நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றக் கோரிய மத்திய அரசின் மனு தள்ளுபடி

நிர்பயா குற்றவாளி

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேரின் தூக்கு தண்டனைக்கு டெல்லி பட்டியாலா நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குற்றவாளிகள் நான்கு பேரும் ஒரு வாரத்திற்குள் சட்டரீதியாக என்ன செய்ய முடியுமோ அதனை செய்யலாம் என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், ஒரு வாரத்திற்கு பிறகு, அவர்களை தூக்கிலிடுவதற்கான அதிகாரப்பூர்வ ஆணை பிறப்பிப்பது குறித்த விசாரணையை தொடங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

அப்படி அவர்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க தவறிவிட்டால், அதிகாரிகள் அதற்கேற்ற நடவடிக்கையை எடுத்துக் கொள்ளலாம் என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் கெய்ட் தெரிவித்தார்.

ஒரு குற்றவாளியின் கருணை மனு நிலுவையில் இருக்கிறது என்றால், மற்றவர்களை தூக்கிலிடலாம் என்று சிறை கையேட்டில் ஏதும் குறிப்பிடவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வழக்கில் மொத்தம் நான்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் மற்றும் முகேஷ் குமார்.

News image

தங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை கோரி பவன் குப்தா, அக்ஷய் குமார் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோர் சமீபத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த விசாரணை நீதிமன்றம், மறு உத்தரவு வரும்வரை குற்றவாளிகளை தூக்கிலிடக் கூடாது என்று கடந்த ஜனவரி 31 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி உள்ளிட்ட எந்த குற்றவாளிக்கும் நீதிமன்றம் பாகுபாடு காட்ட முடியாது. சட்ட ரீதியாக அவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: