கீழடி தமிழின் தொன்மை என்றால், எதிர்காலம் எதிலே இருக்கிறது? தொழில் நுட்பத்தில் தமிழ் தடம் பதிப்பது எப்படி?

பட மூலாதாரம், Niyas Ahmed
- எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழகத்தின் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. தமிழின் தொன்மையை ஓரிரு நூற்றாண்டுகள் பின்னோக்கி எடுத்துச் சென்ற இந்த ஆய்வு முடிவுகள் குறித்த பேச்சு அனைத்து தளங்களையும் ஆக்கிரமித்தன.
தமிழின் பழங்காலம் குறித்த தகவல்கள் எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு எதிர்காலத்தில் தமிழ் மொழியின் இருப்பு, பயன்பாடு, வளர்ச்சி, பரிமாண மாற்றங்கள் குறித்து முன்கூட்டி திட்டமிட்டு செயலாற்றுவதும் முக்கியம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
ஒரு மொழியின் எதிர்காலம், அது எந்த அளவுக்கு தன்னை தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்கிறது என்பதை பொறுத்தே அமையும் என்பது பல துறை வல்லுநர்கள் கருத்து.
அந்த வகையில் தற்போதுள்ள தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு தமிழ் மொழி தன்னை தகவமைத்து கொண்டுள்ளதா? ஆங்கிலம் போன்ற மொழிகளைப் போல தமிழில்தொழில் நுட்ப சேவைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணமும், அதற்கான தீர்வும் என்ன? தமிழ் மொழியின் வளர்ச்சியில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பங்கும், முக்கியத்துவமும் என்ன? தமிழ் மொழியின் எதிர்காலத்தை கட்டமைப்பதில் தமிழ் இணைய மாநாடுகள் எந்த அளவுக்கு உதவுகின்றன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு துறைசார்ந்த வல்லுநர்களின் கருத்தைக் கேட்டது பிபிசி தமிழ்.
தமிழ் மொழியை தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்டுக்கொள்ளவில்லையா?

பட மூலாதாரம், Getty Images
கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளியிடும் மென்பொருட்கள் மற்றும் வன்பொருட்கள் முதலில் ஆங்கிலத்திலும், பின்பு சீன, ஜப்பானிய, பிரெஞ்சு மொழிகளில் வெளிவருவது வழக்கம். ஆனால், அதுபோன்ற சேவைகள் தமிழ் மொழியில் வெளிவருவதற்கு பல மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை ஆகின்றன.
இந்த தாமதத்திற்கான காரணம் என்ன? அதை களைவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? போன்ற கேள்விகளை பன்னாட்டு தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியவரும், மொழி ஆர்வலருமான அண்ணாகண்ணனிடம் கேட்டோம். "தமிழின் தொன்மையை தொல்லியல் ஆய்வுகள் வெளிக்கொணருவதை போன்று, தமிழின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் தொழில் நுட்பத்தின் உதவி தவிர்க்க முடியாதது என்பதை நாம் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்.
கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனங்களின் பிடியில் மொழிகளின் தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கிறது. மேற்கண்ட நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கு மட்டுமின்றி, மொழி சார்ந்த ஆராய்ச்சிகளுக்காகவும் கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கின்றன. பெரும்பாலும் வணிக நோக்கத்தில் செயல்படும் இந்த நிறுவனங்கள் எந்த மொழிகளில் தங்களுக்கு சந்தை உள்ளதோ அதற்கு முன்னுரிமை அளிக்கின்றன" என்று கூறுகிறார்.


இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையில் உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை இந்தியா வகிக்கும் நிலையில், அதில் மாநில வாரியாக பார்க்கும்போது தமிழ்நாடு முதல் இடத்தை வகிப்பதாக ஐஏஎம்ஏஐ எனும் தொலைத்தொடர்பு ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இவ்வளவு இணையதள பயன்பாட்டாளர்கள் இருந்தும் அதற்கு ஈடான கவனத்தை தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழ் மொழியில் காட்டாமல் இருப்பதற்கான காரணம் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாகண்ணன், "தங்களது பல்வேறு சேவைகளை ஒரு குறிப்பிட்ட மொழியில் அறிமுகப்படுத்துவதற்கு இரண்டு முக்கிய காரணிகளை அடிப்படையாக கொண்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் முடிவெடுக்கின்றன. ஒன்று, குறிப்பிட்ட மொழியை பேசும் பகுதியைச் சேர்ந்த இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை. இந்த இடத்தில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை பற்றி மட்டுமின்றி, அந்த குறிப்பிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது மொழியில் தொழில்நுட்பங்களை எவ்வளவு நுகர்கிறார்கள் என்றும் ஆராயப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இரண்டாவதாக, ஒரு குறிப்பிட்ட மொழியின் இலக்கணம், ஆங்கிலத்துக்கு இணையான சொற்கள் மற்றும் தரவுகளின் இருப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டே ஒரு தொழில்நுட்பம் புதியதொரு மொழிக்கு விரிவுபடுத்தப்படுகிறது. அந்த வகையில், ஒப்பீட்டளவில் பல்வேறு இலக்கண விதிகளும், பல்வேறுபட்ட வட்டார வழக்கும் கொண்ட தமிழ் மொழியில், பகுப்பாய்வுக்கு வேண்டிய தரவுகளின் எண்ணிக்கை தேவையான அளவு இல்லாததினாலேயே பெரும்பாலும் தாமதம் ஏற்படுகிறது. மேற்கண்ட பிரச்சனைகளை களையும் பட்சத்தில் மென்மேலும் வேகமாக பன்னாட்டு நிறுவனங்களினால் சேவைகளை தமிழ் மொழியில் அறிமுகப்படுத்த முடியும்" என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
அரசுகளின் பங்கு அளவிடற்கரியது
அடிப்படை வசதிகள் முதல் கல்வி வரை, உள்கட்டமைப்பு முதல் வேலைவாய்ப்பு வரை எத்துறை நோக்கிலும் அரசாங்கங்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில், தமிழ் மொழியின் எதிர்காலத்தை செதுக்குவதில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு அளவிடற்கரியது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
"கடந்த 2010ஆம் ஆண்டு எனது முனைவர் பட்ட ஆய்வுக்காக தமிழக அரசுத்துறைகளுக்கு சொந்தமான சுமார் 436 இணையதளங்களை ஆய்வு செய்ததில், அவற்றில் வெறும் ஆறு சதவீத இணையதளங்களே தமிழ் மொழியிலோ அல்லது ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலோ செயல்பட்டு வருவதை அறிந்தபோது அதிர்ந்துவிட்டேன். கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழக அரசு தனது இணையதளங்களில் தமிழ் மொழிக்கு போதிய முக்கியத்துவம் கொடுத்துவிட்டதை போன்று எனக்கு தோன்றவில்லை. இன்னமும் கூட பெரும்பாலான அரசு ஆவணங்கள் படக்கோப்பாகவே இணையத்தில் பதிவேற்றப்படுவதால், குறிப்பு வார்த்தைகளை பயன்படுத்தி தேடுபொறியில் அவற்றை கண்டறிய முடியாத நிலையே தொடர்கிறது. எனவே, தமிழ் மொழி வளர்ச்சியில் தமிழக அரசின் பங்களிப்பு இங்கிருந்தே தொடங்க வேண்டும்.
மேலும், தமிழ் மொழியின் எதிர்காலத்தை செதுக்கும் பொறுப்புள்ள வருங்காலத் தலைமுறையினருக்கு தற்போதுள்ள பயனற்ற கல்விமுறையை விடுத்து, வர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி போன்ற அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எளிமையாக, அதே சமயத்தில் ஆழமாக பாடங்களை கற்பிக்கும் சூழலை உருவாக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட மூலாதாரம், Facebook
மேலும், சமூகத்தின் பல நிலைகளிலும் தமிழ் மொழியின் பயன்பாடு அதிகரிப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். அதே சூழ்நிலையில், பெரிதும் ஆராயப்படாத தமிழ் இசை, பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மரபணு ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். மருத்துவ அறிவியல் தொழில்நுட்பங்கள் வாயிலாகத் தமிழ் முன்னோர்களின் திறன்களை மீட்டெடுக்க முயல வேண்டும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
தமிழ் இருக்கைகள் என்ன செய்கின்றன?
'தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் தமிழ்நாட்டிலேயே தமிழ் மொழியின் பயன்பாடு பல்வேறு நிலைகளிலும் வீழ்ச்சியை நோக்கி செல்வதாக வல்லுநர்கள் எச்சரிக்கும் நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் நிதி திரட்டியும், உள்ளூர் அரசாங்கங்களின் ஆதரவுடனும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வரும்/ செயல்படவுள்ள தமிழ் இருக்கைகள்/ தமிழ்த் துறைகள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக என்னதான் செய்கின்றன/ செய்யப்போகின்றன' என்று பொதுவாக எழுப்பப்படும் கேள்வியை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் வாசு அரங்கநாதனிடம் முன்வைத்தோம்.
"தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழங்கள் அல்லது கல்லூரிகளுடன் அமெரிக்கா போன்ற அயல்நாடுகளில் செயல்படும் தமிழ் இருக்கைகள்/ தமிழ்த்துறைகள் மேற்கொண்டு வரும் பணிகளை அப்படியே ஒப்பிட முடியாது. நாங்கள் மொழியை கற்பிப்பதை விட, அதுகுறித்த ஆராய்ச்சியிலேயே அதிக கவனம் செலுத்துகிறோம். கீழடி போன்ற இடங்களுக்கு சென்றால்தான் தமிழின், தமிழரின் பழங்காலம் குறித்து அறிந்துகொள்ள முடியும் என்று கிடையாது.
தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் 12 தொகுதிகளாக தொகுக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ளவர்கள் எளிதில் கையாளும் நிலை உள்ளது. எனவே, இதுபோன்ற ஆதாரங்களை பயன்படுத்தியும், தேவைப்படும் பட்சத்தில் தமிழகத்திற்கு நேரடியாக சென்றும் நாங்கள் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகிறோம்" என்று கூறும் வாசு 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் மேற்படிப்பு படிப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்று, பின்பு அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.


தமிழ் இருக்கையோ அல்லது தமிழ்த் துறையோ அது பரவலாக புழங்கும் இடத்தில் இல்லாமல் வெளிநாடுகளில் செயல்படுவதால் கிடைக்கும் பலன் என்னவென்று அவரிடம் கேட்டபோது, "தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையோடு சில மற்ற மொழித் துறைகள் மட்டும்தான் இருக்கும். ஆனால், பென்சில்வேனியா போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் தெற்காசிய மொழித் துறையின் கீழ் மட்டும் தமிழோடு, இந்தி, உருது, தெலுங்கு, வங்க மொழி, பஞ்சாபி, சமஸ்கிருதம், மலையாளம் மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகள் உள்ளன. அதே போன்று ஆப்பிரிக்கா உள்ளிட்ட மற்ற பகுதிகளில் இருக்கும் மொழிகளும் இங்கே ஒரே இடத்தில் கற்பிக்கப்படுவதுடன், ஆராய்ச்சிகளும் நடப்பதால், ஏராளமான பலன்கள் உள்ளன.
உதாரணமாக, தமிழகத்தில் கண்டெடுக்கப்படும் ஒரு கல்வெட்டில் சீனாவிலுள்ள ஓர் அரசருடன் நடந்த வாணிபம் குறித்து எழுதியுள்ளதாக வைத்துக்கொள்வோம். நாங்கள் அந்த கல்வெட்டிலுள்ள விவரங்களை முடிந்த அளவுக்கு பகுப்பாய்வு செய்துவிட்டு, எங்களது பல்கலைக்கழகத்திலேயே அமைந்துள்ள சீன மொழித்துறை ஆய்வாளர்களின் உதவியுடன், அது குறித்த குறிப்புகள் சீனாவில் ஏதாவது உள்ளதா என்று மேலதிக ஆய்வில் ஈடுபடுவோம். இம்முறையை பயன்படுத்தி தமிழகத்திற்கும் மற்ற நாடுகளுக்கும், தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் உள்ள ஏராளமான தொடர்புகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளோம்" என்று வாசு கூறுகிறார்.
தமிழின் வளர்ச்சிக்கு வெளிநாடுகளால் என்ன செய்ய முடியும்?

பட மூலாதாரம், Getty Images
"தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனங்களாக விளங்கும் கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், ஆப்பிள் உள்ளிட்டவை தங்களது பல்வேறு சேவைகளை தமிழில் அமல்படுத்த முனைகின்றன. ஆனால், தொழில்நுட்பத்துக்கு அடிப்படையாக விளங்கும் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் சொற்களையும், வட்டார மொழி வேறுபாடுகளையும், ஒலிப்புகளையும் தொகுத்து பெருந்தரவை உருவாக்கும் பணி சவாலானதாக உள்ளதால் இதுபோன்ற திட்டங்கள் தாமதமாகின்றன.
அதேவேளை, தமிழ் மொழியில் எழுத்து வழக்கிலும், பேச்சு வழக்கிலும் உள்ள சொற்றொடர்களையும் மொழிப் பயன்பாட்டையும் முறைப்படி தொகுக்கும் பணிகளை உலகமெங்கும் பல்கலைக்கழங்கள் முன்னெடுத்துள்ளன. இந்த வகையில், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான தமிழ் மொழி சார்ந்த வளத்தையும், வழிகாட்டுதலையும் வெளிநாட்டு பல்கலைக்கழங்களால் வழங்க முடியும். இந்த இரண்டு தரப்பினரையும் இணைக்கும் முயற்சிகளை யார் முன்னெடுப்பது என்ற சிக்கலுக்கு தெளிவு பிறந்தால் புதிய வழி பிறக்கும்" என்று கூறுகிறார் வாசு.
தமிழை புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கும், ஏற்கனவே தெரிந்தவர்களுக்கும் உதவும் பல்வேறு இணையப் பாடங்களை, விளையாட்டுகளை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை உருவாக்கியுள்ளது.

பட மூலாதாரம், Facebook
தமிழில் பெரும் ஆர்வமும், அறிவும் படைத்த தமிழர்கள், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். பல லட்சங்களை தாண்டும் புலம்பெயர் தமிழர்களை, தமிழின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைத்து செயல்பட வைப்பதற்கான எவ்வித அதிகாரப்பூர்வ அமைப்பும் இல்லை. அதாவது, தமிழகம், இலங்கை ஆகிய இடங்களில் இருக்கும் தமிழர்கள் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்களின் ஆற்றலை பயன்படுத்துவதற்கான செயல்திட்டம் அரசு - தனியார் பங்களிப்பில் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
தமிழில் ஆய்வு மேற்கொள்ளும் வடஇந்தியர்கள்
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களில் தமிழ் மொழியில், மேற்படிப்பு படிப்பதற்கும், ஆய்வு மேற்கொள்வதற்கும், கற்பிப்பதற்கும் போதிய வசதிகள் இருந்தும் அதை பயன்படுத்துக்கொள்வதில் மக்களிடையே பெரிய அளவில் ஆர்வமில்லை என்ற குற்றச்சாட்டு வெகுகாலமாக வைக்கப்பட்டு வருகிறது.
இந்த கூற்றின் உண்மைத்தன்மை குறித்து பதிலளித்த பேராசிரியர் வாசு, "தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்க அரசு மிகப் பெரும் தொகையை முதலீடு செய்கிறது. இதன்படி, தமிழில் மேற்படிப்பு படிப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் விருப்பமுள்ளவர்கள் கிட்டத்தட்ட படிப்பதற்கான முழு நிதியுதவியை பெறுவதற்கு பல்வேறு திட்டங்கள் உள்ளன. மேலும், வசிப்பிடம், உணவு போன்றவற்றிற்கான பணத்தையும் பகுதிநேரமாக வேலைசெய்வது சம்பாதிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தகுதிவாய்ந்த ஆய்வு மாணவர்கள் அதே பல்கலைக்கழகத்தில் முழுநேர விரிவுரையாளராக பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
எனினும், தமிழர்களிடையே இது குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், அமெரிக்க பல்கலைக்கழங்களிலுள்ள தமிழ் மொழித்துறைகள் மூடப்படும் செய்திகள் அவ்வப்போது வருகின்றன. இதுபோன்ற சர்வதேச வாய்ப்புகளை தமிழர்கள் கட்டாயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று விவரிக்கும் வாசு, சமீபகாலமாக வட இந்தியாவை சேர்ந்த தமிழரல்லாதோர் அமெரிக்க பல்கலைக்கழங்களில் தமிழ் சார்ந்த ஆய்வு பணிகளில் ஈடுபடுவது இயல்பான ஒன்றாக மாறியுள்ளதாக கூறுகிறார்.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு அரசுகள் தங்களது நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களில் செயல்படும் தமிழ் உள்ளிட்ட மொழித்துறைகளுக்கான நிதியுதவியை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம் என்பதால் உலகின் முக்கிய பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கான இருக்கையை தொடங்குவதே சாலச்சிறந்தது என்று வாசு வலியுறுத்துகிறார்.
தமிழ் இணைய மாநாடு
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்ற 'உத்தமம்' சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ் இணைய மாநாடு, இந்தாண்டு கடந்த செப்டம்பர் 20-22 தேதிகளில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து முடிந்துள்ளது.
'தானியங்கி கருவிகளில் தமிழ் மொழியின் பயன்பாடு' என்ற கருத்துருவை மையமாக கொண்டு நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அமெரிக்கா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தமிழ்க் கணிமை வல்லுநர்கள், கட்டுரையாளர்கள் மட்டுமின்றி அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஓர் ஆண்டு தமிழகத்திலும், மற்றொரு ஆண்டு தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளிலும் சுழற்சி முறையில் இதுவரை 18 தமிழ் இணைய மாநாடுகள் நடந்து முடிந்துள்ளன.
இந்நிலையில், கடந்த மாதம் நடந்து முடிந்துள்ள தமிழ் இணைய மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கியப் பொருள்கள் மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன? என்று உத்தமம் அமைப்பின் தலைவரான சிங்கப்பூரை சேர்ந்த தொழில்நுட்பவியலாளர் மணியனிடம் முன்வைத்தோம்.
"தமிழ்க் கணிமை வளர்ச்சி என்பது தமிழின் வளர்ச்சி என்னும் புரிதலுடன் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் உத்தமத்துடன், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் இணையக் கழகம், தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் மைசூரிலுள்ள மத்திய மொழிகள் நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்பட்டன.


மனிதர்களை போன்று கணினிகளும் மொழிகளை ஆராய்ந்து செயல்படும் இந்த காலக்கட்டத்தில், அதில் தமிழ் மொழியின் நிகழ்கால நிலையையும், எதிர்காலத்திற்குரிய முன்னெடுப்புகளையும் விளக்கும் வகையில் பலர் கட்டுரைகளை படைத்திருந்தனர்.
குறிப்பாக, தமிழ் மொழிக்கான சொற் திருத்தி, ஒற்றுப்பிழை சரிபார்த்தல், தமிழில் பயன்படுத்தும் கிரந்தப் பயன்பாட்டை நீக்கித் தமிழ்ச்சொற்களை மட்டுமே பயன்படுத்தும் முறை, உரையிலிருந்து ஒலி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் இந்த மாநாட்டில் படைக்கப்பட்டன" என்று அவர் கூறுகிறார்.
