மத்திய பட்ஜெட் 2020: இந்திய மக்களுக்கு வரமா? ஏமாற்றமா?

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிர்மலா சீதாராமன்
    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய நாடாளுமன்றத்தில் 2020-2021ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமையன்று தாக்கல் செய்தார்.

News image

பல்வேறு அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடு அறிவிப்புகளை அறிமுகம் செய்துவைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனி நபர் வருமான வரிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அறிவித்தார்.

மத்திய பட்ஜெட் மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் உள்ளதா என்பது குறித்தும், இந்த பட்ஜெட்டின் சாதக, பாதக அம்சங்கள் குறித்தும் முக்கிய கட்சித்தலைவர்கள் சிலர் பிபிசி தமிழுடன் உரையாடினர்.

மத்திய பட்ஜெட் ஏற்றம் தரும் வகையில் அமைந்துள்ளதா என்று கேட்டதற்கு பதிலளித்த திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான ஆர். எஸ். பாரதி, ''எந்த வகையிலும் ஏற்றம் தரும் வகையில் இந்த பட்ஜெட் உரை அமையவில்லை. மாறாக அதிக அளவு ஏமாற்றமே அளிக்கிறது'' என்று கூறினார்.

''வருமானத்துக்கே வழியில்லாத வகையில் மக்களை தள்ளியபிறகு, வருமானவரி குறைப்பு போன்ற அறிவிப்புகள் ஏமாற்று வேலையே'' என்றார்.

''மேலும் வருமான வரி குறைப்பு என்ற அறிவிப்பில் தெளிவில்லை. குழப்பமே நீடிக்கிறது,'' என்று தெரிவித்த அவர், மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் பட்ஜெட் அறிவிப்புகளை எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட் உரையில் இல்லை என்ற நிலையே உள்ளது என்று தெரிவித்தார்.

''பல்வேறு துறைகளும் தள்ளாடிக் கொண்டிருக்கும் சூழலில், ஆக்கபூர்வமான அறிவிப்புகள் மற்றும் செயல்திட்டங்கள் மட்டுமே நாட்டை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லமுடியும். அப்படிப்பட்ட எதுவும் தற்போது நடக்கவில்லை.''

கோப்புப்படம்

பட மூலாதாரம், Himanshu Bhatt/NurPhoto via Getty Images

''மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டே முக்கால் மணி நேரத்துக்கு மேல் இந்த பட்ஜெட் உரையை படித்தது மட்டுமே ஒரே சாதனை; வேறு எந்த சாதனையும், நம்பிக்கை தரும் அறிவிப்புகளும் இந்த பட்ஜெட் உரையில் இல்லை'' என்று அவர் குறிப்பிட்டார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் சாதாரண மக்களுக்கு ஆதாயமளிக்குமா என்பது குறித்து பிபிசி தமிழிடம் முன்னாள் மத்தியமைச்சருமான திருநாவுக்கரசர் பேசினார்.

''காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக அல்லாமல் ஒரு சாதாரண குடிமகனாக பார்த்தால்கூட இந்த பட்ஜெட்டில் எனக்கு எந்த அம்சமும் மகிழ்ச்சி தரவில்லை.இந்த பட்ஜெட் சாதாரண மக்களுக்கானது அல்ல. இது ஒரு கார்ப்பரேட் அரசு. அவர்களுக்குத்தான் இந்த பட்ஜெட் பலனளிக்கும்'' என்று கூறினார்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

மேலும் அவர் பேசுகையில், ''நாட்டில் எண்ணற்ற இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கின்றனர். அவர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் எந்த திட்டமும் இந்த பட்ஜெட் உரையில் இல்லை'' என்றார்.

''பல்வேறு துறைகளுக்கு கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது ஒரு சம்பிரதாயமாகவே தோன்றுகிறது. நடைமுறை சாத்தியங்களை இது கருத்தில் கொண்டதாக தெரியவில்லை'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

''எவ்வளவு நேரம் பட்ஜெட் உரையை படிக்கிறார்கள் என்பதில் இல்லை பட்ஜெட்டின் சிறப்பு. இந்திய வரலாற்றில் அதிக நேரம் பட்ஜெட் உரையை படித்த நிதியமைச்சர் என்பதில் என்ன பெருமை இருக்கிறது?ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு என்ன நன்மை கிடைத்து என்பதுதானே முக்கியம்'' என்று அவர் வினவினார்.

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், ANI

2020-21 பட்ஜெட் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், பல சிறப்பான அம்சங்கள் இந்த பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிபிசி தமிழிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமை அலுவலக நிர்வாகியான ஆசிர்வாதம் ஆச்சாரி கூறினார்.

''மக்களை மகிழ்விக்கும்படி பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக வருமான வரி குறைப்பு நடுத்தர மக்களுக்கு பலனளிக்கும்'' என்று தெரிவித்தார்.

வருமான வரி விதிப்பு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, இரண்டு வருமான வரி திட்டங்கள் என்ற நிலை குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், புதிய வருமான திட்டத்தில் வரி செலுத்துபவர்கள் முன்பைவிட கூடுதலாக வரி செலுத்தக்கூடும் என்ற சூழல் உருவாகியிருப்பதாக எழும் விமர்சனங்கள் பற்றி கேட்டதற்கு, ''வருமான வரி குறிப்பு திட்டத்தில் எந்த குழப்பமும் இல்லை.

புதிய வருமானவரி திட்டத்தில் அதிகமாக வருமானம் ஈட்டுபவர்கள் கூடுதலாக வரி கட்ட வேண்டிய நிலை வரலாம் என்பதால்தான் அவர்களுக்கு பழைய வருமானவரி திட்டமும் தேர்வாக தரப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

மக்கள் பணத்தை செலவழிக்க வைக்கும் வகையில் பட்ஜெட் உரையில் திட்டங்கள் உள்ளதாக கூறப்படுவது பற்றி கேட்டதற்கு, ''பணத்தை கையில் வைத்துக்கொண்டிருந்தால் எந்த பலனுமில்லை. அதேவேளையில், அதிகப்படியான பணம் செலவழிக்கப்படும்போது அது பொருள்களின் தேவையை அதிகரித்து, அது தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை உறுதி செய்யும்'' என்று கூறினார்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், SAM PANTHAKY/AFP via Getty Images

''இதுவே தொழிற்சாலைகளில் பலருக்கும் வேலை கிடைப்பதற்கு காரணமாகும். நாட்டிற்கும் பலன் கிடைக்கும்'' என்று அவர் மேலும் கூறினார்.

''அதேவேளையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பணம் சேமிக்கப்படுவதை அரசு நிச்சயம் ஊக்குவிக்கிறது''

வேளாண்மை மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ள இந்த பட்ஜெட் உரையில் 2025ஆம் ஆண்டுக்குள் காசநோய் ஒழிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க அம்சம் என்றும் அவர் கூறினார்.

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது தமிழகத்திற்கு கிடைத்த நற்செய்தி என்று குறிப்பிட்ட அவர், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன்பல சிறப்புவசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் நாடு முழுவதும் அமைக்கப்படவுள்ளது மிகவும் நன்மை பயக்கும் திட்டம் என்று கூறினார்.

சிறப்பு மருத்துவமனை நான் வலியுறுத்திய திட்டம் என்ற வகையில் இது எனக்கு மிகவும் மகிழ்வை தருகிறது என்று ஆசிர்வாதம் ஆச்சாரி கூறினார்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: