தாயாக மாறிய மகள்- ஒரு பெண்ணின் மனப்போராட்டம் #Mentalhealth

- எழுதியவர், தீபாஞ்சனா சர்கார்
- பதவி, பிபிசி ஹிந்தி சேவைக்காக
என் தாயார் நினைவுத் திறனை இழந்துவிட்டார் என்று 2017 டிசம்பரில் மருத்துவ ரீதியாகக் கண்டறிந்தனர். திருமணம் ஆகாமல், அவருடன் இருப்பவர் என்ற வகையில் அவரைக் கவனித்துக் கொள்ளும் முழு பொறுப்பும் எனக்கு தான் உள்ளது. அதிகம் எரிச்சல் கொள்பவராகவும், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது தொடர்ந்து சந்தேகம் கொண்டவராக இருப்பதும் என அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் தொடங்கியது.
குழந்தையாக இருந்தபோதே பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதால், பிறரை நம்புவது எப்போதுமே அவருக்குப் பிரச்சினையாக இருந்துள்ளது. அவருக்கு 74 வயதாக இருந்தபோது, முதன்முறையாக, தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் பற்றி என்னிடம் கூறினார். இப்போது அந்த நம்பிக்கையின்மை அதிகமாகவே வெளிப்படுகிறது. வீட்டு உதவியாளர்கள் இருக்கும்போது, தனக்கு அச்சுறுத்தல் இருப்பது போல தொடர்ந்து பதற்றமாகவே இருக்கிறார். அவர்களை நம்ப மறுக்கிறார். திடீரென என்ன பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என்பது பற்றி எங்களுக்கு எந்த யோசனையும் வரவில்லை.
அவருக்கு நோய் கண்டறியப்பட்டது மற்றும் அதற்குப் பிந்தைய சிகிச்சைகள் எல்லாமே எனக்கு வேலையை அதிகரித்துவிட்டன. 14 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை காலமாகிவிட்ட பிறகு, அவரை முழுமையாக நான் கவனித்துக் கொண்டாலும், உடல் ரீதியாக குணமற்றவரை, மன ஆரோக்கியம் இல்லாதவரை கவனித்துக் கொள்வது என்பது ஒட்டுமொத்தமாகவே மாறுபட்ட அனுபவத்தைத் தரக் கூடியது. நம்பிக்கை என்று வரும்போது, மூளை செயல்பாடு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

மன ஆரோக்கிய பிரச்சினை உள்ளவரை கவனித்துக் கொள்வது, பலவிதமான உணர்வுகளையும் அனுபவங்களையும் ஏற்படுத்துகிறது. வெறுப்பு நிலைக்கு ஆளான, அச்சம் தரக் கூடிய தருணங்கள் நிறைந்த, கவலையில் மூழ்கிய, என்ன செய்வதென இயலாத நிலை, கோபம், மனம் உடைந்து போதல், குற்ற உணர்வு என பல வகையான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், அன்பு, அனுதாபம், பாசம், மகிழ்ச்சி, மன நிறைவு என அவரிடம் சரணடையும் தருணங்களும் உள்ளன.
இதில் இருந்து மீண்டுவிட முடியாது என்ற உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. எனக்குள் இருந்த வன்முறை குணங்களை அது அகற்றிவிட்டது, என் வேலை அதிகமாகிவிட்டது. என் தாயிடம் நான் கோபம் கொண்டேன் - ``அவர் ஏன் இந்த நிலைக்கு ஆளானார்?'' என நினைப்பேன்.
மன ரீதியில் மாறுபட்ட நிலையில், எனக்கும், என் தாய்க்கும் பல விஷயங்களில் மாறுபாடுகள் உண்டு. தாயாரின் மன ஆரோக்கியம் மோசமடைந்து வரும் நிலையில், இந்த மாறுபாடுகளை நான் தீவிரமாகக் கருதிக் கொண்டிருக்க முடியாது, இந்தப் பிரச்சினை ஆண்டுக் கணக்கில் தீர்க்க முடியாததாக இருக்கும்.
ஆரம்ப மாதங்களில், கத்திமுனையில் நடப்பதைப் போலவே இருக்கும். நிச்சயமற்ற நிலை, கணிக்க முடியாத நிலை, வெறுப்பு நிலைகளை கையாள வேண்டியிருந்தது. நாங்கள் வாழும் வீட்டையே கூட நினைவுபடுத்த முடியாத அளவுக்கு தாயாரின் நினைவு குறைந்திருந்தது. வீட்டில் நிர்வாணமாக நடந்து சென்ற, தினமும் நூறு முறைக்கு மேல் ஆடையை கழற்றிவிட்டு செல்லும் நாட்கள் இருந்தது உண்டு.
கவனித்துக் கொள்பவர் என்பதைத் தாண்டி, ஒரு மகள் என்ற முறையில் எனக்கு அது பெரிய போராட்டமாக இருந்தது. என் உணர்வுகளை துண்டித்துவிட வேண்டும் என்று பலரும் அறிவுரை கூறியபோதிலும், மனதளவில் அவரிடம் இருந்து என்னால் பிரிந்து போய்விட முடியவில்லை. இதுபோன்ற நிலையில் அவரை என்னால் பார்க்க முடியவில்லை.

14 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட என் தந்தையின் வருகைக்காக ஒவ்வொரு நாள் மாலையிலும் அவர் காத்திருக்கும் போது, என்ன செய்வது என தெரியாமல் பல நாட்கள் அவரிடம் கெஞ்சியிருக்கிறேன். ஒரு குழந்தையைப் போல அழுது கொண்டு, என் தந்தையின் பெயரைச் சொல்லி அழைப்பார், அவரிடம் தன்னை அழைத்துச் சென்று சந்திக்க வைக்குமாறு என்னிடம் கேட்பார். என்ன செய்வது அல்லது என்ன சொல்வது என்று எனக்குத் தோன்றாது.
இதுபோன்ற சூழ்நிலைகளை எப்படிக் கையாள வேண்டும் என்று, நினைவு இழந்தவர்களுக்கு சிகிச்சை தரக் கூடியவர்கள் எனக்கு ஆலோசனை கூறும் வரையில், என்ன செய்வதென தெரியாமல் கஷ்டப்பட்டேன். அதுபோன்ற சூழ்நிலையில் என் தாயார் தூங்கிவிட வேண்டும் என பிரார்த்தனை செய்வது மட்டுமே என்னால் ஆகக் கூடிய காரியமாக இருந்தது. மறுநாள் புதிய நாளாக இருக்கும், எதுவுமே அவருக்கு நினைவு இருக்காது என்ற நம்பிக்கை.
பல நாட்கள் இரவில் எழுந்து கொண்டு, இல்லாத விஷயத்தை இருப்பது போல பேசுவார். அந்த நாட்கள் அச்சம் தருபவையாக இருந்தன. ஆனால் நான் அமைதிப்படுத்துவேன். களைத்து போன பிறகு சீக்கிரம் தூங்கிவிடுவார்.
என் தாய் வேலை பார்த்தவர், 22 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார். அது அவருக்கு முற்றிலுமாக நினைவில் இல்லை. அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்று அவர் விரும்பிய நாட்கள் உண்டு. நீண்டகாலத்துக்கு முன்பே ஓய்வு பெற்றுவிட்டீர்கள், இப்போது ஓய்வூதியம் வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் சண்டைக்கு வந்த நாட்கள் உண்டு.

அவரைக் குளிப்பாட்டி, சுத்தம் செய்ய வேண்டும். முழுக்க மறதியில் வாழ்ந்தார். அவருடைய மனதில் பல விஷயங்கள் கோர்வையாக இல்லை. என் தாயார் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறார், நினைவை இழக்கிறார், தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களும் நினைவில் இல்லை என்பதுடன், என் தாயார் இனி எதையும் எதிர்பார்க்க மாட்டார் என்ற உண்மையை ஏற்றுக் கொள்வது எனக்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது. நம்பிக்கைகள், நினைவுகள், பாசம், சார்ந்திருக்கும் தன்மை எல்லாமே என் கையை மீறிப் போய்க் கொண்டிருந்தன, என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை.
அது விவரிக்க முடியாத அளவுக்கு கையாலாகத சூழ்நிலையாகிவிட்டது. ஆனால் தனிப்பட்ட நபர்களாக நாம் எவ்வளவு சிறியவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். எனவே, உண்மையை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தேன். ஒரு நாள் முழுக்க தூங்க வேண்டும் என்றோ அல்லது உண்மையின் கஷ்டத்தில் இருந்து விடுபட்டு ஓடிப் போய்விட வேண்டும் என்று ஓராண்டுக்கும் மேலாக நான் நினைத்தது உண்டு.
என் தாயாரை கவனித்துக் கொள்வதற்கு உடலில் பலம் சேர்ப்பதற்காக என் அறையில் நான் ஓய்வெடுக்க முயற்சிக்கும் போது கூட, நான் ஏதோ மாந்த்ரீகம் செய்வதாக என் தாயார் நினைத்த போதெல்லாம், அந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று புரியாமல், ஆறுதல் சொல்ல ஆளில்லாமல் கட்டுப்படுத்த முடியாமல் நான் அழுத நாட்கள் உண்டு.
கவனித்துக் கொள்வது என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல், கஷ்டமான வேலை. என்னைப் பொருத்த வரையில், அது ஆன்மிக தூண்டுதலைத் தரும் பயணமாக நான் கருதிக் கொண்டேன். தவிர்க்க முடியாததை ஏற்றுக் கொள்வது, வாழ்க்கையின் இயல்பான நிகழ்வுகளை ஏற்றுக் கொள்வது, அதை எதிர்த்துப் போராடாமல் ஏற்பது, ஒவ்வொரு விநாடியின் நிறைவு மற்றும் மறு விநாடியின் பிறப்பை ஏற்றுக் கொள்வது என பலவற்றையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அது எனக்குத் தந்திருக்கிறது.
அமைதியின் முக்கியத்துவத்தை அது எனக்குக் கற்பித்துள்ளது. தன்னை யார் என்று அறியாமல், தன் ஆடைகளை அழுக்காக்கிக் கொண்டிருப்பவரை கையாளும் போது நானாகவே ``இருக்க'' அது எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது. ஒருவருடைய கண்களைப் பார்த்து, ஆதரவாக இருப்பதாக உறுதி அளிக்கும் அழகான விஷயத்தைக் கற்பித்துள்ளது.
கைகளைப் பிடித்துக் கொண்டு, புன்னகை செய்து, எதுவும் பேசாமல் இருப்பது எந்த அளவுக்கு குணப்படுத்தலை அளிக்கும் என்பதை ஒருவேளை நான் அனுபவிக்காமல் இருக்கலாம். இந்தப் பயணத்தின் போது, நாட்கணக்கில் குற்ற உணர்ச்சியில் நான் அலைபாய்ந்து கொண்டிருந்தபோது,

அந்தக் குற்ற உணர்ச்சிகளைத் தாண்டி எழுந்து நிற்பதற்கான பலமும் தைரியமும் எனக்குக் கிடைத்துள்ளன. இந்த அனுபவம் இல்லாமல் போயிருந்தால், எதிர்பார்ப்புகளைக் கைவிட்டு, ஒருவரை நிபந்தனை ஏதுமின்றி ஏற்றுக் கொள்வது எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதை அறியாமல் போயிருப்பேன். இது ஒரு நாளில் நடந்த விஷயம் அல்ல. இது மிகவும் கஷ்டமானது. ஆனால், உணர்வுகளில் இருந்து விடுபடக் கூடிய பெரிய அனுபவம் இது.
உடல் அளவில் உங்கள் தாயார் உங்களுடன் இருக்கிறார், ஆனால் உணர்வு ரீதியாக, மன ரீதியாக உங்களுடன் இல்லை என்பதை ஏற்றுக் கொள்வது எளிதான விஷயம் அல்ல. உடல் ரீதியில் அவர் உங்களுடன் இருக்கிறார் என்ற நினைப்பே நிறைய ஆறுதலைத் தரும். ஏனெனில் ஒவ்வொரு நாள் மாலையிலும் வேலை முடிந்து நீங்கள் அவருக்காக வீட்டுக்குத் திரும்பியாக வேண்டும்.
எனக்கு மீன் பிடிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, எனக்காக கொஞ்சம் எடுத்து வைத்திருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் இருந்து நான் வீடு திரும்ப தாமதம் ஆகும் போது, என்னுடன் சேர்ந்து சாப்பிட அவர் காத்திருப்பதைப் பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படும். நான் வீட்டுக்கு சீக்கிரம் வரும் போது என்னைப் பார்த்து என் தாய் புன்னகை செய்வதைப் பார்க்கும் போது ஆனந்தம் ஏற்படும்.

அவருக்காக நான் விசேஷமாக தயாரித்த உணவை அவர் விரும்பி சாப்பிடும் போது, நான் எவ்வளவு களைப்பாக இருந்தாலும், அது எனக்கு இரட்டிப்பு சக்தி தருவதாக இருக்கும். பல மாதங்கள் கழித்து ஒரு புத்தகத்தை அவர் எடுத்து படிக்க முயற்சிப்பதைப் பார்க்கும் போதோ அல்லது தினமும் மாலையில் தொலைக்காட்சி பார்க்க வழக்கமான பணிகளைப் போல வரும் போதே எனக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.
ஏதாவது விஷயத்தில் தன்னுடைய அதிருப்தியை தெளிவாக அவர் தெரிவித்தால் கூட இப்போதெல்லாம் உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தன் எண்ணத்தை வெளிப்படுத்த அவரால் முடிகிறது என்பதைக் காண்பதே இந்த மகிழ்ச்சிக்குக் காரணமாக உள்ளது.
என்னைப் பொருத்த வரை கவனித்துக் கொள்வது என்பது வீட்டுப் பணிகளில் எனது தனிப்பட்ட பயணமாக இருந்து வருகிறது. நான் இதற்காகப் போராடியிருக்கிறேன், கீழே விழுந்திருக்கிறேன், செய்வதறியாமல் திகைத்து நின்றிருக்கிறேன், குற்ற உணர்வாக இருந்திருக்கிறேன், வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது, முழுக்க குழப்பம் அடைந்திருக்கிறேன். இருந்தபோதிலும், நண்பர்கள், நலம் விரும்பிகள், குடும்பத்தில் சற்று தள்ளிய உறவுகள் என பல தரப்பினரிடம் இருந்தும் எனக்கு மன ரீதியிலான ஆதரவும், பாதுகாப்பும் கிடைத்துள்ளது.

ஆனால் கவனித்துக் கொள்வது என்பது என்னைப் பொருத்த வரையில், ஆழமான உணர்வுகளுடன் கூடிய பயணமாக உள்ளது. இந்த அனுபவம் எனக்கு ஏற்படாமல் போயிருந்தால், வாழ்க்கையில் பல விஷயங்களை நான் ஒருபோதும் புரிந்து கொள்ளாமலே போயிருக்கக் கூடும். நீங்கள் அக்கறை காட்டும் நபருடன் இயைந்து செயல்படுவது என்பது கடினமானதாகவும், வெறுப்பு ஏற்படுத்துவதாகவும் இருந்தாலும், அது உங்களை அமைதிப்படுத்தி, வேகத்தை குறைக்கச் செய்கிறது, சற்று இடைவெளி விட்டு, நீங்கள் ஒருபோதும் கவனித்திராத விஷயங்களை கவனிப்பதற்கான வாய்ப்பு தருவதாக இருக்கிறது.
நமது பரபரப்பான தினசரி வாழ்க்கையில் காட்டாத காத்திருத்தலை, எப்படி செய்வது என்பதை கற்றுக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிந்து கொண்டேன். காத்திருப்பதற்கு ஏற்ப நமது சமூக சூழலில் வளரவில்லை என்பதால், அவ்வாறு காத்திருப்பது எளிதானது அல்ல என்பதை நான் உணர்ந்து கொண்டேன். ஆரம்பத்தில் அவர் கற்பனையில் பேசும் போது, அருகில் இருக்கவே பயமாக இருக்கும். ஆனால் ஒரு நாள் அவருடைய கற்பனை உலகில் நாமும் சேர்ந்து பயணிப்பது என நான் முடிவு செய்தேன். அவருடைய உலகம் யதார்த்தமற்றது என்று முத்திரை குத்துவதற்கு நான் யார்?

பட மூலாதாரம், BBC
கவனித்துக் கொள்பவராக நான் மேற்கொண்ட பயணம், எந்த அளவுக்கு குணப்படுத்தல் இல்லாதவராக நான் இருந்திருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தியது, என்னை நானே எவ்வளவு குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அது எனக்கு உணர்த்தியது. காயங்களின் மீது நின்று, நேருக்கு நேராக வரும் போது தான் இந்த குணப்படுத்தல் நடைபெறுகிறது.
ரத்தம் வரும், ஆனால், ரத்தம் வந்த பிறகு தான் குணமாக்கல் நடைபெறும். கவனித்துக் கொள்பவர் என்ற இந்தப் பயணம் எனக்குக் கிடைத்த பரிசு என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் என் தாயார் அதற்கான ஒரு கருவியாக உள்ளார், என் வாழ்வில் அற்புதமான பாடங்களைத் தரும் கருவியாக இருக்கிறார். நான் களைப்பாகி இருக்கலாம். ஆனால் இன்றைக்கு நான் நல்ல மனிதராக இருக்கிறேன். அதிக விழிப்புணர்வு, சகிப்புத்தன்மை, பலம், தைரியம், ஏற்றுக் கொள்ளும் பக்குவம், கனிவு, பச்சாதாபம் கொண்டவராகவும், தயக்கங்கள் மற்றும் அனுமானங்கள் குறைந்தவராகவும் இருக்கிறேன்.
இவையெல்லாம் வாழ்க்கையின் பரிசுகள் என கருதப்படுமானால், ஆமாம், இந்தப் பயணம் நிச்சயமாக வெகுமதி தருவதாக, நிறைவைத் தருவதாக அமைந்துள்ளது. இதற்காக என் முழு நேரத்தையும் செலவிட்டாலும், நான் கற்பனை செய்ய முடியாத வகையில் அது நிறைவைத் தருவதாக உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