இணைய உள்ளடக்கத்தில் பின்தங்கும் தமிழ்
நடந்து முடிந்த உத்தமம் மாநாட்டில் பேசிய பேராசிரியர் ஒருவர், ஒட்டுமொத்த இணைய உள்ளடக்கத்தில் தமிழ் மொழியின் பங்கு வெறும் 0.15 சதவீதம் மட்டுமே என்று சொன்னார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மணியம், "உலகளவில் தமிழின் உள்ளடக்கம் இவ்வளவு குறைவாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. தொழில் நுட்பத்தில் தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரிப்பதில் உள்ளடக்கங்களின் பங்கு தவிர்க்க முடியாதது. ஒரு மொழிக்கு இணையத்தில் எவ்வளவு உள்ளடக்கம் இருக்கிறதோ அது அதன் எதிர்கால வளர்ச்சியின் அனைத்து படிநிலைகளிலும் மிகவும் பயன்படும். எனவே, தமிழகத்திலுள்ள தன்னார்வலர்கள் மட்டுமின்றி கல்லூரிகள், அமைப்புகளுடன் இணைந்து தமிழ் மொழியில் உள்ளடக்கங்களை அதிகரிக்கும் பணியில் ஈடுபட இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்" என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Facebook
ஓர் இணையதள முகவரியின் இறுதியில் .com அல்லது .in (முதல் நிலை ஆள்களப் பெயர்கள்) என்று முடிவுறுவதை போன்று இந்தியாவிலுள்ள முக்கிய மொழிகளின் பயன்பாட்டை இணையதளத்தில் அதிகரிக்கும் பொருட்டு '.இந்தியா' என்ற புதிய முகவரி வடிவம் தமிழ் உள்பட பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழில் அவற்றின் பயன்பாடு தொடங்கவில்லை என்று கூறுகிறார் மணியம்.
"தமிழ் மொழியைப் பொறுத்தவரை, இந்த '.இந்தியா' முகவரியை அங்கீகரித்து அது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு அரசிதழிலில் வெளியிட்டால்தான் இந்த சேவை தமிழ் மொழியில் அறிமுகமாகும். அதைவிட முக்கியமாக, ஒரு முழு இணையதள முகவரியையும் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பதிவு செய்யும் வாய்ப்பை உலக இணையதள முகவரி ஒழுங்கமைப்பு நிறுவனமான ஐகான் விரைவில் வழங்க உள்ளது. இந்த வாய்ப்பை கண்டிப்பாக தமிழ் பயன்படுத்த வேண்டும். அதற்கு முதற் கட்டமாக, தனியே குழு ஒன்று அமைக்கப்பட்டு விரிவான அறிக்கை பெறப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு அதுகுறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியாக வேண்டும். பிறகே முறைப்படி ஐகான் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்க முடியும்" என்று கூறும் மணியம் இதுகுறித்தும் தமிழ் விசைப்பலகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும், உத்தமம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக அரசுக்கு முறைப்படி கோரிக்கையாக அனுப்பியுள்ளதாக கூறுகிறார்.
ஒருவேளை இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் பட்சத்தில்,உதாரணமாக tn.gov.in என்று ஆங்கிலத்தில் இருக்கும் இணையதள முகவரியை 'தமிழ்நாடு.அரசு' என்று முற்றிலும் தமிழ் மொழியிலேயே பெறும் வாய்ப்பு ஏற்படும். அதே போன்று, மின்னஞ்சல் முகவரிகளையும் தமிழ் மொழியிலேயே பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
தொழில் நுட்பத்தில் தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஒவ்வொரு தனிநபரும் தங்களது மொழி சார்ந்த உரிமையின் அவசியத்தையும், தேவையையும் உணர்வதுடன், மற்றவரிடத்து எதிர்பார்க்கும் மாற்றத்தை தன்னளவில் தொடங்குவதும் மிகவும் முக்கியம் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
பிறசெய்திகள்:
- சிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை
- "நான் கையேந்திய தருணம் யாருக்கும் வரக்கூடாது" திருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்றும் சுதா
- இந்தியா, சீனா இடையேயான உறவில் இனி என்னவெல்லாம் நேரலாம்? - விரிவான அலசல்
- இந்தியாவை சேர்ந்த அபிஜித் பேனர்ஜிக்கு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













