மும்பை குறித்த கருத்தால் அண்ணாமலை மற்றும் ராஜ் தாக்கரே இடையே என்ன மோதல்?

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மற்றும் நவநிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே இடையே உருவான வார்த்தை மோதல்.
மும்பை மாநகராட்சி தேர்தல் பரப்புரை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தேர்தல் களத்தில் தமிழ்நாட்டிலிருந்து பரப்புரைக்கு சென்ற ஒரு தலைவரின் பேச்சு எப்படி பேசுபொருளானது?
தற்போது தேசிய அளவிலான அரசியல் விவாதமாக மாறியுள்ள, இந்த விவகாரத்தில் அண்ணாமலை, ராஜ் தாக்கரே தரப்பு பேசியது என்ன?
எங்கே, எப்போது தொடங்கியது இந்த சர்ச்சை?
மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை தமிழர்கள் வாழும் பகுதி உள்பட மும்பையில் ஒரு சில இடங்கள் கடந்த ஜனவரி 8ஆம் தேதி பரப்புரையில் ஈடுபட்டார்.
பரப்புரையின் போது ANI செய்தி நிறுவனத்திற்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், மும்பை மாநகரம் குறித்து பேசியிருந்தார்.
"மற்ற மாநிலங்களைப் போல அல்லாமல் மகாராஷ்டிராவில் மூன்று என்ஜின் அரசு நிர்வாகம் நடக்கிறது. மத்தியில் மோதி அரசும், மாநிலத்தில் ஃபட்னாவிஸ் அரசும், மும்பை மாநகராட்சியிலும் பாஜக நிர்வாகம் என மூன்று தளங்களிலும் பாஜகதான் உள்ளது. மும்பை, மகாராஷ்டிராவில் இருக்கும் ஒரு நகரம் கிடையாது. அது ஒரு சர்வதேச நகரம்," என்று அண்ணாமலை அந்த பேட்டியில் பேசினார்.

பட மூலாதாரம், Annamalai/X
இந்நிலையில், மும்பையின் தாதர் பகுதியில் நேற்று (ஜனவரி 11) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே பேசும் போது அண்ணாமலையின் கருத்துக்கு கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.
மேலும் அண்ணாமலை பெயருடன் ஓர் இனிப்பை ஒப்பிட்டு பகடி பேசினார்.
அவருடைய உரையில், " தமிழ்நாட்டிலிருந்து வந்தவர், மும்பைக்கும், மகாராஷ்டிராவிற்கும் இடையே இருக்கும் தொடர்பை கேள்வி எழுப்புகிறார். உங்களுக்கும் இந்த ஊருக்கும் என்ன தொடர்பு," என்றார்.
தொடர்ந்து, மும்பையில் வசிக்கும் தென்னிந்தியர்களை அவதூறாகப் பேசும் சொற்றொடரை மேற்கோள் காட்டினார்.
மும்பையில் வசித்த தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்களுக்கு எதிரான போராட்டத்தின் போது, சிவசேனா கட்சியின் நிறுவனரான பால் தாக்கரே இந்த வாசகத்தை 1960-70களில் அதிகம் பயன்படுத்தினார்.
மேலும் பேசிய ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிராவுக்கு வந்து இங்கு வாழும் மக்களின் அடையாளம், மொழி குறித்து பேசும் உரிமை யாருக்கும் இல்லை. மராத்தி மக்களின் சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்குபவர்களுக்கு தகுந்த பதில் அளிக்கப்படும்," என்றார்
அண்ணாமலை பதில்

பட மூலாதாரம், Annamalai/X
நேற்று ராஜ் தாக்கரே பேசியது சர்ச்சையான நிலையில், இன்று காலை மதுரையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை, தனது மும்பை உரை தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார்.
அவர் கூறும்போது, "காந்தி சிறந்த இந்தியர் என்று கூறினால் அவர் குஜராத்தை சேர்ந்தவர் இல்லை என்று ஆகிவிடுமா, அதே நோக்கத்துடன் தான் மும்பை ஒரு சர்வதேச நகரம் என்று கூறினேன். ஆனால் தேவையில்லாமல் அதை வைத்து வெறுப்பு பிரசாரம் செய்கின்றனர்," என்றார்.
தன் மீது முன்வைக்கப்படும் விமர்சனத்தை தாண்டி, தமிழர்களை தாக்கரேக்கள் விமர்சனம் செய்வது வருத்தம் அளிக்கிறது என்றார் அவர்.
ஆதித்ய தாக்கரேயின் விமர்சனம்
இந்த சர்ச்சை குறித்து பேசிய சிவசேனா(உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவரான ஆதித்ய தாக்கரே, "மகாராஷ்டிரா மக்களின் அடையாளம் மற்றும் மராத்தி மொழி குறித்து யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. அண்ணாமலையும், பாஜகவும் மகாராஷ்டிரா மக்களை அவமானப்படுத்தி விட்டார்கள்," என்றார்.
அண்ணாமலை பேச்சு தொடர்பாக ராஜ் தாக்கரேவின் விமர்சனம் தரம் தாழ்ந்த ஒன்றாக உள்ளது என்று ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் அதிமுகவைச் சேர்ந்த கோவை சத்யன்.
மேலும் பாஜக நிர்வாகிகளும் இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டு தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டுகின்றனர்.

தமிழர்களுக்கு எதிராக நடந்த போராட்டம்
ராஜ் தாக்கரே வாசகம், 1970-களில் தென்னிந்தியர்கள் மீது மும்பையில் நடந்த தாக்குதலின் போது பரவலாக எதிரொலித்த ஒன்று.
பால்தாக்கரே சிவசேனா கட்சியை 1966ஆம் தொடங்கிய போது, அவர் முன்வைத்த முதன்மை முழக்கம் 'மராட்டி மானூஸ்'. இதன் பொருள் 'மண்ணின் மைந்தர்கள்'.
வேலைவாய்ப்புகளில், தென்னிந்தியர்களைவிட மகாராஷ்டிரா மாநிலத்தின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அரசியல் களத்தில் இறங்கிய பால் தாக்கரே இதற்காகப் பல போராட்டங்களை நடத்தினார்.
தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்களை நோக்கிய அவரது வெறுப்பு பிரசாரத்தால், பல இடங்களில் புலம்பெயர் தொழிலாளர் மீது தாக்குதல் நடந்தது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












