டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முறைகேடு - இருவர் கைது

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளியான நிலையில், 2017ம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை செய்துவந்த தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (சி.பி.சிஐடி) இருவர் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து சனிக்கிழமை செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், "2017-ல் நடந்த குரூப்-2ஏ தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்து அதிக மதிப்பெண்கள் எடுத்தது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொடுத்த புகாரின்பேரில் 31.01.2020 அன்று குற்றப்பிரிவு குற்றப்புலானாய்வுத் துறை வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் இன்று பிப்ரவரி 1-ம் தேதி கைது செய்யப்பட்ட இருவரின் பெயர் மற்றும் விவரங்களை அந்த செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
அவர்களில் முதல் நபர், 2017ல் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வில் தமது அண்ணன் சித்தாண்டி (காவலர்) மூலம் முறைகேடு செய்து 285 மதிப்பெண்கள் பெற்று 8-வது இடத்தில் தேர்ச்சி பெற்று காரைக்குடி மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும், சிவகங்கை மாவட்டம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த கா.வேல்முருகன் (30).
இரண்டாவது நபர், சித்தாண்டி மூலம் பணம் கொடுத்து முறைகேடு செய்து 276 மதிப்பெண்கள் பெற்று 21-வது இடத்தில் தேர்ச்சி பெற்று திருநெல்வேலி மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவை சேர்ந்த கே. ஜெயராணி (30). இவரது கணவர் முத்துவும் காவலர்தான்.
இத்துடன் குரூப்-4 தேர்வு தொடர்பாக 16 பேர் மற்றும் குரூப் 2ஏ தேர்வு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்கிறது அந்த செய்திக்குறிப்பு.
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளான ஜெயக்குமார் மற்றும் சித்தாண்டி (காவலர்) ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் தனிப்படைகள் ஈடுபட்டுள்ளன. குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை தொடர்கிறது என்கிறது அந்த செய்திக்குறிப்பு.
பிற செய்திகள்:
- ‘பூமி திருத்தி உண்’ - நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டிய ஆத்திசூடியின் பொருள் என்ன?
- நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிப்பு
- சார்ஸை விஞ்சிய கொரோனா - சீனா சென்றவர்களுக்கு அமெரிக்காவில் தடை - 10 தகவல்கள்
- ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியது பிரிட்டன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













