் வரை ஓம் கந்தனுக்கு தருவதாகக் கூறி முன் பணமாக 2 லட்ச ரூபாய் வரை தந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து தேர்வு நடப்பதற்கு முந்தைய நாளே ராமேஸ்வரம், கீழக்கரை பகுதிகளுக்குச் சென்ற ஜெயக்குமார் தன்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு, எழுதி சிறிது நேரத்தில் மாயமாகும் பேனாக்களை கொடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
தேர்வு நடக்கும்போது அந்த மேஜிக் பேனாக்களை வைத்து தேர்வர்கள் ஓம்.எம்.ஆர் விடைத்தாளை தங்களுக்கு தெரிந்த பதிலை நிரப்பினர். இந்த விடைத் தாள்கள் பிறகு ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டன.
இந்த விடைத்தாள்களை அங்கிருந்து எடுத்துவந்த சென்னை டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் அளிக்கும் பணி, மாணிக்கவேலு என்பவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு உதவியாக ஓம் கந்தன் நியமிக்கப்பட்டிருந்தார். விடைத்தாள்கள் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் இருந்து எடுக்கப்பட்டு ஒரு தனியார் சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்னைக்குப் புறப்பட்டன. பாதுகாப்பிற்காக காவலர்கள் சிலரும் வந்தனர்.
சென்னை வரும் வழியில் சிவகங்கையில் தேர்வெழுதியவர்களின் விடைத்தாள்களும் அதே வாகனத்தில் ஏற்றப்பட்டன. இந்த வாகனத்தை ஜெயக்குமார் தனது காரில் பின் தொடர்ந்தார். விடைத்தாள்களை ஏற்றிவந்த வாகனம் சிவகங்கையைத் தாண்டிய பிறகு, சிறிது தூரத்தில் உணவிற்கென நிறுத்தினார் ஓம் கந்தன்.
அப்போது விடைத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த வாகனத்திலிருந்து விடைத்தாள்கள் ஜெயக்குமாருக்கு கைமாறின. அவற்றைத் தன் காரிலேயே வைத்து திருத்தத் துவங்கினார் ஜெயக்குமார்.
இதன் பிறகு விழுப்புரம் அருகில் உள்ள விக்கிரவாண்டியில் அதிகாலையில் விடைத்தாள்களின் வாகனம் மீண்டும் நிறுத்தப்பட்டது. அப்போது ஜெயக்குமாரிடமிருந்து திருத்தப்பட்ட விடைத்தாள்களை ஓம் கந்தன் பெற்றுக்கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images
விடைத்தாள்கள் டிஎன்பிஎஸ்சியில் ஒப்படைக்கப்படும்போது திருத்தப்பட்ட விடைத்தாள்களும் சேர்த்து வைக்கப்பட்டன. ஆனால், காரில் வரும்போது பணம் பெற்றுக்கொண்ட எல்லோருடைய விடைத்தாள்களையும் ஜெயக்குமாரால் திருத்த முடியவில்லையெனக் கூறப்படுகிறது.
வேலையைப் பெற்றுத் தருவதாக ஒவ்வொருவரிடமும் 9 லட்ச ரூபாய் முதல் 15 லட்ச ரூபாய் வரை பணம் பெற்றது ஜெயக்குமார்தான் எனக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட சித்தாண்டி, தான் இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு பணத்தைப் பெற்றுக்கொண்டு 22 பேரை டிஎன்பிஎஸ்சியில் வேலைக்குச் சேர்த்துவிட்டதாகவும் ஜெயக்குமார் மூலமாகவே இதனைச் செய்ததாகவும் தெரிவித்திருப்பதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













