'400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?' - உண்மை இதுதான்

பட மூலாதாரம், இந்து தமிழ்
இன்று முக்கிய தமிழ் நாளேடுகளில் வெளியான செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: '400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?'
சதுரகிரி மலையில் மஹாமேரு புஷ்பம் என்ற ஒருவகை பூக்கள் 400 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் புகைப்படங்கள் போலியானவை என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்குப் பிறகு மஹாமேரு புஷ்பம் என்ற அரியவகை பூக்கள், தற்போது பூத்துள்ளதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் ''முடிந்தவரை மற்றவர்களும் பார்த்திடப் பகிருங்கள்'' என்று குறிப்பிடப்பட்டு புகைப்படங்களுடன் பரப்பப்படுகின்றன.

பட மூலாதாரம், Facebook
"சமூக வலைதளங்களில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் என பரப்பப்படுபவை ஆர்க்கிட் வகை செடியின் மலர்கள் மற்றும் காசி தும்பை வகையைச் சேர்ந்த மலர்கள் போன்று உள்ளன. அதிலும் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. மஹாமேரு புஷ்பம் என்ற வகை மலர்களே கிடையாது. ஆர்க்கிட் வகை மலர்கள் வெளிநாட்டு ரகத்தைச் சேர்ந்த அலங்காரச் செடி. பொக்கே தயாரிப்பதற்கும், வீடுகளில் அழகுக்காகவும் இதை வளர்ப்பர்.
அதிக மழை பெய்து குளிர்ந்த காலநிலை நிலவும்போது, இவை நன்கு வளரும். காசி தும்பை மலர்ச் செடிகள் 3 மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பவை. உலகத்தில் எந்த இடத்திலும் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் செடிகளே இல்லை. அதிகபட்சம் குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பவை. அதுவே, ஏன் என்ற காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
ஆனால், அவை அனைத்து இடங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்காது. சில இடங்களில் மட்டும் ஆங்காங்கே பூக்கிறது. ஒரே நேரத்தில், அதிகளவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிப்பிட்ட இடங்களில் பூப்பதால், குறிஞ்சி மலர் 12 ஆண்டு களுக்கு ஒரு முறைபூப்பதாக வரலாறு பதிவாகிவிட்டது. வதந்திகளை சுவாரசிய மாக்க படங்களை போலியாக போட்டோ ஷாப் செய்து சிலர் திட்டமிட்டு பரப்புகின்றனர்" என்று காந்தி கிராமப் பல்கலைக்கழக உயிரியியல் துறை உதவிப் பேராசிரியரும், தாவரவியல் ஆர்வலருமான ராமசுப்பு கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

'நீதிபதிகளுக்கும் வகுப்பெடுத்து அசத்தும் பார்வையற்ற பேராசிரியர்'
செல்போன், லேப்-டாப், பவர்-பாய்ன்ட் என தொழில்நுட்ப உதவியுடன் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி நீதிபதிகளுக்கும் பல்வேறு சட்டங்கள் குறித்து வகுப்புகளை எடுத்து அசத்தி வரு கிறார் பார்வையற்ற பேராசிரியரான முனைவர் எஸ்.ஏழுமலை என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், இந்து தமிழ்
"பேராசிரியர் ஏழுமலையின் தந்தை சர்க்கரை, தாயார் லட்சுமி விவசாயிகள். 3 வயதாக இருக்கும்போது மூளைக்காய்ச்சலால் பார்வையை பறிகொடுத்த ஏழு மலை, தனது விடாமுயற்சியால் இன்று சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர் மட்டுமின்றி டெல்லி மற்றும் பெங்களூரு தேசிய சட்டக் கல்லூரிகளின் கவுரவ ஆசிரியராக உள்ளார். தேசிய உயிரி பல்வகைத் தன்மை (பயோ-டைவர்சிட்டி) ஆணையத்தின் நிபுணர்குழு உறுப்பினர், மாநில வாரிய உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார். ஐநா சபை உடன்படிக்கைகளுக்கும் சட்டநிபுணராக திகழ்ந்து வருகிறார்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி : 'ஊடகங்கள் அதிகார மையங்களின் பக்கம் நிற்கக் கூடாது'
பிரிவினைவாத சக்திகளுக்கு ஊடகங்கள் துணை போகக்கூடாது என்று குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் தில்லியில் "தி மார்னிங் ஸ்டாண்டர்டு' என்ற ஆங்கிலப் பத்திரிகை அறிமுக விழா நேற்று டெல்லியில் நடந்தது.

பட மூலாதாரம், Getty Images
அதில் பேசிய பிரணாப் முகர்ஜி, " இந்திய ஊடகத் துறைக்கு மிகப் பெரிய பாரம்பரியம் உள்ளது. இந்தியாவில் 70,000 நாளிதழ்கள் வெளியாகின்றன. ஒரு நாளில் மட்டும் சுமார் 100 மில்லியன் நாளிதழ்கள் விற்பனையாகின்றன. இந்தியாவில் 400 செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளன. இந்திய ஊடகத் துறையின் மதிப்பு ரூ. 1.5 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 13 சதவீதம் அதிகமாகும்.
ஊடகத்தைவிட ஐனநாயகத்துக்குப் பங்களிப்பு வழங்கும் வேறு துறையில்லை. இந்திய ஊடகத் துறை சுதந்திரமானது, கருத்துச் செறிவுள்ளது, அறிவு சார்ந்தது. இந்தியாவில் 1.3 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் 22 மொழிகளைப் பேசுகிறார்கள்;29 மாநிலங்களில் வாழ்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஊடகங்கள் துணை போகக்கூடாது. ஊடகங்கள் அதிகார மையங்களின் பக்கம் நிற்கக் கூடாது. மாறாக அவர்கள் மக்களின் பக்கம் நிற்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை ஊடகங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்." என்று அவர் பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


தினத்தந்தி: 'மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு'

பட மூலாதாரம், Getty Images
தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி யிலும் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"வங்கக்கடலில் உருவான 'கஜா' புயல் தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டது. புயல்-மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் முழுமையாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
இந்தநிலையில் வங்ககடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது." என்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'கடலில் கொட்டிய இரண்டு டன் எண்ணெய்'
கடலில் எண்ணெய் கொட்டிய நிகழ்வு மீண்டும் சென்னை காமராஜர் துறைமுகத்தில் நடந்துள்ளதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறும் இந்நாளிதழ் செய்தி, இதனை சரி செய்ய அனைத்து துறைகளும் களத்தில் இறங்கி உள்ளதாகவும், எண்ணெயை உறிஞ்சும் அட்டைகள் கொண்டு எண்ணெய் அகற்றப்படும் என்றும் காமராஜர் துறைமுகத்தின் தலைவர் பி ரவீந்திரன் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












