காஷ்மீர் விவகாரம்: சட்டப்பிரிவு 370 மசோதா ஒரு பகுதி நீக்கம் - 10 முக்கிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
காஷ்மீர் விவகாரத்தில் இன்று நடந்த முக்கிய சம்பவங்களை பத்து தகவல்களாக தொகுத்துள்ளோம்.
- ஜம்மு & காஷ்மீரில் இணையத் தொடர்பும், தொலைபேசித் தொடர்புகளும் நேற்று நள்ளிரவு முதல் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
- ஜம்மு & காஷ்மீர் சிறப்புரிமை இரண்டாவது திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார். அப்போது, ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்குவதற்கு இந்த மசோதா முன்மொழிவதாக அறிவித்தார். ஜம்மு & காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கான பரிந்துரையை முன்வைத்தார் அமித் ஷா. ஜம்மு & காஷ்மீருக்கு சட்டமன்றம் இருக்கும். லடாக் தனி யூனியன் பிரதேசமாக இருக்கும். அதற்கு சட்டமன்றம் இருக்காது.

பட மூலாதாரம், Getty Images
- "அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு வழங்கும் அதிகாரத்தின்படி, மாநில அரசின் ஒப்புதலோடு" குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவில் இதுவரை இந்தியாவில் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் இனி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அரசின் ஒப்புதலுடன் என்று சொல்லும்போது, அது இங்கு மாநில ஆளுநரைக் குறிக்கும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மசோதாவானது மாநிலங்களவையில் நிறைவேறியது.


- இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 61 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.
- திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்தன. பா.ஜ.க கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. பா.ஜ.க கூட்டணி கட்சியான சிப சேனா, சிரமோனி அகாலிதளம், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெவித்தன. பகுஜன் சமாஜ் கட்சி, பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை ஆதரவளித்தன.
- ஜம்மு மற்றும் காஷ்மீரில் அரசியல் சட்டப்பிரிவு 370தான் தீவிரவாதத்தின் ஆணி வேராக இருந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் குற்றஞ்சாட்டினார்.

- இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த திருச்சி சிவா, "தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்று கேள்வி எழுப்பினார். "இதை நான் எதிர்க்கிறேன். இந்த சட்டத் தீர்மானமும், மசோதாவும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேவையற்றது. நீங்கள் இந்த மாற்றங்களை உருவாக்க நினைத்தாலும், ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதலோடுதான் அதைச் செய்யவேண்டும். இப்போது அங்கு மக்களால் தேர்ந்தெடுத்த அரசு இல்லை. குடியரசுத் தலைவர் ஆட்சிதான் இருக்கிறது. எனவே, தொடர்புடைய மாநில மக்களின் கருத்து கேட்கப்படவில்லை" என்றார்.
- "தெற்கு சூடான், கிழக்கு தைமூர் போல காஷ்மீர் ஆகும். அப்படி ஆகக்கூடாது என்பதே எங்கள் நிலை. இந்தியாவுக்கு நிறைய எதிரிகள் உள்ளனர். தலையிடுவதற்கு அமெரிக்கா காத்திருக்கிறது. தெற்கு சூடான், கிழக்கு தைமூர் போல இது ஆக்கப்படும். ஜனநாயகம் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளது என்றார்" என்று உரையாற்றிய வைகோ இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- மாநிலங்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Chip Somodevilla
- "இந்தியா ஓர் ஆபத்தான விளையாட்டை விளையாடுகிறது. இது அந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவோடு இந்த பிரச்சனைக்கு தீர்வு கொண்டுவர பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயற்சித்தார். ஆனால், இன்று இந்த முடிவை எடுத்து நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது இந்தியா. இந்த நேரத்தில் காஷ்மீர் சகோதரர்களுக்கு பாகிஸ்தான் துணை நிற்கிறது. நாங்கள் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு அரசியல் ரீதியாகவும் மற்ற விதங்களிலும் ஆதரவு தெரிவிப்போம். சர்வதேச முஸ்லிம் சமூகம் இந்தியாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்," என்று பாகிஸ்தான் ஊடகமான துனியா நிறுவனத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
Article 370 ரத்து; ஜம்மு & காஷ்மீர் இரண்டாகிறது - நாடாளுமன்றத்தில் இன்று என்ன நடந்தது?
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








