எல்.ஐ.சி. பங்குகளை விற்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுமா? - விரிவான தகவல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி-யின் பங்குகளை விற்க இந்திய அரசு செய்துள்ள முடிவானது, அரசு தன்னுடைய மகுடத்தில் வைத்துள்ள வைரக்கல்லை விற்பதற்கு சமமான செயல் என்றும் தனியாருக்கு எல்.ஐ.சி-யின் பங்கை கொடுப்பது தேச நலனுக்கு எதிரானது என்றும் எல்.ஐ.சி. ஊழியர் கூட்டமைப்பின் தென் மண்டலத் துணைத் தலைவர் க.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
2020 -2021ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எல்.ஐ.சி-யில் இருந்து அரசின் பங்குகளை குறிப்பிட்ட அளவு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிடுகிறார் சுவாமிநாதன்.
எல்.ஐ.சி பங்குகளை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 35 ஆண்டுகளாக எல்.ஐ.சி-யில் பணிபுரியும் சுவாமிநாதனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் பலவற்றுக்கும் பங்களித்துள்ள எல்.ஐ.சி-யின் பங்கை விற்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவானது முறையற்றது என்றார்.
அவருடனானபேட்டியிலிருந்து:
எல்.ஐ.சி நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், எல்ஐசி-யில் அரசின் பங்கு விலக்கல் நடவடிக்கை தொடங்கியுள்ளது என்கிறார்கள். பங்குச்சந்தையில் பட்டியலிட்டால், மேலும் லாபம் அதிகரிக்கும் என்ற கருத்து உள்ளது.இன்சூரன்ஸ் ஊழியர்கள் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
எல்.ஐ.சியின் வருமானம் குறித்து இதுவரை எந்த ஓர் அரசாங்கத்துக்கும், நிதிஅமைச்சருக்கும் சந்தேகம் வந்ததில்லை. இந்தியாவின் முக்கியமான கட்டுமான தேவைகளுக்கு எல்.ஐ.சி அளித்துள்ள பங்கு அளப்பரியது. வெறும் 5 கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டு 1956ல் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி, தற்போது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5கோடி புது பாலிசிகளை ஈட்டும் நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது. இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களோடு ஒப்பிட்டால், எந்த காலத்திலும் சரிவை சந்திக்காத நிறுவனமாக இருப்பது எல்.ஐ.சி மட்டும்தான். இந்த பொதுத்துறை நிறுவனத்தின் பங்கை விற்கும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது என யோசிக்கவேண்டும்.
பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், தனியாரிடம் விற்றால் லாபம் கிடைக்கும் எனக்கூறி தனியார்மயத்திற்கு ஆதரவாகியது அரசு. பின்னர், பொதுத்துறை நிறுவனங்களில் திறமையற்ற நிர்வாகம், சேவை இருப்பதால் தனியாரிடம் கொடுக்கலாம் என்றார்கள். பின்னர், மக்கள் வரிப் பணம் வீணாகிறது என்பதால் தனியாரிடம் கொடுக்கலாம் என விதவிதமாக காரணம் சொல்லி, பல பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்தார்கள். இதில் எந்த குற்றச்சாட்டையாவது எல்.ஐ.சி மீது இந்த அரசாங்கத்தால் சொல்ல முடியுமா? எதனைச் சொல்லி எல்.ஐ.சி-யை விற்கப் பார்க்கிறார்கள்?
எல்.ஐ.சியின் ஒரு பகுதி அளவு பங்குகளை விற்றால், அந்த தொகை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்கிறது அரசு. இதில் என்ன சிக்கல்?
எல்.ஐ.சி கடந்த நிதியாண்டில் டிவிடெண்ட் ஆக மட்டும் அரசுக்கு தந்த தொகை ரூ.2,611 கோடி. 12வது ஐந்தாண்டு (2012 -17) திட்டத்திற்கு எல்.ஐ.சி-யின் பங்களிப்பு ரூ.14.23 லட்சம் கோடி. சராசரியாக ஆண்டிற்கு ரூ.2,84,000 கோடி. 13 வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே (2017-19) அரசுக்கு தந்திருப்பது ரூ.7,01,483 கோடி.

பட மூலாதாரம், Getty Images
ஆண்டு சராசரி பங்களிப்பு ரூ.3,50,000 கோடியாக உயர்ந்துள்ளது. எல்.ஐ.சி யின் சொத்து மதிப்பு ரூ.32 லட்சம் கோடி. ரயில்வே, நெடுஞ்சாலை, துறைமுக மேம்பாடு, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் என அரசின் ஆதாரத் திட்டங்களுக்காகவும், சமூக நலனுக்காகவும், அரசின் பத்திரங்களிலும் முதலீடு செய்துள்ள தொகை ரூ.28,84,331 கோடி. அரசின் பட்ஜெட் மதிப்பீடுகள் எல்லாம் பொய்த்து போகிற சூழலில் கூட எல்.ஐ.சி மீதான நம்பிக்கை, எதிர்பார்ப்பு மட்டும் பொய்த்ததே இல்லை. நிர்வாகத் திறமைக்கு இதைவிட சான்று என்னவாக இருக்க முடியும்? இந்திய பொருளாதாரத்திற்கு எல்.ஐ.சி ஓர் அமுத சுரபியாக திகழ்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான எல்லா உதவிகளையும் தற்போதைய நிலையில் எல்.ஐ.சி வழங்கும்போது, ஏன் அதை தனியாரிடம் கொடுத்து, மக்களின் நம்பிக்கையை அரசு குலைக்கவேண்டும்?
2020க்கு முன்னரும் கூட எல்.ஐ.சியின் பங்குகளை விற்க முயற்சிகள் நடந்துள்ளன. தற்போது, பாஜக முன்னர் விவாதிக்கப்பட்ட திட்டத்தை நிறைவேற்றுகிறது என எடுத்துக்கொள்ளலாமா?
1956ல், 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்பட்டு, எல்.ஐ.சி உருவானது. இந்திய நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் இன்சூரன்ஸ் பாதுகாப்பை கொண்டு போய் சேர்ப்பதே எல்.ஐ,சி-யின் லட்சியம் என அறிவிக்கப்பட்டது. இதன் பொருள், 245 தனியார் நிறுவனங்களால் செய்ய முடியாததை எல்.ஐ.சி. செய்துகாட்டியது என்பதுதான்.
அதற்கு பின்னர், 1999ல் இன்சூரன்ஸ் துறையில் வந்த பன்னாட்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் சாதாரண மக்களுக்கு இன்சூரன்ஸ் சேவையை விரிவு செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் கிடையாது. கடைக்கோடி இந்தியனுக்கும் இன்சூரன்ஸ் வழங்கியது எல்.ஐ.சி. சுமார், 40 கோடி பாலிசிகளை இன்று எல்.ஐ.சி வைத்திருக்கிறது. இவ்வளவு பாலிசிகளை வைத்துள்ள உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என்றாலே திவால் என்ற நிலைமையை மாற்றி பாலிசித்தாருக்கான உரிம பட்டுவாடாவை (settlement) 98.4 சதவீதம் என்கிற அளவில் வைத்துள்ளது. இதுவும் உலகிலேயே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய இன்சூரன்ஸ் துறையில் உள்ளே வந்த பன்னாட்டு நிறுவனங்கள் சில பத்தாண்டுகளில் இங்கேயிருந்து முதலீடுகளை எடுத்துக் கொண்டு திரும்பி விட்டார்கள். அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி, ஆஸ்திரேலியாவின் ஏ. எம்.பி ஆகியன உதாரணங்கள். நீண்ட கால சேமிப்புகளை பாதுகாக்க வேண்டிய தனியார் நிறுவனங்கள் 10 ஆண்டுகளில் வெளியேறுகிறார்கள். அவர்களை நம்பி எப்படி மக்கள் சேமிக்க முடியும்?

பட மூலாதாரம், Getty Images
இதுவரை இந்திய அரசுக்கு எல்ஐசி நிறுவனத்தின் மூலம் எந்தெந்த விதத்தில் லாபம் கிடைத்திருக்கிறது? தற்போது பங்குகளை விற்பதால் என்ன மாற்றம் ஏற்படும்?
1956 ல் வெறும் 5 கோடி ரூபாய் அரசு முதலீட்டில் துவக்கப்பட்ட எல்.ஐ.சிக்கு அதற்கு பின்னர் கூடுதல் முதலீடே தேவைப்படவில்லை. பங்கு சந்தைக்கு இழுத்து வருவதற்காகவே சட்ட நுணுக்கங்களை காரணம் காட்டி ரூ.100 கோடியாக மூலதனத்தை உயர்த்தினார்கள். இந்த தொகையும் அரசு ஆண்டுதோறும் எல்.ஐ.சி-யிடமிருந்து பெறுகிற டிவிடென்டில் மிகச் சிறிய பகுதியேயாகும். தற்சார்பு கொண்ட நிறுவனத்தை தனியார் மயமாக்க முனைவதற்கு என்ன நியாயம் இருக்கிறது.
இந்திய அரசு எந்தவொரு பெரிய கட்டுமான திட்டங்களை கொண்டுவந்தாலும், நெருக்கடியான பொருளாதார நிலையை சந்தித்தாலும், முதலுதவி செய்வது எல்.ஐ.சிதான். இந்த நிறுவனத்தின் பங்கை விற்றால், சிறிது காலத்தில், நிறுவனத்தில் அரசாங்கத்தின் உரிமைக்கு பிரச்சனை வரலாம்.
அதேபோல, பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் மக்கள் உரிமையாக போராடி தங்களது பாலிசிக்கான தொகையை பெறலாம். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மக்களை வெறும் லாபம் தரும் பாலிசிதாரராக மட்டுமே பார்ப்பார்கள் என்பதால், அவர்களின் முதலீடு கேள்விக்குறியாகிவிடும். மொத்தத்தில், இந்தியப் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவிடும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













