கொரோனா வைரஸ்: சீனாவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 500-ஐ கடந்தது

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தொற்றால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது.
கொரோனா வைரஸால் சீனாவில் இறந்தவர்கள் எண்ணிக்கை வியாழக்கிழமையன்று 563ஆக அதிகரித்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் பரவல் தொடங்கிய ஹூபே மாகாணத்தில் மட்டும் புதனன்று 70 பேர் உயிரிழந்துள்ளனர். இது சீனா முழுவதும் புதனன்று நிகழ்ந்த கொரோனா வைரஸ் மரணங்களில் சுமார் 80%.
ஆனால் இந்த எண்ணிக்கை நாடு முழுவதும் உயிரிழந்தோர் பட்டியலில் இன்னும் சேர்க்கப்படவில்லை என்று அம்மாகாணத்தின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்த ஹாங்காங் முடிவு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சீனாவிலிருந்து வருபவர்களை கட்டாயமாக 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த ஹாங்காங் திட்டமிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஹாங்காங் அரசின் இந்த முடிவு வரும் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், எல்லையை முற்றிலும் மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
ஹாங்காங்கை பொறுத்தவரை, 21 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். 2002-2003ஆம் ஆண்டுகளில் சீனாவின் பெருநில பகுதியை சார்ஸ் வைரஸ் தாக்கியதில் ஹாங்காங்கில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர்.
செவ்வாய்க்கிழமை சீனாவில் மட்டும் 24,300 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அன்று மட்டுமே 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
முதன்முதலில் கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், படிப்படியாக சீனா முழுவதும் பரவியது மட்டுமின்றி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளில் பரவி உள்ளது.
இதுவரை சீனாவிற்கு வெளியே 191 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் மட்டும் சமீபத்தில் பிலிப்பைன்ஸில் உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தை உலக அளவில் சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் தலைவரான டெட்ரோஸ், கொரோனாவுக்கு எதிரான அடுத்த மூன்று மாதங்களுக்கான செயல்திட்டத்துக்கு 675 மில்லியன் டாலர் நிதி தேவைப்படுவதாக நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஜப்பானின் யுகோஹாமா துறைமுகத்துக்கு வந்த சொகுசு கப்பலில் இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கிட்டத்தட்ட பத்து பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
டயமண்ட் பிரின்சஸ் என்ற பெயருடைய இந்தக் கப்பலில் உள்ள 3700 பேரில் 300 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
கப்பலில் இருந்த 80 வயது ஹாங்காங் நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் உடல் நலம் குன்றியதை அடுத்து பரிசோதனைகள் தொடங்கின.
3600 பேருடன் ஹாங்காங் துறைமுகத்துக்கு வந்துள்ள இன்னொரு சொகுசு கப்பலில் இருப்பவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













