''புதிய வரிவிதிப்பால் மக்களின் சேமிப்பு பழக்கம் குறையும்'' - ஆனந்த் சீனிவாசன்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் மத்திய அரசின் 2020 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வரிவிதிப்பு முறையால் மக்களிடம் சேமிப்பு பழக்கம் குறைந்துவிடும் என எச்சரிக்கிறார் பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
பழைய வரிவிதிப்பு முறையில் சேமிப்பு திட்டங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டிருந்ததால், வரிக்குறைப்பிற்காக பலரும் வீட்டு கடன் பெற்று வீடு கட்டினர். நிரந்தர வைப்பு நிதி உள்ளிட்டவற்றில் சேமித்து வந்தனர். 2020 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரிவிதிப்பில், சேமிப்பு இல்லாதவர்களுக்கு வரிவிதிப்பு குறைக்கப்பட்டுள்ளதால், இன்றைய தலைமுறையினர் பலரிடம் சேமிப்பு பழக்கம் குறைந்துவிடும் அபாயம் ஏற்படும் என்கிறார் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
நடுத்தரக் குடும்பத்தினர் எவ்வாறான சேமிப்பு திட்டங்களை தேர்வு செய்யலாம், புதிய வரிவிதிப்பால் என்ன பயன் உள்ளிட்ட விவரங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
பேட்டியிலிருந்து:
2020 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமானவரி குறைப்பு எந்த வகுப்பினருக்கு ஆதாயம் தரும்?
புதிய வரிவிதிப்பு, பழைய வரிவிதிப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என கூறமுடியாது. பணத்தை சேமித்தால், வரிவிலக்கு பெறலாம் என்ற விதியை மாற்றிவிட்டு, நீங்கள் வாங்கும் சம்பளத்தில் முதலில் வரி செலுத்திவிட்டு, பிறகு முழுவதுமாக செலவு செய்துகொள்ளுங்கள், உங்களுக்கு வரிகுறைப்பு செய்கிறோம் என்பதை புதிய வரிவிதிப்பு என்கிறார்கள்.
அதாவது, சேமிப்பு, வீட்டுக் கடன் போன்றவற்றுக்கு முன்பு கிடைத்த பழைய வரி விலக்குகள் எதுவும் வேண்டாம் என்று சொல்கிறவர்களுக்கு மட்டும், ஆண்டு வருமானம் 0 - 5 லட்சம் வரை இருத்தால் வரி கிடையாது. அது போல வரிவிலக்குகள் 5 லட்சத்திலிருந்து 7.5 லட்சம் வரை இருந்தால், முன்னர் 20% வரி இருந்தது. தற்போது அது 10சதவீதமாக குறைந்துள்ளது. இந்த பிரிவில் சம்பளம் பெறுவோர், 20 சதவீத வரியை குறைப்பதற்காக, ஏதாவது சேமிப்பு திட்டத்தில் பணத்தைப் போட்டு வைப்பார்கள். சேமிக்காதவர்கள் 10% செலுத்தினால் போதும் என்றால், வரி குறைப்பதற்காக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கிறவர்கள் அதற்குப் பதில் செலவு செய்வார்கள்.
அதேபோல, 7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு, 20%லிருந்து 15சதவீதமாக வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 10 லட்சத்திலிருந்து 12.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு 30%லிருந்து 20 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. 12.5 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை ஈட்டுபவர்களுக்கு 30%லிருந்து 25 சதவீதமாக குறைப்பு செய்யப்பட்டுள்ளது.15 லட்சத்துக்கு மேல் ஈட்டுபவர்களுக்கு 30% வரி இருந்தது, அது குறைக்கப்படவில்லை. மொத்தத்தில், புதிய வரிவிதிப்பு முறையால் யாருக்கு லாபம் என முடிவு சொல்லமுடியாது. தனிப்பட்ட தேவைகளை பொருத்து அது மாறும்.

பட மூலாதாரம், Getty Images
புதிய வரிவிதிப்பு, பழைய வரிவிதிப்பு- நடுத்தரக் குடும்பத்திற்கு எது சிறந்தது?
நீங்கள் எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க விரும்புகிறீர்களா இல்லையா என்பதை பொருத்துதான் எந்த வரிவிதிப்பு உங்களுக்கு சரியானது என முடிவு செய்யமுடியும். முக்கியமான விவரத்தை பலரும் கவனிக்க மறந்துவிடுவார்கள். பழைய வருமான வரி விதிப்பு திட்டத்தில், வீட்டுக்கடன், முதலீடு உள்ளிட்ட 100 வகை வரிவிலக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், புதிய வரி விதிப்புத் திட்டத்தில் அந்த 100 வரிவிலக்குகளில் 70 வரிவிலக்குகள் நீக்கப்பட்டுள்ளன. வெறும் 30 பிரிவுகளுக்கு மட்டுமே வரிக்குறைப்பு தரப்படும். அதுவும் எதிர்காலத்தில் இருக்காது என்கிறார்கள். இந்த புதிய வரிவிதிப்பால், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். ஆனால், உண்மையில், எதிர்கால வாழ்க்கைக்காக சேமிப்பதை மக்கள் குறைத்தால், அது பாதுகாப்பான முடிவாக இருக்காது.
சுமார் ஏழு லட்சம் ஆண்டு வருமானம் ஈட்டும் ஒரு நபர், புதிய வரிவிதிப்பின் படி, வரிவிலக்கிற்காக, சேமிப்புத் திட்டங்களில் பணம் போடவில்லை என்றால் சுமார் ரூ.37,000 வரை வரி செலுத்தவேண்டும். அவர், ரூ.1.50 லட்சம் சேமித்தால், ரூ.32,000 வரி செலுத்தவேண்டும். வெறும் ரூ.5,000 மிச்சமாகும் என்பதற்காக ரூ.1.50 லட்சம் வரை சேமிக்கவேண்டாம் என்ற எண்ணம் வரும்.
நடுத்தரக் குடும்பத்தினர் தற்போது என்ன விதத்தில் தங்களுக்கு சேமிப்பை உறுதிசெய்யலாம்?
முதலில் 400 கிராம் தங்கம்வரை சேமிக்கலாம். பிறகு நிரந்தர வைப்பு நிதியில் சேமிப்பது பாதுகாப்பானது. குறைந்த வட்டி கிடைத்தாலும், உங்களுக்கு பாதுகாப்பான முதலீடாக இது அமையும். எந்த வங்கியையும் கவிழ விடமாட்டேன் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியாக தெரிவித்திருக்கிறார். வங்கியில் நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்திருந்ததால், வங்கியின் பாண்டு பத்திரத்தில் முதலீடு செய்யலாம். ஆனால் பங்குகளில் முதலீடு செய்வதை யோசித்து செய்யுங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













