புதிய வரித் திட்டம் வரி செலுத்துவோருக்கு லாபமா? நஷ்டமா? எந்த வரி சலுகைகள் பறிபோகும்?

பட்ஜெட் 2020 : சேமிப்பை ஊக்குவிக்கவில்லை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நிதி ராய்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட விதி விலக்குகள் அற்ற புதிய வருமான வரித்திட்டத்தை தேர்ந்தெடுப்பதா அல்லது ஏற்கனவே அமலில் உள்ள வருமானவரித்திட்டத்தையே பின்பற்றுவதா என மாத ஊதியம் அதிகம் பெரும் மக்களிடையே குழப்பம் நிலவுகிறது.

News image

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள, குறைக்கப்பட்ட வரிவிகித திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்கள், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 100 வரிவிலக்குத் திட்டங்களில் 70 திட்டங்கள் மூலம் பயன்பெற முடியாது என்று தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

புதிய வருமான வரி திட்டத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

0 - 5 லட்சம் வரை - வரி இல்லை

5 லட்சத்திலிருந்து 7.5 லட்சம் வரை - 20%லிருந்து 10சதவீதமாக குறைப்பு

7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை - 20%லிருந்து 15சதவீதமாக குறைப்பு

10 லட்சத்திலிருந்து 12.5 லட்சம் வரை - 30%லிருந்து 20சதவீதமாக குறைப்பு

12.5 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை - 30%லிருந்து 25 சதவீதமாக குறைப்பு

15 லட்சத்துக்கு மேல் - 30% (குறைக்கப்படவில்லை)

புதிய வருமான வரித்திட்டம் குறித்து எடுத்துகாட்டுடன் கூறிய நிர்மலா சீதாராமன், ஒருவர் 15 லட்சம் சம்பாதிக்கிறார் என்றால் இதுவரை அவர் ஆண்டுக்கு 2.73 லட்சம் வரி செலுத்தினார். இனி புதிய வருமானவரி அறிவிப்புகளின்படி, அவர் 1.95 லட்சம் ரூபாய் வரியாக கட்டுவார். இது முன்பை காட்டிலும் 78 ஆயிரம் ரூபாய் குறைவு. அவர், முறையான வரி விலக்குகளை பெற்றால் மேலும் அவரது வரி குறையும் என்றார்.

பட்ஜெட் 2020 : சேமிப்பை ஊக்குவிக்கவில்லை

பட மூலாதாரம், Getty Images

ஆனால், இந்த புதிய வருமான வரி திட்டத்துக்கும், பழைய வருமான வரி திட்டத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

அதாவது பழைய வருமான வரி விதிப்பு திட்டத்தில் வரி விலக்கு பெற 100 பிரிவுகள் கொடுக்கப்பட்டு இருந்தன. ஆனால், புதிய வரி விதிப்பில் 100 பிரிவில் 70 பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. வெறும் 30 பிரிவுகள் மட்டுமே இடம்பெற்று இருக்கின்றன.

எளிமையாக கூற வேண்டுமென்றால், பழைய வருமான வரி விதிப்பில் வரி விலக்கு திட்டங்கள் அதிகம் இருந்தன. ஆனால், வரி விகிதம் அதிகம். புதிய முறையில் வரிவிகிதம் குறைவு. ஆனால், வரிவிலக்குத் திட்டங்களில் 70 திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், இந்த வரிவிதிப்பு பொதுவான மக்களுக்கு எளிதில் புரிய கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வல்லுநர்களின் உதவியை பெறத் தேவையில்லை என்று கூறினார். மேலும் 2.5 மணி நேர பட்ஜெட் உரையில் 132 முறை ''வரி'' என்ற வார்த்தையை நிர்மலா சீதாராமன் பயன்படுத்தினார்.

இந்த புதிய வரித் திட்டத்தையும் பழைய வரி திட்டத்தையும் ஒப்பிட்டு கணக்கிடுகையில் பழைய வரி திட்டத்தையே மக்கள் கடைபிடிப்பது எதிர்காலத்திற்கும் நல்லது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பட்ஜெட் 2020 : சேமிப்பை ஊக்குவிக்கவில்லை

பட மூலாதாரம், Getty Images

நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய வரித்திட்டம், பணத்தை சேமிக்க இன்றைய இளைய தலைமுறையினரை ஊக்குவிக்காது என எம்கே நிதி சேவை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா குமார் கார்வா கூறுகிறார். இந்தியா போன்ற நாட்டில் சமூகப் பாதுகாப்பு இன்றி வாழும் இளைய தலைமுறையினர் வீடு வாங்கி , எதிர்காலத்திற்காக பணம் சேமிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த படஜெட் அமைத்திருக்க வேண்டும். ஆனால் 2020ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் அமையவில்லை.

புதிய திட்டத்தில் வருமான வரி அதிகம் செலுத்த நேரிடும்

வருமான வரி வல்லுநர் அர்னாவ் பாண்டே கூறுகையில், ''வருமான வரி விலக்குகள் இன்றி மக்கள் புதிய வரி திட்டத்தை தேர்ந்தெடுத்தால், அவர்கள் அதிக வரி கட்டணம் செலுத்துவது போல உணர்வார்கள், எனவே புதிய வரி திட்டத்தை தேர்ந்தெடுக்கமாட்டார்கள்.'' என்றார்.

எடுத்துக்காட்டாக உங்களின் ஆண்டு வருமானம் எட்டு லட்சம் ரூபாயாக இருந்தால், பழைய வரி திட்டத்தின் கூழ் 39,000 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும், ஆனால் புதிய திட்டத்தின்படி 46,000 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது. பழைய திட்டத்தை விட புதிய திட்டத்தில் 7,000 ரூபாய் வரி அதிகம்.

புதிய குறைவான வரிவிகிதத்தை தேர்ந்தெடுக்க நீங்கள் விட்டு கொடுக்க வேண்டிய வரி விலக்குகள்

  • வரிவிலக்கு பிரிவு 80சி (வருங்கால வைப்பு நிதி, தேசிய ஓய்வூதிய திட்டம், ஆயுள் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட விலக்குகள் இல்லை)
  • வரிவிலக்கு பிரிவு 80டி (சொந்த வீடு வாங்கி மாத கடன் கட்டுபவருக்கும் விலக்கு இல்லை, வீட்டு வாடகை மீதான வரி விலக்கு, மருத்துவ காப்பீட்டு வரி விலக்கு ரத்து)
  • கல்விக் கடனுக்காக செலுத்தப்படும் வட்டி தொகைக்கும் வரிவிலக்கு கோர முடியாது- வரிவிலக்கு பிரிவு 80இ
  • நான்கு வருடத்திற்கு இரண்டு முறை வெளியூர் பயணம் மேற்கொண்டால், அந்த பயணக்கட்டணத்திற்கு உள்ள வரி விலக்கும் ரத்து.
  • பிரிவு 80 ஜி இன் கீழ் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கும் தொகைகளுக்கு உள்ள வரிவிலக்கும் புதிய வரிவிகிதத்தில் கிடைக்காது.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான வரிச் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • வருமான வரி செலுத்தும் மாத ஊதியம் பெறுபவர்களுக்கு, வரி கணக்கெடுப்பில் மொத்த தொகையில் இருந்து ஸ்டான்டர்ட் டிடெக்‌ஷன் மூலம் 50,000 ரூபாய் கழிக்கப்படும். ஆனால் புதிய வரித் திட்டத்தில் இந்த சலுகை இல்லை.
  • பிரிவு 16 இன் கீழ் பொழுதுபோக்குக்கு செலவிடப்படும் தொகைக்கு இருந்த வரிவிலக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு இருந்த 15,000 ரூபாய் வரி விலக்கும் இனி கிடையாது.
பட்ஜெட் 2020 : சேமிப்பை ஊக்குவிக்கவில்லை

பட மூலாதாரம், Getty Images

எனவே, புதிய தனிநபர் வரி திட்டம் உண்மையில் பெரும்பாலானவர்களுக்கு கணிசமான வரியை மிச்சப்படுத்திக் கொடுக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும் பழைய வருமான வரித் திட்டத்தில் உள்ளதைப் போல வருமானத் தொகையை சேமிக்க இந்த புதிய வரி விதிப்பு உதவுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது ? ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வரி விலங்குகளின் பயனை பெற பலர் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஓய்வூதிய திட்டம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட திட்டங்களை பயன்படுத்தினர். இவற்றில் முதலிடு செய்யவும் தயாராக இருந்தனர். ஆனால் இந்த புதிய வரி விதிப்பால் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஓய்வூதிய திட்டங்கள் மீது மக்களுக்கு ஈடுபாடு இல்லாமல் போகலாம்.

கிளியர் டேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அர்சித் குப்தா கூறுகையில், புதிய வரி விதிப்பு வரி செலுத்தும் முறையை சுலபமாக்கி இருக்கலாம் ஆனால் வரி செலுத்துகிறவருக்கு இணக்கமான எந்த லாபமும் இல்லை என கூறுகிறார்.

மேலும் பட்ஜெட் அறிவிப்பின்போது பங்கு சந்தையில் 2.43 சதவிகிதம் சரிவு காணப்பட்டது. இதில் இருந்து பட்ஜெட் அறிவிப்புகள் சந்தையில் உள்ள வர்த்தகர்களை கவரவில்லை என்பது நன்கு தெரிகிறது.

இப்போதுஅரசாங்கத்தை வலிமைப்படுத்த வேறு வழிகளைத் தேட வேண்டும், ஏனென்றால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை வழங்கத் தவறிவிட்டது.

பட்ஜெட் 2020 : சேமிப்பை ஊக்குவிக்கவில்லை

பட மூலாதாரம், Getty Images

வங்கி வைப்புத் தொகை மீது செய்யப்பட்டிருந்த காப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரித்தது இந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்த இன்னொரு முக்கிய அறிவிப்பு. பஞ்சாப், மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி சிக்கல் வெளிச்சத்திற்கு வந்ததில் இருந்து மக்களிடம் தங்கள் வங்கி வைப்புகள் தொடர்பாக கவலை கொண்டுள்ளனர். 1 லட்சம் ரூபாய் என்பது மிகவும் குறைவு என்று வல்லுநர்கள் எச்சரித்துவந்தனர்.

ஏனெனில், இந்திய வங்கியில் ஒருவர் 95,000 ரூபாய் தொகை வைத்திருந்தால், ஏதேனும் சிக்கல் ஏற்படும்போது, காப்பீட்டு பாதுகாப்பு மூலம் தன் முழு வைப்புத் தொகையையும் திரும்பப் பெற முடியும். ஆனால், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வைப்புத் தொகை இருந்தால், எடுத்துக்காட்டாக, ஒருவர் 25 லட்சம் ரூபாய் வங்கி வைப்பாக வைத்திருந்தால், ஏதேனும் சிக்கல் நடக்கும் நேரத்தில், காப்பீட்டுப் பாதுகாப்பு மூலம் அதிகபட்சமாக அவர் ரூ.1 லட்சம் மட்டுமே திரும்பப் பெற முடியும். இந்தத் தொகைதான் தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

உண்மையில், தமது பட்ஜெட் உரையில், வங்கியில் உள்ள தங்கள் வைப்புத் தொகை குறித்து மக்கள் பயப்படத் தேவை இல்லை என்றே நிர்மலா சீதாராமன் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: