தர்பார் பட விவகாரம்: பாதுகாப்புக் கோரி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மனு

ரஜினிகாந்த்

பட மூலாதாரம், Twitter

ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் தன்னை மிரட்டுவதால், தனக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

ரஜினிகாந்த், நயன்தாரா நடித்த தர்பார் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கினார். இந்தத் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதியன்று வெளியானது.

News image

ஆனால், படம் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லையென சில விநியோகிஸ்தர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக படத்தில் நடித்த ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரிடமும் பேச முயன்றனர். பல இடங்களில் இது தொடர்பாக போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. இந்நிலையில், இது தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், தர்பார் படத்தை இயக்கியது மட்டுமே தனது பணி என்றும் அந்தப் படத்தின் விநியோகத்திலோ, வியாபாரத்திலோ தனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும் முழுக்க முழுக்க லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமே அனைத்தையும் கவனித்துக்கொண்டதாகவும் அந்த மனுவில் அவர் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3ஆம் தேதியன்று தங்களை விநியோகிஸ்தர்கள் என்று அழைத்துக்கொண்ட அடையாளம் தெரியாத 25 பேர் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள இயக்குனரின் அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்த பணியாளர்களிடம் தகாத வார்த்தைகளைப் பேசி அச்சுறுத்தியதாகவும் மேலும் பதினைந்து பேர் சாலிகிராமத்தில் உள்ள இயக்குனரின் வீட்டின் முன்பாக அச்சுறுத்தும் வகையில் நின்றுகொண்டு, இயக்குனரின் பெயரைச் சொல்லி கெட்டவார்த்தைகளில் திட்டியதாகவும் தன் மனுவில் ஏ.ஆர். முருகதாஸ் கூறியிருக்கிறார்.

அந்த நபர்கள் தற்போதும் இயக்குனரின் வீடு மற்றும் அலுவலகத்தின் முன்பாக நின்றுகொண்டு அவருக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் மேலும் சிலர் இது தொடர்பாக தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களிலும் பேட்டி அளித்து இயக்குனருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திவருவதாகவும் இயக்குனருக்கு ஊறு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவரது வீடு, அலுவலகத்தில் புகுந்து மிரட்டியதாகவும் ஏ.ஆர். முருகதாஸின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ்

பட மூலாதாரம், Twitter

இதனால், ஏ.ஆர். முருகதாஸிற்கு தனிப்பட்ட முறையில் போலீஸ் காவல் அளிக்க வேண்டுமென்றும் அவரது வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இது தொடர்பாக இரு காவல் நிலையங்களில் புகார் அளித்தும் பாதுகாப்பு அளிக்கப்படவில்லையெனக் கூறினார்.

இந்த விவகாரம் இரண்டு காவல்நிலைய எல்லைகளுக்குள் வருவதால், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கேட்டுச் சொல்வதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்புக் கோரும் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை மனுவாக தாக்கல் செய்யும்படிகூறி, வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: