குடியுரிமை திருத்த சட்டம் குறித்த ரஜினியின் கருத்துகள் ஏற்புடையதா?

பட மூலாதாரம், TWITTER
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் மாணவர்களின் போராட்டம் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகள் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ரஜினிகாந்தின் கருத்தை பா.ஜ.க. முழுமையாக ஆதரிக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் அவரை எச்சரிக்கின்றன.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்திடம், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. "குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஏற்கனவே கூறியுள்ளனர். எனினும் சில அரசியல் கட்சிகளும் மதகுருக்களும் தங்கள் சுயலாபத்துக்காக போராட்டங்களை தூண்டி விடுகின்றனர்" என்று தெரிவித்தார்.
மேலும், "போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் தங்கள் பேராசிரியர்கள் மற்றும் பெரியவர்களிடம் கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தால் வாழ்க்கையே பறிபோகும்" என்றும் தெரிவித்தார் அவர்.
இந்தியாவில் வெளிநாட்டவர்கள் யாரேனும் சட்டவிரோதமாக வசிக்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ள தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) அவசியம் என்று கூறிய ரஜினிகாந்த், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அதுகுறித்து எதுவும் கூற முடியாது என்றார்.
ரஜினியின் இந்தக் கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாரதீய ஜனதாக் கட்சியினர் இதனை உடனடியாக ஆதரித்தனர். இது குறித்து பிபிசியிடம் பேசிய அக்கட்சியின் தேசியச் செயலர் எச். ராஜா, "இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளால் மாணவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ரஜினி மிகத் தெளிவான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், MJKParty Facebook
ஆனால், மனித நேய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தமீமுன் அன்சாரி ரஜினியின் இந்தக் கருத்தைக் கடுமையாக விமர்சிக்கிறார். "குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதுமே இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம்கள், தலித்துகள், சீக்கியர் என அனைவருமே மத வேறுபாடின்றி போராடுகிறார்கள். சமீப காலமாக பிராமண சகோதரர்களும் இதற்கு எதிராக போராடுகிறார்கள். இந்தச் சூழிலில், ரஜினியை இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக பேசச் செய்ய பா.ஜ.க. பணித்திருப்பதாக நினைக்கிறேன். ரஜினி கந்து வட்டிக்கு கடன் தருவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக செய்திகள் வரும் நிலையில், தன்னைப் பாதுகாக்க இம்மாதிரி பா.ஜ.வுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்" என்கிறார் தமீமுன் அன்சாரி.
"மக்களைத் தூண்டுவிடுவதாக அரசியல் கட்சிகளைக் குறை சொல்கிறார் ரஜினி. அது கண்டனத்திற்குரியது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அரசியல் கட்சிகள் ஆதரிக்கின்றன அவ்வளவுதான். இந்தச் சட்டத்தை பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளை எதிர்க்கின்றன என்பதுகூட அவருக்குத் தெரியவில்லையா?" எனக் கேள்வியெழுப்புகிறார் அவர்.

பட மூலாதாரம், Twitter
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் எனக் கூறப்படுவதன் பின்னணியில் இந்தக் கருத்தை பார்க்க வேண்டும். இதில் பா.ஜ.கவுக்கு சாதகமான அதேநேரம் ரஜினிக்கு பாதகமான அம்சங்கள் உள்ளன என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான து. ரவிக்குமார்.
"இதுபோன்ற கருத்துகளை இவர் சொல்வதால் அவை மக்களிடம் பிரபலமாகும் என்பது பா.ஜ.கவுக்கு ஒரு சாதகமான அம்சம். ஆனால், இது ரஜினிக்கு பாதகமான அம்சம் . இவர் அரசியலுக்கு வரும்பட்சத்தில், இவரை மக்கள் ஒரு மாற்றாக பார்க்கமாட்டார்கள். ஒருவேளை ரஜினி மதச்சார்பற்ற அரசியலைப் பேசினால், அவர் தி.மு.க. - காங்கிரஸ் வாக்குகளைப் பிரிக்கக்கூடும். இந்துத்துவ அரசியலைப் பேசும்போது, அவர் பா.ஜ.க. - அ.தி.மு.க. வாக்குகளையே பிரிப்பார். இதனால், தமிழகத்தில் திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பது என்ற பா.ஜ.கவின் நோக்கம் நிறைவேறும் என நான் நினைக்கவில்லை.
நாடு முழுவதுமே இந்துத்துவ சார்பெடுத்துப் பேசுவது என்பது ஃபேஷனாக இருக்கிறது. அதை இங்கே பரப்புவதற்கு வேண்டுமானால் ரஜினி பயன்படலாம். அதற்கு மேல், ரஜினி மீது பா.ஜ.கவுக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை" என்கிறார் ரவிக்குமார்.

பட மூலாதாரம், TNCC
தமிழக காங்கிரஸ் கட்சியும் ரஜினியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்திருக்கும் அறிக்கையில், "நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, உடன் இருப்பவர்கள் கூறுவதை நம்பி பேசுவதனால் பல விளைவுகளை இதுவரை சந்தித்து வருகிறீர்கள். இந்நிலை தொடர்ந்தால் கடுமையான வீழ்ச்சியை நோக்கி நீங்கள் தள்ளப்படுவீர்கள் என்று உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். யாருடைய உதவியும் இல்லாமல் தயவு செய்து இந்திய குடியுரிமை சட்டம் 1955, குடியுரிமை சட்டத் திருத்தம் 2019 இரண்டையும் தயவு செய்து படித்து ஒப்பிட்டுப் பாருங்கள்" என்று கூறியிருக்கிறார்.
மேலும், "இதுவரை ரஜினிகாந்தை ஒரு நடிகராக பார்த்த தமிழக மக்கள் இனி பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அவரை பார்க்க வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது" என்றும் கூறியிருக்கிறார்.
பா.ஜ.கவுக்கு ஆதரவாக ரஜினி கருத்துத் தெரிவிப்பது இது முதல் முறையல்ல; அதனால் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் ஃப்ரன்ட் லைன் இதழின் அசோசியேட் எடிட்டருமான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
"ரஜினி சூப்பர் ஸ்டாரிலிருந்து சூப்பர் சங்கியாக மாறிவிட்டார். மதத்தை அடிப்படையாக வைத்து குடியுரிமையை நிர்ணயிப்பது அரசியல் சாஸனத்திற்கு எதிரானது என சட்ட நிபுணர்கள் விளக்கியிருக்கின்றனர். இது தவிர மேலும் பல பிரச்சனைகள் சிஏஏவில் இருக்கிறன. இதையெல்லாம் மறந்துவிட்டு, மறைத்துவிட்டு இப்படி கருத்து வெளியிடுவது சரியல்ல" என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
மத்திய அரசு கொண்டுவந்த சட்டம் குறித்து ரஜினி வெளிப்படையாக கருத்துத் தெரிவித்திருப்பது எதிர்பார்க்கக்கூடியதுதான் என்கிறார் அவர். "அவரது இந்தக் கருத்து நரேந்திர மோதிக்கு, பா.ஜ.கவுக்கு ஆதரவானது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போதும் இப்படி ஒரு நிலைப்பாட்டை ரஜினி எடுத்தார். அதற்குப் பிறகு, அது ஒரு தோல்விகரமான நடவடிக்கையாக மாறிய பிறகு, அதைப் பற்றி அவர் பேசவேயில்லை. இப்போதும் அப்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார் ரஜினி" என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













