காஷ்மீர் விவகாரம்: ஆகஸ்ட் 5 - “இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள்” - வல்லுநர் விவரிக்கிறார்

காஷ்மீர் விவகாரம்: ஆகஸ்ட் 5 - இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் - வல்லுநர் விவரிக்கிறார்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ராதா குமார்
    • பதவி, காஷ்மீர் விவகார வல்லுநர்

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றியது மற்றும் குடியரசுத் தலைவரின் உத்தரவு ஆகியவை நமது ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும், அரசியல் சாசனத்தின் எண்ணற்ற விதிமுறைகளையும் மீறுவதாக உள்ளது.

நான் ஏன் இவ்வாறு சொல்கிறேன்? மக்களின் விருப்பம் என்பது - மற்ற விஷயங்களைப் போல - நமது அரசியல்சாசனத்தில் - இது நமது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாக இருக்கிறது.

இந்த முடிவு மாநிலத்தின் மக்களிடம் விரிவாகவும், உணர்வு ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

பாதுகாப்பு சேவைகள் முதல் இது பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களுடைய கருத்துகள் கேட்கப்படவில்லை.

சொல்லப்போனால், ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் விமானம் மூலம் அந்தப் பள்ளத்தாக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டிருப்பது முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. யாரும் எதிர்க்கத் துணியக் கூடாது என்ற தகவலைத் தெரிவிப்பதாக இது உள்ளது.

இதுபோன்ற முக்கியமான அரசியல்சாசன மாற்றம் செய்யும்போது, ஏற்கெனவே உருவாக்கப்பட்ட ஜனநாயக வழிமுறைகள் பின்பற்றப்படுவது வழக்கம்: தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் கலந்தாலோசனைகள் நடைபெற்று இதற்கான வரைவுகள் தயாரிக்கப்பட வேண்டும்; நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட வேண்டும்; சில காலம் இது விவாதிக்கப்பட வேண்டும்; மக்களின் எண்ணத்தை திரட்ட நாடாளுமன்றவாதிகளுக்கு அனுமதி தரப்பட வேண்டும்; இதன் பல்வேறு விளைவுகளை குடிமக்கள் பரிசீலனை செய்ய அனுமதி தரப்பட வேண்டும். அதன் பிறகு தான் அது மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையில் வாக்கெடுப்புக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

காஷ்மீர் பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

இருந்தபோதிலும், இந்த விஷயத்தில் எல்லா நடைமுறைகளுமே மீறப்பட்டுள்ளன. அரசியல்சாசன அமர்வின் மூலமாக மட்டுமே 370வது பிரிவு நீக்கப்பட வேண்டும் என்ற பாதுகாப்பைத் தரும் விதியையே மீறுவதாக குடியரசுத் தலைவரின் உத்தரவு உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு இது கலைக்கப்பட்டது.

மாறாக, இது மாநில சட்டப்பேரவைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். மாநிலத்தில் இப்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவதால், சட்டப்பேரவை இல்லை. குடியரசுத் தலைவர் உத்தரவின்படி, சட்டப்பேரவைக்கு மாற்றாக ஆளுநர் செயல்படலாம் என்று ஆளும்கட்சி செய்தித் தொடர்பாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஆளுநர் அப்படி அல்ல; அவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர், காஷ்மீரைச் சேராதவர். ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பத்தின் பிரதிநிதியாக அவர் இருக்க முடியாது.

அதேபோல, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைப்பு செய்வதாக மத்திய அரசு நோட்டீஸ் எதுவும் தரவில்லை. நாடாளுமன்ற விவாதப் பட்டியலில் அது இடம் பெறவில்லை.

முதலில் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, பின்னர் குறுகிய விவாதத்துக்குப் பிறகு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய படையினர்

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA

ஒரு மசோதாவை மாநிலங்களவைக்கு அனுப்புவதற்கு முன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட வேண்டும் என்ற ஜனநாயகக் கோட்பாடும் மீண்டும் மீறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவைக் கொண்டுவர உள்துறை அமைச்சர் முடிவு செய்தது கேள்விக்குரியது. 370வது பிரிவு என்பது, அந்த மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இணைவது தொடர்பான விதிமுறை அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் 370வது பிரிவு - பாதுகாப்பு, வெளிவிவகாரம் மற்றும் தகவல் தொடர்பு தவிர்த்த மற்ற அனைத்து முடிவுகளும் மாநில அரசைச் சார்ந்ததாகத் தான் இருக்கும் - என்று இந்திய அரசியல்சாசனத்தில் அதன் உட்பொதிந்த கருத்தாக உள்ளது.

அந்தப் பிரிவின் அம்சங்கள் நீக்கப்படுமானால், மாநிலத்தை இணைத்துக் கொண்டது பற்றிய கேள்விகளுக்கு இடம் தருவதாக அமைந்துவிடாதா?

அரசியல்சாசனத்தில் இருந்து 370வது பிரிவு நீக்கப்படவில்லை என்று சிலர் வாதம் செய்தாலும், மாநிலத்தை இணைப்பதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையிலான அரசியல் சாசன விதிகள் மீறப்படும்போது, அந்த ஒப்பந்தம் மற்றும் அரசியல்சாசனத்தை மீறுவதாக அது அர்த்தமாகும் என்று எதிர்தரப்பினர் வலுவான வாதத்தை முன்வைக்கிறார்கள்.

ஊடகங்களில் பெரும்பாலான செய்தியாளர்கள் இந்த விஷயங்களைப் புறந்தள்ளிவிட்டார்கள். இந்த முடிவால், 70 ஆண்டு கால பிரச்சினைகளுக்கு இந்தியா முடிவு கட்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும், மாநிலத்தில் புதிதாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளித்து, அதன் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்றும் செய்தியாளர்கள் கூறியுள்ளனர்.

முதலாவது விஷயமாக, 70 ஆண்டு என்று கூறுவது, மாநிலத்தை இணைக்கும் விஷயம் சம்பந்தப்பட்டது. அந்த சமயத்தில் உருவாக்கப்பட்ட பிரிவு 370, இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் மேலே விவரிக்கப்பட்ட தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

பாதுகாப்பு விஷயத்தைப் பொறுத்தவரையில், எல்லைக்கு அப்பால் இருந்தும், மாநிலத்துக்குள்ளும் புதிய அச்சுறுத்தல்கள் உள்ளது என்று அரசு கூறுவது சரியாக இருக்கலாம்.

ஆனால் அவர்களுடைய புலனாய்வுத் துறை தகவல் பற்றி எனக்கு தெரியவில்லை. அதுபற்றி எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. ராணுவ ஜெனரல்கள் அளவிலும்கூட ராணுவ மற்றும் / அல்லது நுட்பமான திட்டங்கள் பற்றி தெரிவிக்கப்படுவதில்லை.

ஆனால் நேரடி ஆட்சி என்பது அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டதாக இருக்கும் என்ற வாதமும் பொய்யாகிவிட்டது.

இந்திய படையினர்

பட மூலாதாரம், Getty Images

ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சிக் காலங்களில் இருந்த வரலாற்று ஆதாரங்கள் இதற்கு ஆதரவாக இல்லை. ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மக்கள் மத்தியில் எதிர்ப்பு மற்றும் கோபத்தை ஏற்படுத்துவதாக இது இருக்கும் - 11ல் 8 மாவட்டங்கள் முஸ்லிம் பெரும்பான்மையினராக உள்ள நிலையில் இது மிக தீவிரமான கோபத்தை ஏற்படுத்தும் என்ற இன்னொரு அம்சத்தை கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. தீவிரவாதிகளுக்குப் புகலிடம் அளித்தல், ஆதரவு தருதல் போன்றவை நடக்காதிருக்க வேண்டும்.

அந்த மாநிலத்தில் இந்தியத் தொழில்துறையின் முதலீடு மற்றும் வளர்ச்சியைப் பொருத்த வரையில், நமது பொருளாதாரம் ஏற்கெனவே சீரற்ற நிலையில் உள்ளது. ஜம்மு காஷ்மீரை விடுங்கள், அமைதியாக இருக்கும் வேறு மாநிலங்களில் முதலீடு செய்வதற்கே இந்தியாவில் கார்ப்பரேட் துறையினர் தயக்கம் காட்டும் நிலை தான் உள்ளது.

அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை மங்கச் செய்துவிடும் வகையில் முந்தைய அரசுகள் முயற்சி மேற்கொண்ட சமயங்களில் -இப்போதைய துணிச்சலான அளவுக்கு இல்லாத வகையில் நடவடிக்கை எடுத்த சமயங்களில் - மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

இதனால் 1990களில் ஆயுதப் போராட்டங்கள் அதிகரித்தன. அவற்றி சரி செய்வதற்கு 15 ஆண்டுகள் தேவைப்பட்டது. காஷ்மீரில் கலகம் உருவாகாமல் நமது ராணுவம் சில மாதங்களுக்கு பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால் எவ்வளவு காலத்துக்கு அப்படி செய்ய முடியும்? எவ்வளவு ராணுவத்தினரை அங்கே குவித்து வைக்க முடியும்?

2000 முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் காஷ்மீரி மக்களுக்கு புதிய நம்பிக்கையைத் தரும் அளவுக்கு முயற்சிகள் நடந்திருப்பதை வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன.

காஷ்மீர் விவகாரம்: ஆகஸ்ட் 5 - இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள்

பட மூலாதாரம், Getty Images

காஷ்மீரில் அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியது, மாநில அரசுக்கு அதிக அதிகாரங்கள் கொடுப்பது, நிர்வாகத்தை மேம்படுத்தி, பாதுகாப்பு வசதிகளை நவீனமாக்குவது, மக்களின் மீதான தினசரி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது என சூழ்நிலைகள் மேம்பட்டு வந்தன.

நாட்டின் பிற பகுதிகளில் மக்கள் மற்றும் ஊடகத்தின் ஆதரவை வைத்துப் பார்த்தால், இந்த உண்மைகளை பிரச்சாரத்தின் மூலம் தெரிந்தே புறந்தள்ளிவிட்டோம், மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட அந்த மாநில மக்களைப் பற்றி கவலைப்படாமல் இவ்வாறு செய்துவிட்டோம் என்று தெரிகிறது.

அடிப்படை ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் கோட்பாடுகளையும் நாம் புறந்தள்ளிவிட்டோம் என்பது மிகவும் வருத்தமான விஷயம். இது ஜம்மு காஷ்மீருக்கு மட்டுமான நடைமுறை என்று நாம் நம்பிவிட முடியுமா? நிச்சயமாக முடியாது.

நான் சொல்வது தவறு என்றால், யாராவது திருத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் இதுவரை இந்தக் கேள்விகளுக்கு அரசின் பிரதிநிதிகள் யாருமே நியாயமான முறையில் பதில் தரவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :