'மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க உறுப்பினர்களை விலை பேசுகிறார் அவர் மகன்'

மஹிந்த ராஐபக்ஷ

பட மூலாதாரம், படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI

மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினைப் பெற, ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, எதிரணி உறுப்பினர்களை 3 மில்லியன் அமெரிக்க டாலர் வரையில் விலை பேசி வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தனது ட்விட்டர் பதிவொன்றில் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையினை காட்டுவதற்கு, திங்கட்கிழமை வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைபேசும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ இதனை தலைமை தாங்கி நடத்துவதாகவும் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தங்கள் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் 3 மில்லியன் அமெரிக்க டாலர் வரையில், இதற்காகப் பேரம் பேசப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள, தெரிவித்துள்ளார்.

இலங்கை

பட மூலாதாரம், Twitter

இதேவேளை, ராஜபக்ஷக்களின் இந்த செயற்பாடு தொடர்பில் வெட்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி அந்தப் பதிவில், மஹிந்த ராஜபக்ஷவை 'போலி பிரதமர்' என, மங்கள சமரவீர தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

பட மூலாதாரம், Twitter

இந்த நிலையில், மங்கள சமரவீரவின் மேற்படி குற்றச்சாட்டுக்கு ட்விட்டரிலேயே பதிலளித்தள்ள மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ, தன்னை அரசியலுக்கு வெளியில் வைத்து பார்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

"தற்போதைய ரக்பி போட்டிகளில் நான் மிகவும் 'பிஸி'யாக இருக்கிறேன். அதனால், அரசாங்கத்துக்காக 'டீல்' பேசுவதற்கு எனக்கு நேரமில்லை. எனவே, எனது பெயருக்கு தயவு செய்து அவதூறு ஏற்படுத்த வேண்டாம்," என்றும் யோஷித ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: